இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்கம்

Valliappa_padam

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (1922 – 1989)துவங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் இவரது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 

புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருக்கிறார்.   

இவர் குழந்தைகளுக்காக 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி யிருக்கிறார். மேலும்  குழந்தைகளுக்கான சிறுகதைகள், விடுகதை விளையாட்டுகள், விலங்கியற் கட்டுரைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கேள்வி பதில்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.    இவர் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதால், இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம். 

முதலில் வை கோவிந்தன் அவர்களின் ‘சக்தி’ இதழில் காசாளராகச் சேர்ந்த இவர், அதிலேயே எழுதத் துவங்கினார்.  பின்னர் இந்தியன் வங்கிப் பணியில் சேர்ந்து, அதில்  பணியாற்றியபடியே, ‘பாலர் மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய பத்திரிகைகளில் கௌரவ ஆசிரியராகவும், ‘பூஞ்சோலை’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.  பணி ஓய்வுக்குப் பிறகு, ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராகவும், சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 

இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக நாமும், நம் குழந்தைகளும் பாடி மகிழும் பெரும்பான்மையான பாடல்கள், இவர் இயற்றியவையே ஆகும்.  ‘மாம்பழமாம் மாம்பழம்’, ‘வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு’  போன்ற, இவருடைய பல பாடல்களைப் பாடி வளராத தமிழ்க் குழந்தைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இவை பிரபலமானவை.  

‘இன்றைய குழந்தைகளே எதிர்கால இந்திய சிற்பிகள்’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக,

“ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் சிறுவரே

நாடு காக்கும் தலைவராய்

நாளை விளங்கப் போகிறார்”   என்று இவர் எழுதிய பாடல் மாணவர்களிடையே மிகவும் பிரபலம்!

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த, உச்சரிக்கத் தோதான எளிய சொற்களைக் கொண்டு, சின்ன சின்ன வாக்கியங்களில் ஓசை, சந்த நயத்துடன் பாடல்களை இயற்றுவதில், இவர் திறன் மிக்கவர்!

குழந்தைக்   கவிஞர்   எனத் – தமிழ்த்தாய்

குலவிடும் தவப்புதல்வன்

தெள்ளிய   பாவாணன் – அழ

வள்ளியப்   பாவென்னும்

அன்புள   என்   நண்பன் – கற்றுணர்ந்(து)

அடங்கிய   மனப்பண்பன்

குழந்தை எழுத்தாளர்  சங்கம்

கூட்டி   வளர்த்தவனாய்

சிறப்புள  எழுத்தாளர் –  பலர்

தோன்றிட  வழிசெய்தோன்”  

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள்,

என்று இவரைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

குழந்தைகளுக்கான படைப்புகளைக் ‘குழந்தை இலக்கியம்’ என்ற பெயரில் தனியாகப் பிரித்து, அதை உயிர்ப்பித்தவர் கவிஞர் அழ.வள்ளியப்பா என்பதால், ‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படுகின்றார்.  இவரது காலம் ‘தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம்’ எனப் போற்றப்படுகின்றது.

முதன்முதலில் தமிழில் சிறார் இலக்கியம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவை சிறுவர் இதழ்களே.  1840 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரச்சார சபையால் ‘பாலதீபிகை’ என்ற இதழ் நாகர்கோவிலில் துவங்கப்பட்டது.

இதற்குப் பிறகு வெளிவந்த ‘சிறுபிள்ளை நேசத் தோழன்’, ‘பாலியர் நேசன்’ ஆகியவை தொடர்ந்து வெளிவராமல் நின்றுவிட்டன.  1891 ஆம் ஆண்டு பெரியவருக்கான இதழ்களில் சிறுவர் பகுதி துவங்கப் பட்டது   ‘விவேக சிந்தாமணி’, ‘ஜன விநோதினி’, ‘தமிழர் நேசன்’ ஆகிய இதழ்களில் சிறுவர் பகுதி இருந்தது.  1932 ஆம் ஆண்டு கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில், சிறுவருக்காகச் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன.

1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் இராயவரம் என்ற ஊரிலிருந்து ‘பாலர் மலர்’ என்ற பெயரில் குழந்தைகள் இதழ் வெளிவரத் துவங்கியது.  ‘பாலர் மலர்’ இதழுக்குப் பிறகு ‘சங்கு’, ‘டமாரம்’ வெளிவரத் துவங்கின. 

இந்த மூன்று இதழ்களுக்கும் கெளரவ ஆசிரியராக இருந்த அழ.வள்ளியப்பா, அக்காலக்கட்டத்தில் வெளிவந்த எல்லாச் சிறுவர் இதழ்களின் ஆசிரியர்களையும் ஒருங்கிணைக்க விரும்பினார்.   குழந்தைக்காக எழுதும் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை 1950 ஆம் ஆண்டு நிறுவி, எட்டு குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்திச் சாதனை படைத்தார்.

‘குழந்தை இலக்கியம் படைக்க வேண்டும்; குழந்தைகள் படிக்க வழி செய்ய வேண்டும்; குழந்தை இலக்கியம் வளர்ச்சி பெற வேண்டும்’ போன்ற உயர்ந்த நோக்கங்களுக்காகத் துவங்கப்பட்ட இச்சங்கத்தின் தலைவராக இவர் 1955 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1957 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டது. 1957 முதல் 1987 வரை 664 குழந்தை இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன.  அதே காலக்கட்டத்தில் தமிழில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் ஐந்தில் ஒரு பகுதி, இச்சங்கத்தின் வாயிலாக வெளிவந்தன என்ற தகவலை, முனைவர் தேவி நாச்சியப்பன் தாம் எழுதிய ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்(வரலாறு)’ என்ற நூலில் எழுதியிருக்கின்றார். 

முனைவர் தேவி நாச்சியப்பன் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகளாவார்.  சிறார் இலக்கியத்துக்கு இவர் ஆற்றியிருக்கும் சிறப்பான பங்களிப்புக்காக 2019 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது இவருக்குக் கிடைத்தது.

 “1950ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கம் தோன்றிய காலத்திலே குழந்தைகளுக்கும் எழுத்தா? அதை எழுதுகின்றவர்களும் எழுத்தாளர்களா? அவர்களுக்கும் ஒரு சங்கமா? என்று பலர் எண்ணியிருக்கலாம்.  ஆனால் குழந்தைகளுக்கும் தனிப்பட்ட இலக்கியம் வேண்டும்; குழந்தை எழுத்தாளர்களும் தனிப்பட்ட படைப்பாற்றல் வாய்ந்தவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள் என்று கருதும்படியாகச் சென்ற 22 ஆண்டுகளில் இந்தச் சங்கம் செய்திருப்பதை எண்ணி, அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்”  என்று குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம் தொகுத்தவரும் சிறார் இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ம.ப.பெரியசாமித் தூரன்  கூறியுள்ளார்..

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் அவர் பாடலிது:-

“அப்பா  வாங்கித்  தந்தது

அருமையான புத்தகம்

அதில்   இருக்கும்  படங்களோ

ஆகா மிக அற்புதம்!

யானை உண்டு குதிரை உண்டு

அழகான முயலும் உண்டு

பூனை உண்டு எலியும் உண்டு

வீரமான புலியும் உண்டு

குயிலும் உண்டு குருவி உண்டு

கொக்கரக்கோ கோழி உண்டு

மயிலும் உண்டு மானும் உண்டு

வாலில்லாத குரங்கும் உண்டு

பந்து உண்டு பட்டம் உண்டு

பம்பரமும் கூட உண்டு

இன்னும் அந்தப் புத்தகத்தில்

எத்தனையோ படங்கள் உண்டு”

குழந்தை இலக்கியத்துக்குச் சிறப்பான பங்களித்த கவிஞர் அழ.வள்ளியப்பாவின் நினைவைப் போற்றும் வகையில், அவரது சில பாடல்களையும், கதைகளையும் எங்கள்சுட்டி உலகம்’ யூடியூப் சானலில் பதிவேற்றியுள்ளோம்.  உங்கள் வீட்டுச் சுட்டிகளுடன் கேட்டு மகிழுங்கள். 

Share this:

2 thoughts on “இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்கம்

    1. தங்கள் பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

Comments are closed.