அதென்ன பேரு, கியாங்கி டுயாங்கி!

Kiyanki_pic

56 பக்கமுள்ள இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 9 கதைகள் உள்ளன. இக்கதைகளில் தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே, இவற்றில் முக்கிய கதாபாத்திரங்கள்.

மேலும் இவற்றில் விலங்குகளும், பறவைகளும் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி, உதவிசெய்து கொள்கின்றன. அவற்றுக்கு உயிரில்லாத மேகங்களும், அவ்வப்போது உதவுகின்றன.  சர்க்கஸ் கூண்டுக்குள் அடைபட்ட யானை குட்டியை, ஒரு பறவை விடுவிக்கின்றது.  அதை மேகம் தூக்கிக் கொண்டு போய், அதன் காட்டில் விடுகின்றது. அம்மாவிடமிருந்து பிரிந்து “எனக்கு அம்மா வேணும்” என்று அழும் பூனை குட்டியைப் பென்குவின் பறவைகள், மிகவும் சிரமப்பட்டு அம்மா பூனையிடம் கொண்டு சேர்க்கின்றன. 

முதல் கதையில் மாற்றுத்திறனாளி குழந்தையை, முக்கிய பாத்திரமாக அறிமுகப்படுத்தி, வானவில்லின் வண்ணமகளாக வானில் சிறகடித்துப் பறக்க வைத்திருப்பது மிகவும் சிறப்பு. தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் குறித்த கதைகள், மிகவும் குறைவு.

தலைப்புகள் குழந்தைகளைக் கவரும் விதத்தில், “தும்தும் நம்நம் சாகரா”, “அதென்ன பேரு கியாங்கி டுயாங்கி”, “ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி” என வினோதமாகவும் ரைமிங்காகவும் அமைந்துள்ளன.   இந்நூலின் தலைப்புக் கதையான  “அதென்ன பேரு கியாங்கி டுயாங்கி” வித்தியாசமான புதுமையான கற்பனை.  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.   “அதென்ன கியாங்கி டுயாங்கி?” என்பதை நூலை வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதீத கற்பனையும், மாயாஜாலமும் நிறைந்த ஃபான்டஸி கதைகள் என்பதால், குழந்தைகளின் கற்பனை எல்லைகளை இவை விரிவுபடுத்தி, வாசிப்பு மகிழ்ச்சியை வழங்கக் கூடியவை.

6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், வாசிப்பதற்கேற்ற எளிய நடையில் அமைந்துள்ள சுவாரசியமான சிறார் கதைகள்.  அவசியம் இந்நூலை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்விழியன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89.  செல் +91 91765 49991
விலை₹ 50/-
Share this: