பெ.தூரன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெரியசாமித் தூரன், தமிழ் இலக்கியத்துக்கும், சிறார் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மகத்தான சாதனைகளாக மதிக்கப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டும் தமிழில் முதன்முதலாக வெளியிடப்பட அரும்பணியாற்றியவர் இவரே. கவிதை,சிறுகதை,கட்டுரை, நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத்திறமை கொண்டவர்.
‘ஓலைக்கிளி’, ‘நீலத்தாமரை’, ‘நிலாப்பாட்டி’, ‘கடக்கிட்டி முடக்கிட்டி’ என்ற நான்கு சிறுவர் நெடுங்கதைகள், இத்தொகுப்பில் உள்ளன.
முதல் கதை ஓலைக்கிளி உழைப்பின் உயர்வை எடுத்துரைக்கின்றது. ஊர் ஊராகச் சென்று கூடை, முறம் பின்னி விற்கும் ஒரு கூட்டத்தில் ஒரு பாட்டியும், தங்கவேல் எனும் பெயர் கொண்ட அவளுடைய பேரனும் இருக்கின்றனர். பனையோலையால் பாட்டி செய்த கிளி பொம்மையை வாங்க குழந்தைகள் போட்டி போடுகிறார்கள். நல்ல வருமானம் கிடைக்கிறது..ஆனால் பேரனுக்குப் பொம்மைகளை விற்பது பிடிக்கவில்லை. எல்லாப் பொம்மைகளும் தனக்கே வேண்டுமென்று அழுது அடம் பிடிக்கிறான். பொம்மை சோறு போடாது எனப் பாட்டி அவனிடம் சொல்கிறாள். அதற்குப் பிறகு என்ன ஆகிறது என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்.
நீலத்தாமரை கதையில் ஒரு பொற்றாமரை குளத்தில் அதிசய நீலத்தாமரை பூக்கிறது. அரசி காவலுக்கு ஆள் போட்டும், தினமும் அது திருட்டுப் போகின்றது. திருடனைப் பிடிக்க வேண்டும்; இல்லையேல் பாதாளச் சிறையில் அடைப்பேன் என அரசி, மகன்களை ஒவ்வொருவராகக் காவலுக்கு அனுப்புகிறாள். இரண்டு மகன்கள் திருட்டைத் தடுக்க முடியாமல், பாதாள சிறையில் அடைபடுகின்றனர். கடைசியாக மூன்றாமவன் விக்கிரமன் காவலுக்கு வருகின்றான். அவன் திருடனைப் பிடித்தானா? பூவைத் தினமும் பறிப்பவர் யார்? அரசி ஏன் தன் மகன்களைப் பாதாள சிறையில் அடைக்கிறாள்? என்று வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். சிறுவர்க்குச் சுவாரசியமான கதை.
இதிலுள்ள நிலாப்பாட்டி சிறப்பான கதை. இதிலும் ஒரு ஏழை பாட்டி இருக்கின்றாள். அவள் எப்போதும் ராட்டினம் சுற்றிக் கொண்டிருப்பதால் எல்லோரும் நிலாப்பாட்டி என்று அழைக்கின்றனர். அடிபட்ட ஒரு குருவியை அவள் காப்பாற்றுவதால், குருவி அவளிடம் பாசமாக இருக்கின்றது. வயதாகி நோயுற்று, அவள் பட்டினி கிடக்கும் போது அவள் சாப்பாட்டுச் செலவுக்காகத் தினம் ஒரு தங்கக் காசைக் கொண்டுவந்து கொடுக்கிறது. அதைப் பாட்டி செலவழித்தாளா? அதை என்ன செய்தாள்? எங்கிருந்து அந்தக் காசைக் குருவி கொண்டு வருகிறது? என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள். சிறுவர்க்கு வாசிக்கப் பிடிக்கும்.
கடக்கிட்டி முடக்கிட்டியில் கால் வளைந்த கழுதை புத்திசாலியாகப் படைக்கப்பட்டுள்ளது. உடல் ஊனம் ஒரு குறையில்லை என்பதையும் இக்கதை விளக்குகின்றது. இவரது படைப்புகள் யாவும் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளதால், இக்கதைகளை இணையத்தில் இலவசமாகவும் வாசிக்கலாம்.
வகை | சிறுவர் கதை மின்னூல் |
ஆசிரியர் | பெரியசாமித் தூரன் |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08CTDNJYM |
விலை | ₹ 49/- |