அன்புடையீர்! வணக்கம்.
சுட்டி உலகம் துவங்கி ஒரு மாதம் முடிவதற்குள், இரண்டாயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.
இம்மாதச் சிறப்புப் பதிவாகச் சிறார் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாளரான உதயசங்கர் அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. வாசிப்பின் அவசியம் பற்றியும், தமிழ், மலையாளச் சிறார் இலக்கியச் சூழல் பற்றியும், மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள அவசியம் வாசியுங்கள். அவருடைய ஆதனின் பொம்மை, மாயக்கண்ணாடி ஆகிய நூல்களைப் பற்றிய விபரங்களைச் சுட்டி உலகத்தில் புத்தகப் பகுதியில் கொடுத்திருக்கிறோம்.
கடந்த மாதம் ஏறக்குறைய நாற்பது தமிழ்ச் சிறார் நூல்களை அறிமுகம் செய்திருந்தோம். தமிழ் நூல்கள் மட்டுமின்றி, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்காக, அவ்வப்போது, ஒருசில பிரபலமான ஆங்கில நூல்களையும் அறிமுகம் செய்யலாமென்று முடிவு செய்து, இந்திய ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின் பரிசுபெற்ற முதல் நாவல் ‘The Room on the Roof’ குறித்து எழுதினோம்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக, நாடெங்கும் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. நமக்கு மிகவும் நெருங்கிய உறவுகள், தெரிந்த நண்பர்கள் என ஏராளமான நபர்களை, வயது வித்தியாசமின்றி இந்தக் கொரோனா பலிகொண்டுவிட்டது. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாகப் பள்ளி செல்ல முடியாமலும், நண்பர்களைச் சந்திக்க முடியாமலும், குழந்தைகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். மூன்றாவது அலை வரும் என்ற அச்சத்தின் காரணமாக, இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பும் இல்லை.
வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளைச் சமாளிக்க பெற்றோருக்கு இப்போதிருக்கும் ஒரே விஷயம், அவர்களை நாள்முழுக்கத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதும், கைபேசியில் விளையாட விடுவதும் தான். கணினி திரையை அதிக நேரம் பார்ப்பது, குழந்தைகளின் கண்களையும், மூளை செயல்திறனையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் பெற்றோரின் கண்காணிப்பில்லாமல் அவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போது, வயதுக்கு மீறிய பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்க்கக்கூடிய ஆபத்தும், சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களை நம்பி ஏமாறும் அபாயமும் இருக்கின்றன.
கணினி, கைபேசி போன்ற மின்னணு திரைகளிலிருந்து, சிறுவர்களின் கவனத்தைத் திசை திருப்ப, பெற்றோருக்கு இருக்கும் ஒரே மாற்று வழி வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவது தான். வாசிப்பின் சுவை அறிந்துவிட்டால், குழந்தைகளுக்கு வேறு எதிலும் நாட்டம் செல்லாது. பொழுது போவதில் பிரச்சினையேயிருக்காது. வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு எப்படி அறிமுகப்படுத்த வேண்டும்? அதற்குப் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள, சுட்டி உலகத்தில் ஏற்கெனவே பெற்றோர் பக்கம் வெளியாகியிருக்கும் சிறப்புப் பதிவுகளை வாசியுங்கள்.
லாக்டவுன் சமயத்தில் புத்தகங்கள் வாங்குவது சிரமம் என்பதால் இம்மாதமுதல் கிண்டில் மின்னூல்களையும், அறிமுகம் செய்யவுள்ளோம். அமேசான் கிண்டில் ‘ஆப்’பை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி இருக்கின்றது. கிண்டில் நூல்களின் விலை, அச்சு நூல்களை விட மிகவும் குறைவு தான். மாதம் ரூ 169/- கட்டிப் பல புத்தகங்களை எடுத்து வாசிக்கும் கிண்டில் அன்லிமிடெட் வசதியும் இருக்கின்றது. அது மட்டுமின்றி அவ்வப்போது அமேசானில் சில நூல்கள் இலவசமாகவும் கிடைக்கும். அவற்றைத் தரவிறக்கி வைத்துக் கொண்டு, முடிந்த போது வாசிக்கலாம்.
குழந்தைகளின் மன அழுத்தம் தீர, பெற்றோர் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி, கதைப்புத்தகங்கள் வாங்கித் தருவது தான். கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் இன்பம்,துன்பம் மகிழ்ச்சி, நகைச்சுவை, கிண்டல் போன்ற உணர்வுகளைக் குழந்தைகள் கற்பனையில் தாங்களே அனுபவித்து விடுவதால், உளவியல் ரீதியாக பலம் பெறுகிறார்கள். அவர்களது இந்த அகவுலகு கற்பனை அனுபவங்கள் புறவுலகில் கொரோனா ஏறுபடுத்தியிருக்கும் மன அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவித்து, ,உளவியல் சமநிலையைத் தரும்.
எல்லோரும் கொரோனா தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக் கொண்டு . இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.
மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்,
அன்புடன்,
ஆசிரியக்குழு.