இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள்! புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருப்பதால் ‘குழந்தை இலக்கியத்தின் பிதாமகன்’ என்றழைக்கப்படுகின்றார். இவரது காலம் ‘தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம்’ எனப் போற்றப்படுகின்றது.
இவர் முதலில் வை கோவிந்தன் அவர்களின் ‘சக்தி’ இதழில் காசாளராகச் சேர்ந்து, அதிலேயே எழுதத் துவங்கினார். பின்னர் இந்தியன் வங்கிப் பணியில் சேர்ந்து, அதில் பணியாற்றியபடியே, ‘பாலர் மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய பத்திரிகைகளில் கௌரவ ஆசிரியராகவும், ‘பூஞ்சோலை’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராகவும், சில ஆண்டுகள் பணியாற்றினார்.
1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் இராயவரம் என்ற ஊரிலிருந்து ‘பாலர் மலர்’ என்ற பெயரில் குழந்தைகள் இதழ் வெளிவரத் துவங்கியது. ‘பாலர் மலர்’ இதழுக்குப் பிறகு ‘சங்கு’, ‘டமாரம்’ வெளிவரத் துவங்கின. இந்த மூன்று இதழ்களுக்கும், கெளரவ ஆசிரியராக இருந்த இவர், அக்காலக்கட்டத்தில் வெளிவந்த எல்லாச் சிறுவர் இதழ்களின் ஆசிரியர்களையும், ஒருங்கிணைக்க விரும்பினார். குழந்தைக்காக எழுதும் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துக் ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை 1950 ஆம் ஆண்டு நிறுவி, எட்டுக் குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்திச் சாதனை படைத்தார்.
‘குழந்தை இலக்கியம் படைக்க வேண்டும்; குழந்தைகள் படிக்க வழி செய்ய வேண்டும்; குழந்தை இலக்கியம் வளர்ச்சி பெற வேண்டும்’ போன்ற உயர்ந்த நோக்கங்களுக்காகத் துவங்கப்பட்ட இச்சங்கத்தின் தலைவராக இவர் 1955 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். குழந்தை எழுத்தாளர் சங்கம் 1957 ஆம் ஆண்டு முதல், குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டது. 1957 முதல் 1987 வரை, 664 குழந்தை இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன. அதே காலக்கட்டத்தில் தமிழில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் ஐந்தில் ஒரு பகுதி, இச்சங்கத்தின் வாயிலாக வெளிவந்தன என்ற தகவலை, முனைவர் தேவி நாச்சியப்பன் தாம் எழுதிய ‘குழந்தை எழுத்தாளர் சங்கம் (வரலாறு)’ என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.
அழ.வள்ளியப்பா குழந்தைகளுக்காக 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியிருக்கிறார். மேலும் குழந்தைகளுக்காகக் சிறுகதை, விடுகதை விளையாட்டு, விலங்கியற் கட்டுரை, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கேள்வி பதில் போன்ற பல வகைமைகளில் எழுதியுள்ளார். இவர் படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதால், இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக நாமும், நம் குழந்தைகளும் பாடி மகிழும் பெரும்பான்மையான பாடல்கள், இவர் இயற்றியவையே. இவரெழுதிய பாடல்கள் இனிய ஓசையும் சந்தமும் கொண்டு குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய மொழியில் அமைந்தவை. ‘மாம்பழமாம் மாம்பழம்’, ‘வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு’ போன்ற, இவருடைய பல பாடல்களைப் பாடி வளராத தமிழ்க் குழந்தைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அவை பிரபலமானவை.
அழ.வள்ளியப்பா அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.
