தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ்க் குழந்தைகளுக்கு வயதுவாரியாக வெளியிடப்பட்டுள்ள சிறார் கதை நூல்களில் இதுவும் ஒன்று.
இளங்கோவும் மணியும் ஆறாம் வகுப்பு மாணவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இளங்கோ மிகவும் குண்டாக இருப்பான். அதனால் அவன் வகுப்பு மாணவர்கள் அவனைத் தினமும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். அதனால் மிகவும் மனவேதனையடைந்த இளங்கோவை நண்பன் மணி அவ்வப்போது ஆறுதல் சொல்லித் தேற்றுகிறான்.
இளங்கோவுக்கு நன்கு பாடக் கூடிய குரல்வளமும் சங்கீத ஞானமும் இருந்தது. எனவே மணி அவனைப் பள்ளி ஆண்டுவிழாவில் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்கிறான். அந்தப் போட்டியில் இளங்கோ முதல் பரிசு வாங்குகிறான். அவன் பாடியதைக் கேட்ட பிறகு எல்லோரும் அவனைப் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். அவன் தனித்திறமை வெளிப்பட்ட பிறகு அவனை யாரும் கிண்டல் செய்வதில்லை.
யாரையும் உருவகேலி செய்யக் கூடாது என்ற கருத்தை நீதி போதனையாக அல்லாமல் கதைவழியே வாசிக்கும் சிறார் மனதில் பதியவைக்கும் கதை. வழவழ தாளில் வண்ணப்படங்களுடன் அமைந்த இந்த நூல் 9-11 வயது சிறார்க்கானது.
வகை | சிறார் கதை |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு:- | தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06. |
விலை | ரூ 70/-. |