இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. சிறுமியின் கனவாக விரியும் ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ என்ற இந்நூலின் தலைப்பாக அமைந்த முதல் கதை, மாயா ஜாலமும் அதீத கற்பனையும் சேர்ந்து குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இக்கதையில் யானை பறக்கின்றது; பூக்கள் பேசுகின்றன; சிறுமி நிலா கன்னத்தில் முத்தம் கொடுக்கின்றாள். சிறந்த கற்பனைக்கு இக்கதை ஓர் எடுத்துக்காட்டு! ‘கற்பனைக் காடு’ என்பதும், லாஜிக் இல்லாத அதீத கற்பனையுடன் கூடிய குழந்தைகள் விரும்பக் கூடிய இன்னொரு கதை.
‘தலையூரில் தரை இறங்கிய பேன்’ வித்தியாசமான கற்பனையுடன் கூடிய கதை. இறகுப் பந்து செவ்வாய்க் கிரகத்துக்குச் சென்று திரும்புவதைச் ‘சிறகு முளைத்த இறகுப் பந்து’ கதை சொல்கிறது. நாம் கணினியில் பயன்படுத்தும் மெளஸ், எலியூருக்குச் சென்று மற்ற எலிகளுடன் சேர்ந்து செய்யும் சாகசத்தை ‘எலிகள் கொண்டாடிய சுதந்திர தினம்’ கதை பேசுகின்றது. இது புதுமையான கற்பனை!
‘பறவைகள் நடத்திய பள்ளிக்கூடம்’ என்ற கதையில், குயிலியின் பாடப்புத்தகத்தில் தன் படத்தைப் பார்த்த மயிலுக்குத் தானும் பள்ளி சென்று படிக்க வேண்டுமென்று ஆசை வருகின்றது. காட்டில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு, விலங்குகளும், பறவைகளும் படித்து முடித்துப் பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகின்றது.
‘ஒரு கிராமத்துப் பயணம்’ கதையை வாசிக்கும் சிறுவர்கள் கிராம வாழ்க்கைச் சூழல் பற்றியும், வேளாண்மை பற்றியும் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்வார்கள். ‘வாக்கிங் போன மரங்கள்’ கதை மரங்களை வெட்டக் கூடாது என்ற செய்தியைக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கும். ‘மன்னனின் விபரீத ஆசை’ மெல்லிய நகைச்சுவை நிரம்பிய கதை.
மேலும் இத்தொகுப்பில் பட்டாம்பூச்சிகள் தீபாவளி கொண்டாடுகின்றன; விலங்குகள் பொங்கல் கொண்டாடுகின்றன. இப்படி வித்தியாசமான கருக்களுடன் அதீத கற்பனையும் சேர்ந்து அமைந்த இக்கதைகள் 6-12 வயதினர் ரசித்து வாசிக்க ஏற்றவை.
வகை | சிறார் கதைகள் |
ஆசிரியர் | உமையவன் |
வெளியீடு:- | பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14 |
விலை | ரூ 60/- |