முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தலைவராகயிருந்து வழி நடத்தும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கியுள்ள 11 சிறார் வாசிப்பு நூல்கள், 17/11/2024 அன்று முற்பகல் பதினொரு மணியளவில் வெளியிடப்பட்டன. முகப்பேர்-மேற்கு அரசு துவக்கப்பள்ளியில், நடந்த இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை, அப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி சிறப்பாகச் செய்திருந்தார்.
மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு IAS அவர்களும், தமிழ்நாடு அரசின் மாதிரிப்பள்ளிகளின் உறுப்பினர் செயலர் திருமிகு.சுதன் IAS அவர்களும், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்கள்.
திரு இறையன்பு அவர்கள் இந்நூல்களை வாசித்து, அதன் கதைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே குறிப்பிட்டு உரையாற்றியது, மகிழ்வான தருணம். தமிழ்நாடு அரசின் மாதிரிப்பள்ளிகளின் உறுப்பினர் செயலர் திருமிகு.சுதன் IAS அவர்கள், வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். முனைவர் வே.வசந்திதேவி அவர்கள், நிகழ்வுக்குத் தலைமையேற்க, பகபாஇ செயலாளர் திரு ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் ச.மாடசாமி முதன்மை விருந்தினர்களை அறிமுகம் செய்து சிற்றுரையாற்றினார்.
தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தம் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், SMC உறுப்பினர்களும் இவ்விழாவுக்கு ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி நன்றி கூறினார். பள்ளிக்குழந்தைகள் பறையிசைத்து ஆடிய கரக ஆட்டமும், வாசிப்பு இயக்கப் பாடல்களும் கூட்டத்தினரைக் கவரும் விதத்தில் சிறப்பாக இருந்தன.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் வழிகாட்டலில் உருவான இந்தப் பதினொரு சிறார் வாசிப்பு இயக்க நூல்களின் தனித்துவம் குறித்தும், அதன் எளிய மொழி குறித்தும் உரையாற்றிய ஞா.கலையரசி, இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். எழுத்தாளர்கள் மு.முருகேஷ், ஆதி வள்ளியப்பன், சாலை செல்வம், மோ.கணேசன், புவனேஸ்வரி, ஈரோடு சர்மிளா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை எழுத்தாளர் பிரியசகி மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். திரு பா.கா.தென்கனல் இசைமொழி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. அன்றைய தினம் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் துவங்கி ஏழாண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இருந்தும் அதன் உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் வருகை தந்து, இவ்விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, எட்டாம் ஆண்டு துவக்க நாளை, கேக் வெட்டிக் கொண்டாடினர்.
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்களுக்காகப் பாரதி புத்தகாலயம் 40 சதக் கழிவில் இந்த வாசிப்பு நூல்களை வழங்கியது. 300 செட் புத்தகங்கள் அன்று விற்பனையாகின என்பது மகிழ்வான செய்தி.