இன்று (19/05/2024) ஆங்கில எழுத்தாளர், ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின், 90வது பிறந்த நாள்! அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், இவர் மிக முக்கியமானவர். இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர், பிரிட்டானிய வம்சாவளியில் பிறந்தவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட, பல உயரிய விருதுகளைப் பெற்றவர். 500க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கட்டுரைகள், 50க்கும் மேற்பட்ட சிறார் படைப்புகள் என எழுதியிருக்கிறார்.
How to be Happy? (HarperCollins), Hold on to Your Dreams (Penguin), The Hill of Enchantment (Aleph) Stories to Live By (Rupa) ஆகியவை, அண்மையில் இவரெழுதி, வெளி வந்துள்ள புத்தகங்கள்.
இவரது சிறு வயதிலேயே, இவருடைய பெற்றோர் மணமுறிவு பெற்றனர். தம் தந்தையுடன் பத்து வயது வரை, ஜாம்நகர், டேரா டூன், டெல்லி, சிம்லா ஆகிய ஊர்களில் வாழ்ந்தார். தந்தை இரண்டாம் உலகப்போரின் போது, விமானப் படையில் சேர்ந்த பிறகு, இவரை போர்டிங் பள்ளிக்கு அனுப்பினார். தொடர்ச்சியான மலேரியா தாக்குதலால் இவர் தந்தை மரணமடைந்தார். இவர் மிகவும் நேசித்த தந்தையின் மறைவு, இவரைக் கடுமையாகப் பாதித்தது. தனிமை இவரை வாட்டியது. பிறகு இவர் டேராடூனில் இருந்த அம்மாவிடம் சென்றார். அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்திருந்தார்.
வீட்டின் இந்தப் புதிய சூழல் ரஸ்கினுக்கு ஒத்து வராததால், பெரும்பாலும் இயற்கையிடமும், புத்தகங்களிடமும் நேரத்தைச் செலவிட்டார். ‘The Room on the Roof’ என்ற கதையில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், நிஜ வாழ்வில் இவர் சந்தித்துப் பழகிய உயிருள்ள நபர்களே. 1951இல் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றாலும், அங்கே இவர் மனம் ஒன்றவில்லை. டேராடூனுக்குத் திரும்பும் நாளுக்காக ஏங்கினார். 90 வயதாகும் இவர், தற்போது தமது தத்துக் குடும்பத்துடன், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரியில் வசிக்கின்றார்.
17 வயதில் இவர் எழுதிய ‘The Room on the Roof’ என்ற முதல் நாவலுக்கு பிரிட்டனின் பெருமைமிகு ‘John Llewellyn Rys’ நினைவுப் பரிசு கிடைத்தது. இந்நாவலில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள், ஆசிரியர் தம் வாழ்வில் சந்தித்த உண்மையான நபர்களே; பெரும்பான்மையான நிகழ்வுகளும் உண்மையாக நடந்தவை என்பதால், ரஸ்டியின் அனுபவங்களையும், பலவித உணர்வுகளையும் வாசிக்கும் போது, நெகிழ்ச்சியாக இருக்கின்றது.
பெற்றோரை இழந்து ஹாரிசன் எனும் கார்டியன் பாதுகாப்பில் வளரும் ரஸ்டி என்ற 17 வயது பதின்ம வயது சிறுவனின் கதை இது. பிரிட்டானிய வம்சாவளியில் பிறந்த ரஸ்டியை, இந்திய கடைத்தெருவுக்குப் போகக்கூடாது; இந்தியர்களுடன் கலந்து பழகக்கூடாது எனத் தடை விதிக்கிறார் ஹாரிசன். மீறினால் பிரம்படி கிடைக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த, அன்பில்லாத வீட்டுச் சூழ்நிலையில் வளரும் ரஸ்டிக்கு, வீடு என்றாலே வெறுப்பாக இருக்கின்றது; நண்பர்களும் இல்லாமல், தனிமை அவனை வாட்டுகிறது.
ரஸ்டி ஒரு நாள் நடந்து வர வெளியில் செல்லும் போது, சோமி என்ற பையனுடன் பழக்கம் ஏற்படுகின்றது. அவன் மூலமாக ரன்பீர் என்பவனின் நட்பும் கிடைக்கின்றது. ரன்பீருடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியதற்காக, ரஸ்டிக்குப் பிரம்படி கிடைக்கின்றது. ஆனால் இம்முறை ரஸ்டி பயப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விடுகின்றான். நண்பன் சோமியின் உதவியால், ஒரு சிறுவனுக்கு ஆங்கில டியூஷன் நடத்தும் வேலை கிடைக்கிறது. அதே வீட்டில் மாடியில் ரஸ்டிக்குத் தங்கிக் கொள்ள ஒரு சின்ன அறையும் கிடைக்கின்றது.
அதற்குப் பிறகு, அந்த அறை தான், அவனது உலகம். அதன் ஜன்னல் வழியாக அங்கிருக்கும் ஆலமரத்தைப் பார்க்கிறான். அணிலோடு உரையாடுகின்றான். மைனாவைப் பார்க்கின்றான். மனச்சோர்வுடனும், குழப்பத்துடனும் இருந்த ரஸ்டிக்கு, வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்படுகின்றது. நண்பர்களுடன் சேர்ந்து, நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்கிறான். அதன் பிறகு ரஸ்டி வாழ்வில் ஏற்படுகின்ற திருப்பங்களும், அனுபவங்களும், அவனது உணர்வுகளும், தாம் கதை! எளிய ஆங்கில நடையில், அருமையான இயற்கை வர்ணனைகள் நிறைந்து, அன்பு, நட்பு ஆகியவற்றின் மகத்துவத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் நாவலிது.
எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு, மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
ஆசிரியர்,
சுட்டி உலகம்.
(Pic – Thanks – Internet)