சுட்டிக் குழந்தைகளுக்கு, அன்பு வணக்கம்.
இன்று சுட்டி உலகத்தின் மூன்றாம் பிறந்த நாள்! வெற்றிகரமாக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
சிறுவர்க்குப் பாடப் புத்தகம் தாண்டிய, வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், துவங்கப்பட்ட சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட, சிறார் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை வாசித்து உங்கள் வயதுக்கேற்ற, ரசனைக்கேற்ற கதைப் புத்தகங்களை வாங்க முடியும்.
10/05/2024 முதல் 20/05/2024 வரை, சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தின், அரும்பு சிறார் நூலரங்கத்தில், குழந்தைகள் புத்தகத் திருவிழா துவங்குகிறது. வாய்ப்புள்ள பெற்றோர், அவசியம் உங்கள் குழந்தைகளை, இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு, அழைத்துச் செல்லுங்கள்.
இந்தப் புத்தகத் திருவிழாவுக்குத் தினமும் சிறார் எழுத்தாளர்கள், மாலை 5 முதல் 7 வரை வருகை தரவுள்ளனர். சிறுவர்கள் தாங்கள் வாசித்த கதை எழுதிய எழுத்தாளரை, தமக்குப் பிடித்த எழுத்தாளரை, நேரில் சந்தித்துப் பேச, இது ஓர் அருமையான வாய்ப்பு! மேலும் 10 நாட்களும் அறிவியல் இயக்க ஆளுமைகள் சந்திப்பு, ஓவியம், ஓரிகாமி எனத் தொடர்ந்து நடைபெறவுள்ளது..
பாரதி புத்தகாலத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் நிறுவனமே, ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர் நூல்களை வெளியிட்டுள்ளது. மேலும் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்ட சிறுவர் நூல்களும், இங்கே விற்பனைக்குக் கிடைக்கும். குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்க, இது ஒரு நல்ல வாய்ப்பு!
குழந்தைகள் கதைப் புத்தகங்கள், ஏன் வாசிக்க வேண்டும்? குழந்தைகள் கதை வாசிக்கும் போது, அவர்கள் மனக்கண்ணில் ஒரு புதிய உலகம் விரிகிறது. இது வரை அவர்கள் பார்த்திராத, கற்பனை செய்திடாத ஒரு புதிய உலகத்தைக் காண்கிறார்கள். அந்தப் புதிய உலகத்தில், அவர்களே கதாபாத்திரங்களாக மாறி சில, நிமிடங்கள் வாழ்கிறார்கள்.
கதைகள் குழந்தைகளின் கற்பனைச் சிறகை விரித்து, அவர்களை ஏழு கடல்களைத் தாண்ட வைக்கிறது. அந்தக் கற்பனாச் சக்தி தான், பின்னாளில் எந்தவொரு புதிய படைப்புக்கும், கண்டுபிடிப்புக்கும் காரணமாக அமைகின்றது. எனவே உங்கள் குழந்தைகளின் பன்முகத் திறன் பெருக வேண்டுமென்றால், அவர்கள் படைப்புத் திறன் மேம்பட வேண்டுமென்றால், கதைப் புத்தகங்களை, அவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
இளம் வயது குழந்தைகளுக்குத் தாய்மொழித் தமிழில், உச்சரிப்புத் திறன் மேம்பட, குழந்தைப் பாடல்களைக் கேட்பதும், பாடுவதும் அவசியம். எங்கள் சுட்டி உலகம் காணொளியில், குழந்தைப் பாடல்களும், கதைகளும் வெளியாகியுள்ளன.
குழந்தைகளின் செல்போன் நாட்டத்தைக் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரே சிறந்த வழி, புத்தக வாசிப்பின் சுவையை, அவர்களுக்கு அறிமுகம் செய்வது தான். கோடை விடுமுறையைப் புத்தகங்களோடு கொண்டாடுங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.