ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் சூரியன், ஒரு மாதத்துக்கு மேலாகியும் வரவே இல்லை. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த பூமி என்னவாகும்? யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? கற்பனையே சுவாரசியமாக இருக்கிறதல்லவா?
அந்தச் சுவாரசியத்தின் பின்னணியில் உண்மையான அறிவியல் தகவல்களையும், இந்த பூமியில் உயிர் வாழ்வதற்கு அவசியமான சூரியனின் முக்கியத்துவத்தையும் கதையோடு கதையாகக் குழந்தைகளுக்குச் சொல்லிச் சூழல் விழிப்புணர்வை ஊட்டுகிறார் ஆசிரியர்.
இரவாடிகளான ஆந்தையும், வௌவாலும். காணாமல் போன சூரியனைத் தேடிப் புறப்படுகின்றன. மரம், மலை, கடல், நிலா, வீண்மீன் என ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டு தேடிப் போகும் அவை, முடிவில் சூரியனைக் கண்டனவா? சூரியன் உதிக்காமல் போனதற்கு காரணம் என்ன? சூரியனின் கோபம் தீர்ந்ததா? மறுபடி பூமிக்குத் திரும்பியதா? போன்றவற்றுக்கு விடை அறிய, கதையை வாசியுங்கள்.
கதையில் ஊனுண்ணி, தாவர உண்ணி, ஒளிச்சேர்க்கை. இரவாடி போன்ற வார்த்தைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பதும், பின்னிணைப்பாகக் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம், எளிமையாக அறிவியல் தகவல்களை இணைத்திருப்பதும் சிறப்பு.
6-8 வயது வரையிலான குழந்தைகள் வாசிப்பதற்கேற்ப எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது. புனைவும், அறிவியலும் கலந்த, வண்ணப் படங்களோடு கூடிய சுவாரசியமான சிறார் மின்னூல் இது.
வகை | சிறுவர் நாவல் மின்னூல் |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு இணைப்பு | அமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B09Q6MKJ3S |
விலை | ₹ 50/- |