இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார் கதைகள் உள்ளன.
முதலில் இடம்பெற்றிருக்கும் ‘செவ்வாய்’ கதையில், பரண் மீது ஒரு சிறிய காகித பெட்டியில் உடைந்து கிடக்கும் குட்டி விளையாட்டுச் சாமான்களும், காய்ந்து கிடக்கும் வண்ணம் தீட்டும் தூரிகையும், கோடை மழைத் தூறல் பட்டுத் திடீரென விழித்துக் கொண்டு உரையாடுகின்றன.
அவற்றின் உரையாடல் மூலம் மனிதர்கள் சுற்றுச்சூழலையும், இயற்கையையும் எவ்வாறு நாசம் செய்தார்கள் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்கின்றார் ஆசிரியர். ‘செவ்வாய்க்குப் போக செலவாகும் பணத்தை வைத்துப் பூமியைச் செழுமைபடுத்தலாம்’ என்ற பெரியவர்களுக்கான செய்தியும் இதில் உள்ளது.
‘ஜேசிபி’ இயந்திரம் கொண்டு மலையை நிமிடத்தில் தரைமாட்டமாக்கும் மனிதனின் பேராசையை, ‘அம்மா பூதமும், குழந்தை பூதமும்’ கதை பேசுகின்றது. பள்ளிக்கூடம் குழந்தைகள் விரும்பும் இடமாக இல்லை என்ற கருத்தும் இதில் உள்ளது.
புலியாக மாற பூனைக்குக் குண்டன் எலி, பிரணாயாமம் சொல்லிக் கொடுக்கும் ‘ஆசிர்வதிக்கப்பட்ட பூனை’ கதை, ‘இடாவணின் கவிதை கதை’, ‘வெல்ல மண்டையன் கதை’ ஆகியவை நல்ல நகைச்சுவை கலந்த கதைகள் என்பதால், சிறுவர்க்கு வாசிக்க மிகவும் பிடிக்கும்.
மற்றவர்களுக்காக வாழ்வதில் உள்ள மகிழ்ச்சியைச் சொல்லும் நூலின் தலைப்புக் கதையான ‘கிளிமரம்’ உருக்கமான கதை.
கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய சிறுவர் கதைகள். அவசியம் வாங்கிக் கொடுத்துச் சிறுவர்களை வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | மொழிபெயர்ப்புச் சிறார் கதைகள் |
ஆசிரியர் – மலையாளம் தமிழாக்கம் – | கிரேஸி உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 (+91) 8778073949 |
விலை | ₹ 45/- |