2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது பெற்ற ‘தேடல் வேட்டை’ தொகுப்பில் 36 சிறுவர் பாடல்கள் உள்ளன.
பாடல்களே சிறுவர் இலக்கியத்தில் முதலிடம் பெறுகின்றன. குழந்தைப்பாடல்களுக்குச் சந்தமே முக்கியம். எளிய சொற்கள், இனிய சந்தம், தெளிவான பொருள் கொண்ட பாடல்களே சிறந்த சிறுவர் பாடல்களாகும்.
இந்நூலில் சிறுவர்க்குத் தெரிந்த எளிய சொற்களில், இனிய ஓசையுடன் பாடுவதற்கேற்ற வாறு பாடல்கள் அமைந்துள்ளன. பள்ளிப் பருவத்தில் சிறுவர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நண்பர்களின் அவசியத்தை, ‘நண்பர்களே வாழ்க’ எனும் முதல் பாடல் எடுத்துரைக்கிறது:-
“உதைத்த காலையும் அணைக்கும் தாய்மைபோல்
உனக்கு வேண்டுமே ஒருநட்பு
உதைத்த காலையே சுமக்கும் செருப்புபோல்
உன்னை விலகிடா ஒருநட்பு
அப்பா அம்மா அண்ணன் தம்பி
ஆயிரம் சொந்தம் இருந்தாலும்
எப்போ தும்நம் உணர்வுகள் பகிர்ந்திட
இருக்க வேண்டுமே ஒருநட்பு!”
வள்ளல் அழகப்பர் அவர்களின் கல்விக்கொடையைச் சிறுவர்க்கு அறிமுகம் செய்கின்றது, இப்பாடல்:-
“செல்வம் தேடுவோம் இவர்போல
சேர்த்துக் குவிப்போம் மலைபோல
அள்ளிக் கொடுப்போம் கல்விக்காய்
ஆக்குவோம் பல்கலைக் கழகங்கள்”
பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளைச் சிறுவர்க்கு விளக்கும் பாடலிது:-
“மனங்களைச் சுண்டி இழுக்கும்
மந்திரப் பேச்சால் அண்ணா
ஜனநா யகத்தை வென்றார்
சரித்திர முதல்வராய் ஆனார்”
“பறவைகள் வான எல்லையில்
பறந்து பறந்து திரியுமே
உறவென உலகைக் கொள்ளுமே
ஒவ்வொரு நாடும் செல்லுமே”
என்பது வலசை செல்லும் பறவைகள் குறித்த பாடல். சிறுவர்கள் பாடுவதற்கேற்றவாறு, இனிய ஓசைநயமுள்ள பாடல்.
புத்தகம் வாசிப்பதன் அவசியம், பயணத்தின் பலன், காலத்தின் அருமை, மரம் நடுதல், இயற்கையையும், மற்ற உயிரினங்களையும் நேசித்தல் போன்ற பல சிறந்த கருத்துகளைச் சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் பாடல்களாகப் புனைந்து தந்திருக்கிறார், கவிஞர் செல்ல கணபதி.
தேடல் வேட்டை | சிறுவர் பாடல்கள் |
ஆசிரியர் | கவிஞர் செல்ல கணபதி |
வெளியீடு | பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14 |
விலை | ₹ 50/- |