இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம். தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது.
தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும் வாசிக்க வைக்க வேண்டும் என்பது ஆசிரியரின் கனவு. எனவே பாடப்புத்தக்கத்தைத் தாண்டிய புத்தக வாசிப்பு எப்போதுமே உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் வாரி வழங்குவதோடு, தொடர்ச்சியான தேடலுக்கு வழி வகுத்து, அறிவை விசாலமாக்கும் என்று ஆசிரியர் இந்நாவல் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் எல்லா வாரப் பத்திரிக்கைகளிலும் தொடர்கதைகள் வெளிவரும். ஒவ்வொரு வாரமும் கதை முடியும் போது, வாசகருக்கு ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகத் திடீர் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருப்பார்கள். அடுத்த வாரம் எப்போது வரும் என்று வாசகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அது போலவே இந்நாவலின் இறுதியிலும் ‘ராபுலில்லி என்றால் என்ன?’ என்று வாசகருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, சஸ்பென்ஸுடன் நிறுத்தி வைத்திருக்கிறார் ஆசிரியர்.
இந்நாவலின் அடுத்த பாகத்தை இவர் எழுதி, புத்தகம் கைக்குக் கிடைக்கும் வரை, வாசித்த குழந்தைகள் அனைவரும் ‘ராபுலில்லி என்றால் என்ன?’ என்று பலவிதமாக யோசித்து மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள்! இந்நூலுக்குக் குழந்தைகளைக் கவரும் விதத்தில் விநோதமாக தலைப்பு வைத்திருப்பது சிறப்பு!
ஐந்து நண்பர்கள் மாதமொருமுறை இரண்டு நாட்கள் ஒன்றாகக் கூடி விளையாடியும், அரட்டையடித்தும் பொழுது போக்குகின்றார்கள். வாசிப்பில் நாட்டமில்லாத அவர்களைப் புத்தகம் வாசிக்கச் சொல்லி ஊக்குவிக்கின்றார், குழலியின் தந்தையும், அவர் நண்பரும்.
‘கலிவர் பயணங்கள்’ புத்தகம் வாசிக்கத் துவங்கும் அவர்களுக்கு நாவல் வாசிப்பனுபவம், உற்சாகமும் மகிழ்ச்சியும் தருவதாக அமைகிறது. ‘கலிவர் பயணங்கள்’ நாவலில் வரும் ‘லில்லிபுட் சுண்டுவிரல் மனிதர்கள்’ பற்றி வாசிக்க வாசிக்க, அம்மனிதர்கள் பற்றிய வியப்பும் ஆர்வமும் அதிகமாகி குழந்தைகளின் உறக்கம் தொலைகிறது. நள்ளிரவு வரை கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வாசிக்கிறார்கள்.
வாசிப்பு புதிய சன்னல்களைத் திறந்து விடுகின்றது. கூகுளில் தேடுவது மட்டுமின்றி இந்தியாவைத் தாண்டி, ஐரோப்பாவிலும் இவர்களது தேடல் தொடர்கின்றது. இந்தத் தேடலின் போது ஜெனரேஷன் மேப், கிரீன்விச் நேரம், அட்சரேகை, தீர்க்கரேகை போன்ற பல விஷயங்கள், இவர்களுக்கு அத்துபடியாகின்றன.
இவர்கள் தேடலின் பயனாக யாரைச் சந்தித்தார்கள்? சுண்டுவிரல் மனிதர்கள் உண்மையாகவே உலகில் வசிக்கின்றார்களா? முடிவில் எங்குப் பயணம் சென்றார்கள்? என்றெல்லாம் அறிய புத்தகம் வாங்கி வாசியுங்கள்.
அழகான கருப்பு வெள்ளை ஓவியங்களுடன் கூடிய சிறார் நாவல். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | சிறுவர் தொடர் நாவல் |
ஆசிரியர் | விழியன் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 (+91) 8778073949 |
விலை | ₹ 60/- |