வே.வசந்தி தேவி அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் தேதியை இந்தாண்டு முதல் வசந்திதேவி வாசிப்புத் தினமாகக் கொண்டாடுவது என அவர் தலைவராக இருந்து வழிநடத்திய பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. இனி ஒவ்வோராண்டும் இந்த நாள் ‘வசந்திதேவி வாசிப்புத் தினமா’கக் கொண்டாடப்படும்.
ஏழை எளிய குழந்தைகளின் வாசிப்பு மேம்பட வேண்டும் எனக் கனவு கண்டு கடைசி மூச்சு வரை பாடுபட்ட பிரபல கல்வியாளரான வசந்தி தேவி அம்மாவின் பிறந்தநாளை வாசிப்புத் தினமாகக் கொண்டாடுவது மிகவும் போற்றிப் பாராட்டத்தக்கது.
இந்த வாசிப்புத்தினத்தை எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்த இணையவழிப் பயிற்சி 06/11/2025 அன்று மாலை நடைபெற்றது. பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களது சீரிய முயற்சியில் ஏறக்குறைய 90க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கு பெற்றனர்.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் ஆற்றியவுரையில், “என்னைப் பொறுத்தவரை ஈடு செய்ய முடியா இழப்பு என்றால், அது வசந்தி தேவி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்றார். மேலும் குழந்தைகளுக்குத் தமிழ் வாசிப்பில் ஆர்வம் ஏற்படச் சிறார் நூல்களின் மொழி மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆசிரியர் திரு நாகராஜ் அவர்கள் வாசிப்பு இயக்கப் பாடலுடன் தம் உரையைத் துவங்கினார். வாசிப்புத் தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்? அன்று என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்துச் சிறப்பான உரை நிகழ்த்தினார்.
சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து இதுவரை 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த நூல்கள் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் வழிகாட்டலில் எளிய மொழியில் உருவானவை. ஒரு நூலின் விலை ரூ 20/- மட்டுமே.

‘வசந்தி தேவி வாசிப்புத் தின’த்தில் தமிழ்நாடு, புதுவை முழுக்கப் பல்வேறு மையங்களில் இந்தச் சிறார் வாசிப்பு நூல்களைக் குழந்தைகளும் மிகக் குறைவாகப் படித்த பெண்களும் வாசிக்கிறார்கள்.
வே.வசந்தி தேவி அம்மாவின் நினைவைப் போற்றுவோம்! அவரது கனவை நனவாக்குவோம்!
