மிட்டாய் பாப்பா

Mittai_pic

இது 1966 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ முதியோர்க் கல்வி இலக்கியப் பரிசு பெற்ற நூல். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் மிட்டாய். சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும் சுவாரசியத்தைம் ஏற்படுத்தும் விதமாக,  மிட்டாயையே முக்கிய பாத்திரமாகப் படைத்து, இக்கதையை எழுதியுள்ளார், ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன்.

முனுசாமி என்பவர் மிட்டாய் வியாபாரி. அவர் எல்லோரையும் கவரும் விதமாக, வெவ்வேறு வண்ணங்களில் மிட்டாய்கள் செய்து விற்றார்.  அவர் மிட்டாயில் செய்த விலங்குகளும், பறவைகளும் உயிருள்ளவை போலவே காட்சியளித்தன.

அவருக்குக் குழந்தைகள் என்றால் உயிர். ஆனால் அவருக்குக் குழந்தையில்லை. அதை நினைத்து, அவர் மனைவி மிகவும் வருந்தினார். அவர் ஒரு மிட்டாய் பொம்மை செய்து மனைவியிடம் கொடுத்தார். அந்த பொம்மைக்கு உயிர் வந்தது போல், ஒரு நாள் கனவு கண்டார்.

அவர் கனவு கண்டதைப் போலவே, அந்த மிட்டாய் பாப்பாவுக்கு உயிர் வந்துவிட்டது. கதவில் இருந்த துவாரம் வழியே, அது கடையை விட்டு வெளியேறியது. அது இரவு நேரம். ஆந்தை ஒன்று அதைத் தூக்க முயன்றது. ஆந்தையிடமிருந்து தப்புவதற்காக, ஒரு எலிப்பொந்தில் நுழைந்தது.

விடிந்த பின் பம்பரம் விட்ட சிறுவர்களிடம் மாட்டியது. அதைக் கல்லில் மோதி உடைத்து ஆளுக்கொரு பங்காகப் பங்கிட்டுச் சாப்பிடலாம் என அவர்கள் முடிவு செய்தனர். சோமு கையை உயர்த்தி கல்லில் மோத முயன்ற போது, வானத்தில் வட்டமிட்ட கழுகு, அதைக்  கொத்தி எடுத்துச் சென்றது. அது மாமிசம் இல்லை என்று தெரிந்தவுடன், மிட்டாயை மரத்திலேயே விட்டுவிட்டுப் பறந்தது. 

அச்சமயம் மழை பெய்ததால், நீர் அதன் உடலை கரைக்கத் துவங்கியது. மரத்தில் இருந்த ஒரு பொந்துக்குள், மிட்டாய் பாப்பா போனது. அங்கே  இருந்த ஒரு ஆந்தையிடம், தன் கதையைச் சொன்னது.

“என் வீட்டு மாடியில் உள்ள குடும்பத்திடம் கேட்டால், உன் வீடு பற்றித் தெரிந்து கொள்ளலாம்” என்று ஆந்தை கூறியது.  அது ஒரு தேன் கூடு. அங்குச் சென்று மிட்டாய் பாப்பா தேனீக்கள் வாழ்வியல் பற்றி, வியக்கத்தக்கப் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறது.

“கிராமத்தில் ஒரு விஞ்ஞானி வசிக்கிறார்; அவரைக் கேட்டால், உன் வீடு பற்றித் தெரிந்து கொள்ளலாம்” என்று ஒரு தேனீ கூறுகின்றது.

விஞ்ஞானியைத் தேடிப் போகும் வழியில், களைப்பு மிகுதியால் மிட்டாய் பாப்பா, புதரில் படுத்துத் தூங்கிவிடுகின்றது. அதை எறும்புகள் புற்றுக்குள் தூக்கிப் போய்விடுகின்றன. எறும்பினத்திலும் கொள்ளைக் கூட்டத்தார் உண்டு என்று தெரிந்து கொள்கின்றது.

எறும்புகளிடம் விடைபெற்றுக் கொண்டு, பாப்பா அங்கிருந்து கிளம்பியது. மீண்டும் கொள்ளைக்கூட்ட எறும்புகள் வருகின்றன. ஆனால் ஒரு விநோத விலங்கு வந்து எறும்பு களைத் தின்று, கபளீகரம் செய்கின்றது. அப்போது ஒரு பயங்கர நாய் அங்கு வந்தது. அந்த விநோத விலங்கைத் தின்னப் பார்த்தபோது, அதன் கூர்மையான முட்கள் குத்தியதால், நாய் கத்திக் கொண்டு ஓடிவிட்டது.

பிறகு அந்த நாயுடன் ஒரு கிழவர் வந்தார். நாயைக் குத்திய விலங்கைக் காண்பதற்காக அவர் வந்தார். அவர் தான் எறும்பு சொன்ன விஞ்ஞானி என்று பாப்பா தெரிந்து கொண்டது. அந்த விஞ்ஞானி மூலம் தாவரங்கள் உணவு உற்பத்தி செய்யும் முறையைப் பாப்பா தெரிந்து கொள்கின்றது.

முனுசாமியின் வீடு தான், மிட்டாய் பாப்பா வீடு என்று விஞ்ஞானி தெரிந்து கொள்கிறார். “இவர் தான் உன் அப்பா” என்று மிட்டாய் பாப்பாவை முனுசாமியிடம் கொண்டு கொடுக்கிறார். தாம் மிட்டாயில் செய்த பொம்மைக்கு எப்படி உயிர் வந்தது என்று முனுசாமி திகைக்கிறார்.

“குழந்தை இல்லை என்ற என் மனைவியின் கவலையைப் போக்க மிட்டாயில் ஒரு குழந்தை செய்து கொடுத்தேன். இதுக்கு உயிர் இருந்தால் எவ்வளவு அழகாகக் குதித்து விளையாடும்? கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் என்று என் மனைவி விரும்பினாள். நானும் அவ்விதமே எண்ணினேன். உள்ளம் உருகக் கடவுளை வேண்டினேன்” என்று முனுசாமி கூறினார்.

“மனிதர் உள்ளம் உருக ஒன்றை விரும்பினால், அது நடந்தே தீரும் என்று மெய்ஞ் ஞானிகள் கூறியுள்ளனர்’ என்று சொன்ன விஞ்ஞானி, “மிட்டாய் பாப்பாவைத் தசையுள்ள குழந்தையாக மாற்ற, என்னிடம் மருந்து உள்ளது; அதைக் கொண்டு வருகிறேன்” என்று கூறுகிறார்.

அவர் கொடுத்த மருந்தால், பாப்பாவின் உடல் சில நாட்களில் ஊன் உடலாக மாறி விட்டது. மற்ற குழந்தைகளைப் போலக் கொழு கொழு என வளரத் துவங்கியது என்பதாகக் கதை முடிகிறது.

இக்கதை வாயிலாகத் தேனீக்கள் வாழ்வியல் பற்றியும், எறும்புகள் வாழ்வியல் பற்றியும், தாவரம் சூரிய ஒளியில் உணவு தயாரிப்பது பற்றியும், பல செய்திகளைக் குழந்தைகள் தெரிந்து கொள்ளவியலும். குழந்தைகள் மிக விரும்பி உண்ணும் மிட்டாயை வைத்துச் சுவாரசியமான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்கல்வி’ கோபாலகிருஷ்ணன்
வெளியீடு:- முதல் பதிப்பு 1990 2ஆம் பதிப்பு 2010அபிநயா பதிப்பகம், 7/40 கிழக்குச் செட்டித்தெரு, பரங்கிமலை, (செயிண்ட் தாமஸ் மவுண்ட்)சென்னை-16.
விலைரூ 70/-
Share this: