தலையங்கம் – மார்ச் 2022

Editorial_Mar_22

அனைவருக்கும் வணக்கம்.

பெண்கள் அனைவருக்கும் சுட்டி உலகம் சார்பாகப் பெண்கள் தின வாழ்த்துகள்! பெண் விடுதலையே மண்ணின் விடுதலை! கல்வியே பெண்ணின் பேராயுதம்! 

சுட்டி உலகம் துவங்கி 11 மாதங்கள் முடிவடையும் நிலையில், பார்வைகள் 12000 ஐ தாண்டிவிட்டது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம்!  எங்களது காணொளிகளும், அதிகளவில் பார்வையைப் பெற்று வருகின்றது!

சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப் போட்டியில், வெற்றி பெற்ற சிறுவர்களின் கதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் பணி துவங்கியிருக்கிறது.  புத்தகம் வெளியானவுடன் அவரவர் முகவரிக்கு ஒரு பிரதி இலவசமாக அனுப்பி வைப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

45 வது சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 16 முதல் துவங்கி மிகவும் சிறப்பாக நடந்து, மார்ச் 6 ஆம் தேதியுடன் முடிந்திருக்கிறது.  கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கிடையிலும் இந்தாண்டு குழந்தைகளும், இளைஞர்களும் அதிகளவில் இக்காட்சிக்கு வந்தார்கள் என்றும், கடந்த ஆண்டை விட புத்தக விற்பனை அதிகளவில் நடந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இது வெறும் புத்தக்க் காட்சியாக இல்லாமல், எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், வாசகர்களும் ஒன்று கூடும் கலாச்சாரத் திருவிழாவாக மாறியுள்ளது என்பதில் நமக்கெல்லாம் பெருமையே. 

சுட்டி உலகத்தில் வாசிக்க வேண்டிய சில சிறார் புத்தகங்கள் பற்றிய பரிந்துரைகளை அவ்வப்போது வெளியிட்டோம்.  இவை பலருக்குப் பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறோம்.

இளைஞர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டிய புத்தக வாசிப்பை நோக்கி நகர்கின்றார்கள் என்பதும், பெற்றோர் குழந்தைகளை அழைத்து வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும், மிகவும் வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். 

புத்தகங்கள் அதிகளவில் விற்பனையானால், பதிப்பாளர்கள் இன்னும் அதிகளவில் வெவ்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட முன்வருவார்கள்.  குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கினால் மட்டும் போதாது; அவற்றை வாசிக்க ஊக்குவிக்கவும் வேண்டும்.  முக்கியமாகத் தமிழ் புத்தகங்களை வாசிப்பது அவசியம்.  நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நம் கையில் தான் உள்ளது. 

கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதால், பள்ளிகள் திறக்கப்பட்டுக் குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று வர வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.  இத்துடன் கொரோனா ஆபத்து நீங்கினால் நிம்மதி!

அடுத்த மாதம் சந்திப்போம்!

நன்றியுடன்,

ஆசிரியர்.

சுட்டி உலகம். 

Share this: