ஸ்டூவர்ட் லிட்டில் (STUART LITTLE)

Stuart_Little_pic

ஸ்டூவர்ட் லிட்டில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவையும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் கலந்த அமெரிக்கத் திரைப்படம்.  1945 ஆம் ஆண்டு ஈ.பி.வைட் (E.B.WHITE) இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதன் இயக்குநர் ராப் மிங்க்ஆப் (ROB MINKOFF) ஆவார். 

இதன் இரண்டாம் பாகம் 2002 ஆண்டிலும், அதைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு மூன்றாம் பாகம் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தன.

மனிதரிப் போன்றே பேசக் கூடிய, குணங்கள் கொண்ட ஸ்டூவர்ட் லிட்டில் என்ற சுண்டெலி தான், இதன் கதாநாயகன்.  முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் கிராபிக்சைப் பயன்படுத்தி, இந்தச் சுண்டெலி கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 

பிரெடெரிக் லிட்டில் (FREDERICK LITTLE) என்பவருடைய மனைவி எலினோர் (ELEANOR) ஆவார்.  இவர்களுக்கு ஜார்ஜ் என்ற மகன் உண்டு.  ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஜார்ஜுக்கு ஒரு தம்பியைத் தத்து எடுக்க இருவரும் முடிவு செய்கின்றனர்.    ஜார்ஜும் தனக்கொரு தம்பி வரப் போவதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இவர்கள் ஸ்டூவர்ட் என்ற பெயருடைய ஒரு சுண்டெலியைப் பார்க்கிறார்கள்.  அதிக நாட்களாக அங்கிருப்பதால் அங்கிருக்கும் குழந்தைகள் பற்றிய விபரங்களை ஸ்டூவர்ட் அவர்களுக்குச் சொல்கின்றது.

மிகவும் சமர்த்தாகவும், புத்திசாலியாகவும் இருக்கும் அந்தச் சுண்டெலியை இவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துவிடுகின்றது.  அதையே தத்து எடுத்துக் கொள்ள விருப்பப்பட்டுக் காப்பாளரிடம் சொல்கிறார்கள்.  மனிதர்கள் சுண்டெலியைத் தத்து எடுப்பது சரியில்லை என அவர் சொல்கின்றார்.

ஆனால் எலினோரும், பிரெடெரிக்கும் மிகவும் விரும்புவதால்,அவரும் தத்து கொடுக்க சம்மதிக்கிறார்.  ஸ்டூவர்டை அழைத்துக் கொண்டு இவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.   இதற்கான படுக்கை அறையைக் காட்ட, அகன்ற கட்டில் மெத்தையில் குட்டியூண்டு சுண்டெலி படுத்து உறங்குகிறது.

தம்பியைப் பார்க்கும் ஆவலோடு பள்ளியிலிருந்து ஓடி வரும் ஜார்ஜுக்கு ஸ்டூவர்டைப் பார்த்தவுடன் மிகவும் ஏமாற்றமாகிவிடுகிறது.  “இவன் என் தம்பியில்லை; இது ஒரு சுண்டெலி” என்று கோபமாகச் சொல்லி விடுகின்றான்.

வீட்டில் ஸ்னோபெல் (SNOWBELL) என்ற பெயருடைய பூனையை வளர்க்கிறார்கள்.  அது சுண்டெலியைத் தன் வாயில் போட்டுவிடுகின்றது.  குடும்ப உறுப்பினரைத் தின்னக் கூடாது என்று அதனை அதட்டித் துப்பச் சொல்கின்றனர்.  பூனைக்கு ஸ்டூவர்டைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அதனை வீட்டிலிருந்து துரத்தும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.

ஜார்ஜ் பல் விளக்குவது போலவே, ஸ்டூவர்டும் பிரஷ்ஷை வைத்துக் கொண்டு பல் விளக்குகிறது. ஜார்ஜ் குளிப்பதற்காகத் தன் பைஜாமைக் கழட்டி வீசுகிறான்.  அது ஸ்டூவர்ட் மேல் விழுந்து மூடிவிடுகின்றது.  அது தெரியாமல் எலினோர் ஜார்ஜின் துணிகளை வாஷிங் மெஷினுக்குள் போடும்போது, சுண்டெலியும் மெஷினுக்குள் போய்விடுகின்றது. 

துணி துவைக்கும் எந்திரத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஸ்டூவர்ட் தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கத்துகிறது. ஆனால் எலினோர் அதைக் கவனிக்கவில்லை.  தண்ணீர் அதிகமாகி சுண்டெலி மூழ்கும் சமயம் தான், எலினோருக்கு, அது உள்ளே மாட்டியிருக்கும் விஷயம் தெரிகிறது. 

மிகவும் பதற்றமாகி அவசர அவசரமாக மயக்கமான ஸ்டூவர்டை வெளியே எடுத்துப் படுக்கையில் படுக்க வைக்கிறார்கள். டாக்டர் வந்து சோதனை செய்து பார்த்துவிட்டு, சோப் தண்ணீரை அதிகமாக ஸ்டூவர்ட் குடித்துவிட்டது என்றும், ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் சொல்கிறார்.  அப்போது தான் எலினோருக்கு நிம்மதி ஏற்படுகின்றது.  

பிரெடெரிக் குடும்பத்தில் புது உறுப்பினரின் வருகையையொட்டி அவர்களுடைய உறவுகளும், நண்பர்களும் ஏராளமான பரிசுப் பொருட்களுடன் அவர்கள் வீட்டுக்கு வருகின்றார்கள்.  ஸ்டூவர்டை பிரெடெரிக் அறிமுகம் செய்யும் போது, அவர்களுக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு ஏற்படுகின்றது.

ஆனால் ஜார்ஜ் “அவன் என் தம்பியல்ல; அது ஒரு சுண்டெலி” என்று அவர்களிடம் கோபமாகச் சொல்லி, அதனுடன் விளையாட மறுக்கிறான்.

தன் மீது அவன் பாசமாக இல்லை என்று ஸ்டூவர்டும் ஏங்குகிறது.  எனவே அதனுடைய பெற்றோரைக் கண்டுபிடிக்கச் சொல்லி,  ஆதரவற்றோர் இல்லத்தின் காப்பாளரைக் கேட்கிறார்கள்.  அவரும் கண்டுபிடித்துச் சொல்வதாகக் கூறுகிறார்.  

ஸ்டூவர்ட் இடையில் தவறுதலாக ஜார்ஜ் விளையாடும் இடத்துக்கு ஒரு முறை சென்றுவிடுகின்றது.  அதனுடன் பேசிப் பழகிய பிறகு, ஜார்ஜுக்கு ஸ்டூவர்டை பிடித்துவிட, இருவரும் நண்பர்களாக விளையாடுகிறார்கள்.  

ஸ்னோபெல் என்கிற வீட்டுப் பூனை, தன் நண்பனான மோண்டி என்கிற பூனையிடம் சொல்லி, எப்படியாவது ஸ்டூவர்டை வீட்டிலிருந்து வெளியேற்ற நினைக்கிறது.  இரண்டும் சேர்ந்து அந்த ஊரிலிருக்கும் ஸ்மோக்கி (SMOKEY)என்ற பூனையைச் சந்திக்கின்றன.  ஸ்மோக்கி அந்த ஊர் மாபியா பூனை கும்பலுக்கு வேலை செய்யும் பூனை.   

அந்த ஊரில் நடக்கவிருக்கும் படகுப் போட்டிக்கு, ஜார்ஜ் ஒரு ரிமோட் கண்ட்ரோலால் இயக்கும் ‘வாஸ்ப்” (WASP) என்ற பெயரில் படகு ஒன்றைத் தயாரிக்கிறான்.  போட்டி துவங்க இருக்கும் சமயம், ஸ்டூவர்ட் அந்த ரிமோட்டைத் தூக்க முடியாமல் தூக்கி வருகிறது.  தவறுதலாக அதைக் கீழே போட்டு உடைத்துவிடுகின்றது. 

ரிமோட் இல்லாமல் படகுப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது என ஜார்ஜ் ஏமாற்றமும், கோபமும் அடைகிறான்.  ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, படகைத் தானே ஓட்டி, ஸ்டூவர்ட் முன்னால் செல்கிறது. 

இடையில் ரிமோட்டை வைத்துத் தன் பெரிய படகால் மற்ற படகுகளை உடைத்துத் தள்ளும் ஆண்டன் என்பவனின் முயற்சியையும், ஸ்டூவர்ட் முறியடிக்கிறது.   ஸ்டூவர்ட் ஓட்டிய வாஸ்ப் படகு, அப்போட்டியில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றுகின்றது.  ஸ்டூவர்ட் பெற்றுத் தந்த அந்த வெற்றியினால், ஜார்ஜுக்கு ஏகக் கொண்டாட்டம்!

திடீரென்று ஒரு நாள் இரண்டு எலிகள் அவர்கள் வீட்டுக்கு வந்து ஸ்டூவர்ட் தங்களுடைய மகன் தான் என்றும், வறுமையினால் அவனைக் காப்பாற்ற முடியாமல் இடையில் விட்டுவிட்டோம் என்றும் சொல்கின்றன.

ஸ்டூவர்ட் பிரியப் போவதை நினைத்து, எல்லோருக்கும் வருத்தமும், கவலையும். ஜார்ஜ் தனக்கு மிகவும் பிடித்த பொம்மை காரை ஸ்டூவர்ட்டுக்குப் பரிசளிக்கிறான்.  அதில் ஸ்டூவர்டும், அதன் பெற்றோரும் ஏறிச் செல்கின்றன.  பிரிய மனமின்றி ஸ்டூவர்டுக்குப் பிரியாவிடை கொடுக்கிறார்கள். 

அதற்குப் பிறகு ஆதரவற்றோர் இல்லத்தின் காப்பாளர் மூலம், ஸ்டூவர்டின் பெற்றோர் ஏற்கெனவே ஒரு விபத்தில் இறந்துவிட்டன என்று தெரிகிறது. வந்து அழைத்துச் சென்ற எலிகள், அதனுடைய உண்மையான பெற்றோர் இல்லை என்ற உண்மை தெரிந்தவுடன், ஸ்டூவர்டைக் கண்டுபிடிக்கச் சொல்லிக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள்.

காவல்துறை ஸ்டூவர்டை வலை போட்டுத் தேடுகின்றது.  மாபியா கும்பலைச் சேர்ந்த ஸ்மோக்கி என்ற பூனை தான், இந்த எலிகளை அனுப்பி ஸ்டூவர்டைக் கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறது.  இந்த உண்மை தெரிந்தவுடன் பொய்யான பெற்றோருக்கு டாட்டா காட்டிவிட்டு, அந்தப் பொம்மை காரை ஓட்டிக் கொண்டு ஸ்டூவர்ட் வீட்டுக்கு வருகின்றது.

வழியில் அந்தப் பூனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஸ்டூவர்டைப் பிடித்துக் கொல்ல முயலுகின்றன.  அவைகளிடம் சண்டை போட்டுத் தப்பித்து, ஸ்டூவர்ட் வீட்டுக்கு  வருகின்றது.  அப்போது வீட்டில் யாருமில்லை. 

“நீ போனபிறகு தான், வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்” என்று ஸ்னோபெல் பூனை ஸ்டூவர்ட்டிடம் பொய் சொல்ல, அது உண்மையென்று நம்பி, மனம் உடைந்து, வீட்டை விட்டுச் சென்று ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருக்கின்றது.

மீண்டும் எல்லாப் பூனைகளும் ஸ்டூவர்டைக் கொல்ல, அங்கு வந்து பெரிய சண்டை நடக்கிறது.  ஆனால் ஸ்னோபெல் மனம் திருந்தி, கடைசியாக அந்தப் பூனைகளிடமிருந்து ஸ்டூவர்டைக் காப்பாற்றி, மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.  ஸ்டூவர்ட் திரும்பி வந்ததில், ஜார்ஜுக்கு மகிழ்ச்சி! 

கம்ப்யூட்டர் கிராபிக்சில் உருவாக்கப்பட்ட ‘ஸ்டூவர்ட் லிட்டில்’, குழந்தைகள் மிகவும் விரும்பக் கூடிய கதாபாத்திரம்!  நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமென்பதால், குழந்தைகளோடு பெரியவர்களும் குடும்பமாக அமர்ந்து கண்டு களிக்க ஏற்ற படம்.

(ஜனவரி 2022 பொம்மி சிறுவர் இதழில் எழுதியது)

Share this: