அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

Ammavukku_makal

இது 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்.  சிறுவர்க்கான இக்கதைத் தொகுப்பில், மொத்தம் 16 கதைகள் உள்ளன.

மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால், இவ்வுலகம் எப்படியிருக்கும்? தண்ணீரைச் சேமிக்க வேண்டிய அவசியத்தையும் ஏரி கூளங்களைத் தூர்த்துக் கான்கிரீட் காடுகளாக மாற்றிய அவலத்தையும் ‘சொட்டுச் சொட்டாய் உயிர்த்துளி’ என்ற கதை, குழந்தைகள் மனதில் படுமாறு சொல்கின்றது.

‘கட்டை விரலின் கதை’ வேட்டுவ குலத்தில் பிறந்து, அநியாயமாகத்₂ தன் கட்டை விரலைப்  பாடம் கற்பிக்காத துரோணருக்குக் கொடுக்க வேண்டி வந்த அநியாயம் குறித்துப் பேசுகின்றது.

‘பழைய பாட்டியும் புதிய வடையும்’ என்ற கதையில், காகமும், நரியும் யாரையும் ஏமாற்ற நினைக்காமல், வேலை செய்து கொடுத்து அதற்குக் கூலியாக உணவைப் பெற வேண்டும் என்று நினைப்பவை.  பிறருடன் பகிர்ந்து உண்ண நினைப்பவை.  பழைய காகமும் நரியும் கதையை இக்காலத்துக்கேற்றபடி புதுமையாக மாற்றி எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’யில், இரண்டாம் வகுப்பு படிக்கும் கவின்குட்டிக்கு, அவள் அம்மா தூங்கத் தினமும் கதை சொல்ல வேண்டும்.  தமக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் சொல்லி முடித்த பிறகு மகளின் நச்சரிப்பு தாங்காமல், “நீ அம்மாவுக்கு ஒரு கதை சொல்லக்கூடாதா?” என்று கேட்கிறார் அம்மா.

அம்மா ஆசைப்பட்டபடி கவின் அவருக்கு ‘முயலும் ஆமையும்’ கதை சொல்கிறாள். அம்மா ஏற்கெனவே சொன்ன ஓட்டப்பந்தயக் கதையில்லை இது.  இது புதுக்கதை.  ஒரு சமயம் இரண்டுக்கும் ஒரு முட்டைக்கோஸ் கிடைக்கின்றது.  அதைத் தான் மட்டுமே முழுதாகத் தின்ன நினைக்கிறது முயல்.  போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர் முழு  முட்டைக்கோஸையும் தின்னலாம் என்று இரண்டும் முடிவு செய்கின்றன. அந்தப் போட்டி என்ன என்பதையும் அதில் எது வென்றது? என்பதையும் தெரிந்து கொள்ள கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.  

இந்தக் கதைகளுக்குத் தேவகோட்டை பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைந்து சிறப்பித்துள்ளார்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்மு.முருகேஷ்
வெளியீடுஅகநி, அம்மையப்பட்டு,வந்தவாசி செல் 98426 37637/94443 60421
விலை₹ 120/-
Share this: