இன்று (மே 19) எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின் 87 வது பிறந்த நாள். சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் கூடிய எழுத்தாளர்களில், இவர் மிக முக்கியமானவர். இந்திய சிறார் இலக்கியத்துக்கு, இவரின் பங்களிப்பு அளப்பரியது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான இவர், பிரிட்டானிய வம்சாவளியில் பிறந்தவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றவர்.
17 வயதில் இவர் எழுதிய ‘The Room on the Roof’ என்ற முதல் நாவலுக்கு பிரிட்டனின் பெருமைமிகு ‘John Llewellyn Rys’ நினைவுப் பரிசு கிடைத்தது. 300 க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கட்டுரைகள், 40 க்கும் மேற்பட்ட சிறார் படைப்புகள் என எழுதியிருக்கிறார்.
இவரது எழுபதாண்டு எழுத்து வாழ்க்கை துவங்குவதைக் கொண்டாடும் விதமாக, கடந்த 2020 ஜூலையில் ‘A Song of India’ என்ற நூல் வெளியிடப்பட்டது. 87 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, ‘Ruskin Bond All-Time Favourites for Children’ என்ற நூல், தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது.
ரஸ்கின் சுயசரிதையிலிருந்து சுவையான சில அத்தியாயங்கள், சிறுவர்களின் மனங்கவர்ந்த கதாபாத்திரங்களைக் கொண்ட பிரபலமான கதைகள் ஆகியவை தேர்தெடுக்கப்பட்டு, அவற்றோடு வாசகர்களுக்கு என்றும் விருப்பத்துக்குரியவையாக இருக்கப் போகும், சில புதிய கதைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 25 கதைகள் கொண்ட தொகுப்பு இது.
இவரது சிறு வயதிலேயே, இவருடைய பெற்றோர் மணமுறிவு பெற்றனர். தம் தந்தையுடன் பத்து வயது வரை, ஜாம்நகர், டேரா டூன், டெல்லி, சிம்லா ஆகிய ஊர்களில் வாழ்ந்தார். தந்தை இரண்டாம் உலகப்போரின் போது, விமானப் படையில் சேர்ந்த பிறகு இவரை போர்டிங் பள்ளிக்கு அனுப்பினார். தொடர்ச்சியான மலேரியா தாக்குதலால் இவர் தந்தை மரணமடைந்தார். இவர் மிகவும் நேசித்த தந்தையின் மறைவு, இவரைக் கடுமையாகப் பாதித்தது. தனிமை இவரை வாட்டியது. பிறகு இவர் டேராடூனில் இருந்த அம்மாவிடம் சென்றார். அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்திருந்தார்.
வீட்டின் இந்தப் புதிய சூழல் ரஸ்கினுக்கு ஒத்து வராததால், பெரும்பாலும் இயற்கையிடமும், புத்தகங்களிடமும் நேரத்தைச் செலவிட்டார். ‘The Room on the Roof’ என்ற கதையில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், நிஜ வாழ்வில் இவர் சந்தித்துப் பழகிய உயிருள்ள நபர்களே. 1951 ல் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றாலும், அங்கே இவர் மனம் ஒன்றவில்லை. டேராடூனுக்குத் திரும்பும் நாளுக்காக ஏங்கினார். 87 வயதாகும் இவர் தற்போது தமது தத்துக் குடும்பத்துடன், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரியில் வசிக்கின்றார்.
அண்மையில் இவர் Mint Lounge என்ற ஆங்கில மின்னிதழுக்குக் கொரோனா குறித்தும், தனிமை குறித்தும் பேட்டி அளித்துள்ளார். கொரோனா காரணமாக மன அழுத்தத்தாலும், மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு, இவர் பேட்டியில் சொல்லியிருக்கும் சில கருத்துகள் பயனுள்ளவையாக இருக்கும்.
2021 மார்ச் இறுதியில் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய இவர், எல்லோரையும் போலவே, கொரோனா போய்விட்டது என்று நம்பினாராம். கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், இவர் எழுதிய டைரியை அடிப்படையாக வைத்து, ‘A wonderful life: Roads to happiness’ என்ற நூலின் வெளியீடு குறித்து நம்பிக்கையோடிருந்த போது, ஏப்ரல் முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகமாகத் தொடங்கின என்றும், நம் அறிவியல் தொழில்நுட்பத்தை வைத்துத் தடுப்பூசி கண்டுபிடித்தாலும், இந்த வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகின்றது என்பதை அறிய மிகவும் வியப்பாகயுள்ளது என்றும் சொல்லியுள்ளார்.
சின்னச் சின்ன விஷயங்களில், அதுவும் இந்தக் கொரோனா இருண்ட காலத்தில் மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமென்றும், இந்த 87 வயதில், தாம் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி, மனம் மகிழ்ந்து பாராட்டுவது அதிகமாயிருப்பதாகவும் சொல்லும் இவர், வாழ்க்கையை முழுதுமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்கிறார்.
பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
“எழுத்தாளருக்கு பணி ஓய்வு உண்டா ?”
“எழுத்தாளர்கள் ஓய்வு பெறுவதில்லை; வாசிப்பைப் போன்றதே எழுதுவதும் என நான் நினைக்கிறேன். நீங்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு, அதை நிறுத்துவதில்லை; அது போல எழுதத் தொடங்கிய பிறகு, உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் எழுத்தில் வடிப்பது மிகவும் இயற்கை; அது நிற்கவே நிற்காது”.
“தனிமை விரும்பி என்று ஏற்கெனவே உங்களைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். இப்போதும் தனிமையை விரும்புகிறீர்களா ?”
“இளவயதில் தனிமை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது என்னைச் சுற்றி, இளம் வயதினர் இருப்பது பிடித்திருக்கிறது. இந்த அறையின் கடைசியில் ஒரு புத்தகம் இருந்து அது எனக்கு வேண்டும் என்றால், நான் எழுந்து எடுக்க வேண்டியதில்லை. நான் கேட்டால் போதும்; முதுமையில் இது ஒரு நன்மை; மக்கள் யாரும் சங்கடப்படாமலும், குறை சொல்லாமலும், அளவுக்கு மீறி உதவுகின்றார்கள்”
“இப்படிப் பிறரைச் சார்ந்திருப்பது, உங்களுக்குத் தொந்திரவாக இல்லையா?”
“பள்ளியிலிருந்து வெளிவந்த நாள் முதல், நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை. ஏனென்றால் இன்னமும் நான் சம்பாதிக்கிறேன். முன் எப்போதையும் விட, இப்போது அதிகமாகச் சம்பாதிக்கிறேன். உடலளவில் பிறரைச் சார்ந்திருக்கலாம்; ஆனால் யாருக்கும் நான் சுமையாக இல்லை”.
“தனிமை குறித்து?”
“நான் விரும்பும் தனிமை (Solitude) எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது. தனியாக இருப்பதால் ஏற்படும் தனிமை (loneliness) வேறு. அது உங்கள் மீது சுமத்தப்படுவது. உங்களைச் சுற்றி மக்கள் இருந்தாலும், நீங்கள் தனியாளாக உணர்வீர்கள். போர்டிங் பள்ளியின் முதல் நாள், எனக்கு நினைவிருக்கின்றது. என்னைச் சுற்றி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும், என்னை ஏறிட்டுக் கூட யாரும் பார்க்கவில்லை. நான் உடனே அங்கிருந்து வீட்டுக்கு ஓடி விட நினைத்தேன். சிலசமயம் குறிப்பிட்ட சூழ்நிலையில், நாம் இது போன்ற தனிமையை உணரமுடியும்.
உங்கள் கேள்விக்கு வருகின்றேன். நான் தனிமையை உணர்வது பழக்கப்பட்ட ஒன்று என்றாலும், இப்போது அவ்வளவாக இல்லை. என்னைச் சுற்றி என் ,குடும்பம் இருக்கின்றது எப்போதும் யாராவது என் கூட இருக்கின்றார்கள். அப்படியும் சில சமயம் நான் பழகிய பழைய நபர் ஒருவரை மிஸ் பண்ணுகிறேன். இப்போது உயிருடன் இல்லாத நண்பரையோ, வேறு நபரையோ மிஸ் பண்ணுகிறேன். அவர்களைச் சந்திப்பது இனி மேல் முடியாது என்று எனக்குத் தெரியும். முதுமையில் இது ஒரு நல்ல விஷயம். நாம் நினைவுபடுத்திப் பார்க்க, ஏராளமான நபர்கள் இருக்கின்றார்கள்”.
“நீங்கள் தனிமையை உணரும் போது, என்ன செய்வீர்கள் ?”
“நீங்கள் என்னை அழைப்பதற்கு முன்பு கூட, போர்டிங் பள்ளியில் என்னுடன் படித்த ஒருவரைப் பற்றி, நினைத்துக் கொண்டிருந்தேன். எப்படி நாங்கள் இருவரும் பள்ளியிலிருந்து நைசாக நழுவி, படங்கள் பார்க்கச் சென்றோம் எனபதை நினைத்தேன். அதை என் டைரியில் எழுதி வைத்தேன். ஒரு எழுத்தாளனாக என் சிறு அனுபவங்களையும் நினைவுகளையும் எழுதி வைப்பது, தேறுதல் தருவதாயிருக்கிறது.
இப்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, வீட்டுக்குள் ஏராளமான வசதிகள் வந்துவிட்டன. யாரையும் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்; தொலைக்காட்சி பெட்டியைத் திறந்து திரைப்படம் பார்க்கலாம்; இன்னும் பல விஷயங்கள் செய்யலாம்; இதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன் செய்ய முடியாது. இருந்தாலும் தனிமை இருக்கத் தான் செய்கிறது. எனவே எதிலாவது ஆர்வமோ, பொழுது போக்கோ இருப்பது அவசியம். எனக்கு எழுத்து இருக்கிறது”.
“இந்த உளகளாவிய கொரோனா நோய் பரவல் காலத்தில், நீங்கள் கற்றுக்கொண்டவை யாவை ?”
“இந்தக் கணத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். ஒவ்வொரு விடியலையும் பிறந்த நாளாக நினையுங்கள். இது ஒரு சிறப்பு தினம் என நம்பி, இதைச் சிறப்பாக்க முயலுங்கள். இது எனக்கு உதவுகின்றது. இன்றைய தினத்தை நான் வெள்ளிக்கிழமையாக நினைக்கிறேன் (பேட்டி தினம் செவ்வாய்க்கிழமை) அன்று தான் எனக்கு ஒரு முட்டை எக்ஸ்டிராவாக கிடைக்கும். நாம் எந்த வயதினராக இருந்தாலும் இந்தச் சின்ன விஷயங்கள் தாம், நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன.”
சிறுவர்களின் மனங்கவர்ந்த எழுத்தாளர், ரஸ்கின் பாண்ட் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்னும் பல காலம், நலமுடன் வாழ்ந்து, சிறார்க்குப் படைப்புகள் பல தர வேண்டும் என்று, ‘சுட்டி உலகம்’ வாழ்த்துகின்றது!