ஸ்பாரோவின் பெண் எழுத்தாளர் சந்திப்பு

sparrowmet_pic

https://www.iyal.net/post/sparrow-writters

மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW – Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குநராக எழுத்தாளர் அம்பை இருக்கிறார். 1988ஆம் ஆண்டு அம்பையும், அவரது நண்பர்களும் சேர்ந்து நிறுவிய இந்த ஆவணக்காப்பகம் வெறும் தகவல் சேகரிப்பு மையமாக மட்டும் செயல்படாமல், அகில இந்திய அளவில் பெண்களின் வரலாறு, வாழ்க்கைப் போராட்டம், அவர்தம் சாதனைகள் ஆகியவற்றை ஒலி, ஒளிக் காட்சிகள், வாய்மொழிப் பதிவுகள் எனப் பல வித்தியாசமான முறைகளில் ஆவணப்படுத்தும் அரிய பணியைச் செய்யும் அமைப்பாகவும் செயல்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் ஏற்கெனவே கவிதை உள்ளிட்ட பல இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்து நடத்தியிருந்த ஸ்பாரோ, இந்தாண்டு அகில இந்திய அளவில் சிறார் இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள பெண் எழுத்தாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பலதரப்பட்ட மொழிகளில் எழுதும் சிறார் பெண் எழுத்தாளர்க்கான சந்திப்பு நடப்பது இதுவே முதல் முறையென்று நினைக்கிறேன்.

கலந்து கொண்ட எழுத்தாளர் சிலர் அம்பையுடன்.

இவர்களில் சாகித்ய பால புரஸ்கார் விருது வென்ற ஆளுமைகள் பலர் இருந்தனர். பெங்காலியில் எழுதும் ஜோயா மித்ரா, மலைவாழ்ப் பெண்களுக்கு விழிப்பூட்டும் விதமாகச் சந்தாலி மொழியில் கதைகளை எழுதும் ஜோபா முர்மு, சிந்தியிலும், ஹிந்தியிலும் எழுதும் ராஷ்மி ரமணி, அஸ்ஸாம் மொழியில் எழுதும் பந்திதா ஃபுகன். கொங்கணியில் எழுதும் ஹர்ஷா சத்குரு ஷெட்யே ஆகியோர் அவர்களில் சிலர். கதை சொல்லுதல், நாடகம், பன்மொழிப் புலமை எனப் பன்முகத்திறமை பெற்ற பலர் இருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட நேபாளி மொழியில் எழுதும் சாங்மு லெப்ஷா என்பவருக்கு, 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. 

நிகழ்வு மூன்று நாட்கள், பயணம் போக வர இரண்டு நாள், எனப் பங்கேற்பாளர்க்கு 28/04/2025 முதல் 02/05/2025 வரை, மொத்தம் ஐந்து நாட்கள் உணவு, உறைவிட வசதி கிரீன் ஹில் வில்லாஸ், கல்யாண், மகாராஷ்டிரா என்ற ரிசார்டில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  தமிழ், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, அஸ்ஸாம், குஜராத்தி, பெங்காலி, மைதிலி, சந்தாலி, கொங்கணி, நேபாளி, சிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் 23 பேரோடு கதைசொல்லி, ஓவியர், சிறார் செயற்பாட்டாளர் என மேலும் மூவர் இணைந்து, மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். இதில் எழுத்தாளர் அம்பையும் அடக்கம்.

‘அம்பை’ என்ற புனைபெயரில் எழுதும் சி.எஸ்.லஷ்மி, சிறார் கதைகளும் எழுதியிருக்கிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி. 1960இல் ‘கண்ணன்’ சிறார் இதழில் நடந்த நாவல் போட்டியில் இவரது ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற சிறுவர் சாகச நாவல் முதற்பரிசு வென்று, அந்த இதழில் தொடராக வெளிவந்தது. அதை எழுதிய போது அவருக்கு வயது 16. அது தவிர ‘நிர்மலம்’ என்ற சிறுவர் கதை எழுதியிருப்பதோடு, சிறார் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துமிருக்கிறார். இளையோர்க்காக இவரெழுதிய தன்வரலாறு ‘Walking Erect with an Unfaltering Gaze,’ (நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்) குறுநூலை 2013ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.

தமிழ்நாட்டிலிருந்து சிறார் எழுத்தாளர்கள் ஞா.கலையரசி, ஈரோடு சர்மிளா, அறிவியல் எழுத்தாளர் நாராயணி சுப்ரமணியன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதும் சென்னையைச் சேர்ந்த சந்தியாவும், கணித மாணவியும் ஓவியருமான மதுஸ்ரீ என்பவரும் வந்திருந்தனர். முதல் நாள் மாலை எழுத்தாளர்க்கான அறைகள் ஒதுக்கப்பட்டன. மற்ற மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்களோடு சகஜமாகப் பழக வேண்டும் என்ற நோக்கத்தில், வெவ்வேறு மொழி பேசும் இருவர், ஒரே அறையில் தங்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர்.

இரவுணவுக்குப் பிறகு ஸ்பாரோ குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுக்காக கான்பரன்ஸ் ஹாலுக்குச் சென்ற எழுத்தாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது! பங்கேற்பாளரின் படத்துடன் கூடிய குறிப்புகள் அடங்கிய வண்ணப் போஸ்டர்கள் அந்த அறையின் நான்கு பக்கச் சுவர்களையும் அலங்கரித்தன. அவரவர் படத்தின் முன் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்ட எழுத்தாளர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவித்தனர். அம்பை தலைமையில் ‘ஸ்பாரோ’ குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், வந்தவர்களைக் கெளரவிக்கச் செய்திருந்த சிறப்பான முன்னேற்பாடுகளும், அன்பான விருந்தோம்பலும் அனைவரையும் நெகிழச் செய்தன!

29/04/2025 காலை சிறார் செயற்பாட்டாளர் ஸ்ருதி ஸ்ரீதரனின் தமிழ்ப் பாடல் இன்னிசையுடன் விழா இனிதே துவங்கியது. அடுத்துத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அமைந்த மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஞா.கலையரசி எழுதி, வானம் பதிப்பகம் வெளியிட்ட ‘டைனோசர் சொன்ன கதை’ என்ற சிறுவர் குறுநாவல், ஈரோடு சர்மிளா எழுதிப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட துணிச்சல்காரி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘நிலா த பிரேவ்’ என்ற இளையோர் நாவல், நேகா சிங் எழுதிய ‘நிக்கி த டிடெக்டிவ்’ என்ற ஹிந்தி நாவல் ஆகிய மூன்றும் வெளியிடப்பட்டன.

ஞா.கலையரசியின் ‘டைனோசர் சொன்ன கதை’, ஈரோடு சர்மிளாவின் ‘Nila, the Brave'(ஆங்கிலம்), நேகா சிங் எழுதிய ‘Nikki’ (ஹிந்தி)ஆகிய 3 நூல்களை வெளியிட்டபோது எடுக்கப்பட்ட படம்
எழுத்தாளர் அம்பை ‘டைனோசர் சொன்ன கதை’ நூலைப் பெற்றுக் கொண்ட படம்.

அடுத்துப் பங்கேற்பாளருக்கான கேள்வி நேரம். எழுத்தாளர்களுடைய படைப்புகளையும், ஆசிரியர் குறிப்பையும் ஏற்கெனவே எழுத்தாளர் அம்பை வாங்கிப் படித்து, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் பிரத்யேகமான கேள்விகளைத் தயாரித்து முன்கூட்டியே நிகழ்ச்சிநிரல் பட்டியலில் அனுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில்களை எழுத்தாளர் மேடையில் சொல்லும் நிகழ்வு இது.

சிறார் இலக்கியம் எழுத வந்ததன் பின்னணி, அவர்கள் சந்தித்த சவால்கள், எழுதத் தேர்ந்தெடுத்த மொழிக்கான காரணம், குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. ஹிந்தியில் பேசியவர்கள் உரையைத் தொகுப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பங்கேற்பாளர்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள இந்த நிகழ்வு பெரிதும் உதவியது.

ஒவ்வொரு நாள் இரவிலும் ஒரு முக்கியமான தலைப்பில் கலந்துரையாடலும், கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றது.  குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கதைகள் சொல்லும் போது அது எந்தளவுக்கு அவர்கள் ஆளுமையை வளர்க்கிறது? தாய்மொழியில் கதைகள் சொல்வது ஏன் அவசியம்? என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

குழந்தைகளும், இளையோரும் தங்கள் மொழி, வேர், பண்பாடு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை அறிந்து கொள்ளவும், அவற்றில் ஈடுபாடு கொள்ளவும் தாய்மொழியில் கதைகள் கேட்பதும்,வாசிப்பதும் மிகவும் அவசியம்; பின்னாளில் குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பதில் அதற்கு முக்கிய பங்கிருக்கிறது என்பது பெரும்பாலோரின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

“பெற்றோர் இருவருக்கும் ஒரே தாய்மொழி என்றால், குழந்தைக்குப் பிரச்சினையில்லை. இந்தியா போன்று பல்வேறு மொழிகள் புழங்கும் ஒரு நாட்டில், அப்பாவின் தாய்மொழி ஒன்று; அம்மாவின் தாய்மொழி வேறு; அவர்கள் குடும்பம் வசிப்பது, இரண்டு மொழிகளும் புழங்காத வேறு ஒரு மாநிலம் என்கிற போது குழந்தையின் தாய்மொழியாக எதை எடுத்துக் கொள்வது?” என்று அப்போது எழுப்பப்பட்ட கேள்வி, அனைவரையும் யோசிக்க வைத்தது.

எழுத்தாளர் சந்தியா இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாகக் குழந்தை வசிக்கும் ஊரிலும், தெருக்களிலும் எந்த மொழி பேசப்படுகிறதோ, குழந்தையைச் சுற்றி எந்த மொழி புழங்குகிறதோ, அதையே குழந்தையின் தாய்மொழியாகக் கருத வேண்டும்; பெற்றோரின் மொழியை மட்டுமே தாய்மொழியாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர் அனந்தமூர்த்தியின் கருத்தைத் தெரிவித்தார்.

இன்னொரு நிகழ்வில் கதைகளை மொழிபெயர்ப்பு செய்வது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.  ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்கும், இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் போது சந்திக்கும் சவால்கள் குறித்து, எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கடல்சார் உயிரினம் குறித்துத் தமிழில் எழுதும் அறிவியலாளர் நாராயணி சுப்ரமணியன், தாம் எழுதத் துவங்கியபோது Sea cow என்பதற்குக் கடல்பசு என்ற நேரடி மொழிபெயர்ப்புச் சொல்லே கிடைத்ததாகவும், தேடியலைந்து மீனவரிடம் ‘ஆவுளியா‘ என்ற சரியான தமிழ்ச் சொல்லைக் கண்டடைந்தாகவும் குறிப்பிட்டார்.

“ஓர் இந்திய மொழியிலிருந்து இன்னோர் இந்திய மொழிக்கு மாற்றம் செய்யும் போது கதாபாத்திரங்களின் பெயர்களை வாசிக்கவும், உச்சரிக்கவும் சிரமமாக இருக்கிறது. மொழிபெயர்க்கும் போது, மூலப் படைப்பின் பெயர்களை மாற்றலாமா?” என்ற கேள்வி அச்சமயம் எழுந்தது. “ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அது வாழும் நிலத்தோடும், மொழியோடும் சம்பந்தப்பட்டது என்பதால், வாசிக்கவும், உச்சரிக்கவும் சிரமமாக இருந்தாலும் மாற்றவே கூடாது” என்று அம்பை தம் கருத்தை வலியுறுத்திக் கூறினார்.

மேடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட சிறார் நூல்கள்

அங்கே மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிறார் நூல்களைப் பார்த்த போது, நூல் வடிவமைப்பு விஷயத்தில், நாம் இன்னும் அதிக தூரம் போகவேண்டும் என்றவுண்மை புரிந்தது. ஆனால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்நூல்களின் விலை நூறு ரூபாய்க்கு மேலிருந்ததையும் இங்கே சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சிறார் கதைப் புத்தகத்தின் விலை ரூ 50/-க்கு மேல் இருந்தால், 300 பிரதிகள் கூட விற்பனையாகாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பெற்றோர் புத்தகம் வாங்குவது செலவல்ல; அது குழந்தையின் அறிவுக்கான முதலீடு என்பதையுணர்ந்து அதிகளவில் புத்தகம் வாங்கத் துவங்கினால், இங்கும் பதிப்பகத்தார் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்த முன்வருவார்கள்.

ஆங்கிலத்தில் வெளியான சில நூல்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றிருக்கின்றன. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆங்கில நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘விதை’ (The Seed)என்ற 3-5 வயதினர்க்கான சிறு புத்தகம். 2005ஆம் ஆண்டு துலிகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை ஜெர்மனியின் White Raven Library 2006ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த குழந்தைப் புத்தகமாகத் தேர்ந்தெடுத்தது. இதன் ஆசிரியர் தீபா பல்சாவர் கதையெழுதி, அவரே ஓவியமும் வரைந்துள்ளார். இவரெழுதிய ‘Nani Walks to the Park’ என்ற புத்தகமும் பல விருதுகளை வென்றுள்ளது. ஆங்கிலப் புத்தகத்துக்கு இணையான நுணுக்கமான ஓவியங்கள் இதில் காணக் கிடைக்கின்றன.

‘விதை’ கதையில் பெண் குழந்தைக்கு ஒரு விதை கிடைக்கிறது. அதைத் தொட்டி மண்ணில் போட்டு, நீர் ஊற்றி வெயிலில் வைக்கிறாள். செடி முளைத்து இரண்டு இலைவிடுகிறது. அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி! பெரியவர்களிடம் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கிறாள். இது உயரமாக வளருமா? பூ பூக்குமா? பழம் பழுக்குமா? முடிவில் ‘இது எப்படி வளர்ந்தாலும் சரி; இதை நான் இப்படியே நேசிக்கிறேன்,’ என்று தொட்டியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள். பொறுமை, காத்திருத்தல், எதிர்பார்ப்பற்ற அன்பு என்ற சிறந்த பண்புகளைக் குழந்தைகளிடத்தில் விதைக்கும் கதையிது. “நீ வளர்ந்து பெரியவனான பிறகு இஞ்சீனியர் ஆவாயா? டாக்டர் ஆவாயா?” என்று தம் குழந்தையிடம் கேட்கும் பெற்றோருக்கும் இதில் முக்கியமான செய்தியிருக்கிறது. “குழந்தைகள் மட்டுமே ரசிக்கக்கூடிய ஒரு குழந்தைக்கதையென்றால், அது சிறந்த குழந்தைக்கதையல்ல,” என்கிறார் எழுத்தாளர் சி.எஸ்.லூயிஸ். (“A children’s story that can only be enjoyed by children is not a good children’s story in the slightest.”)

அடுத்து எழுத்தாளர்கள் அவர்களுடைய ஒரு கதையையோ, நாவலின் ஒரு பக்கத்தையோ, மேடையில் வாசிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் காட்டப்பட்டது. மேடையில் வாசிக்கப்பட்ட குழந்தைப் பாடல்களின் மொழி வேறாக இருந்தாலும், அதன் ஓசையும், சந்தமும் ரசிக்கக் கூடியனவாயிருந்தன.

ஜில்லா பரிஷத் பள்ளியிலிருந்து 25 மாணவர்களைப் பள்ளித்தலைமை ஆசிரியர் இந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார். தியேட்டர் அனுபவம் உள்ள எழுத்தாளர்கள் நாடகம் நடித்துக் குழந்தைகளை மகிழ்வித்தார்கள். குழந்தைகளுக்கு வண்ணப் பென்சில்கள் தந்து ஓவியம் வரைய வைத்துச் சிறப்பாக வரைந்தவர்க்குப் பரிசு கொடுத்தார்கள்.  

ஒவ்வொரு நாள் மாலையிலும் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அமைந்த சில படங்களும், பெண்ணிய நோக்கில் அமைந்த சில திரைப்படங்களும், UNICEF மீனா அனிமேஷன் படங்களும் காட்டப்பட்டன. ‘சகோரி’ என்ற மராத்தியக் குறும்படம் கணவனால் கைவிடப்பட்டுச் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் அவல வாழ்வையும், அவள் பலவாறாகக் கஷ்டப்பட்டுச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பின் அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தையும் சொன்னது. Sesham Milk-il Fathima என்ற மலையாளத் திரைப்படம் கால்பந்து வர்ணனையாளராக விரும்பும் பாத்திமா நூர்ஜகான் என்ற பெண்ணின் கதையை நெகிழ்ச்சியுடன் விவரித்தது. இறுதியாக ஒரு கலந்துரையாடல் நிகழ்வில், திரையிடப்பட்ட படங்கள் குறித்த தங்கள் எண்ணங்களை எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஞா.கலையரசிக்கு எழுத்தாளர் அம்பை நினைவுப் பரிசு வழங்கிய படம்.

முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் அம்பை நினைவுப் பரிசுகளை வழங்கினார். ஐந்து நாட்கள் பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சமையல், பிள்ளைகள் என எந்தவிதக் கவலையும் இல்லாமல் கலை, இலக்கியம் குறித்து மட்டுமே சிந்தித்தும், கலந்துரையாடியும் மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வின் மூலமாக எழுத்தாளர்கள் கற்றதும் பெற்றதும் மிக அதிகம். அகில இந்திய அளவில் சிறார் பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துச் சிறப்பாகக் கலை இலக்கிய விழா நடத்திய ஸ்பாரோவையும், இயக்குநர் அம்பையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *