எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
இவர் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ என்ற நூலை மலையாளத்திலிருந்து, ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற தலைப்பில், தமிழில் மொழிபெயர்த்து, 2017ஆம் ஆண்டு, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றார்.
தி.மாரிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட யூமா வாசுகி, பட்டுக் கோட்டையில் பிறந்தவர். இவர் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில், ஓவியம் பயின்றவர். இவர் கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஓவியரென்ற பன்முகங் கொண்ட படைப்பாளர். இவர் இது வரை மலையாளத்திலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும், அறுபதுக்கும் மேற்பட்ட சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து, தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு மிகச் சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளார்.
இந்தத் தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும் இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன.
‘தன்வியின் பிறந்தநாள்’ என்பது, முதல் கதை. இயற்கையின் மீதும், பிற உயிர்கள் மீதும் பேரன்பு கொண்ட சிறுமி தன்விக்கு, அன்று பிறந்த நாள். தன்வி தூங்கிய போது வெளியிட்ட மூச்சுக் காற்றிலிருந்து, மரம், விலங்கு பறவை, காடு,மழை,வானம், சூரியன், நிலா, விண்மீன், பாட்டு, ஓவியம் உட்பட, ஒரு பெரிய பட்டாளமே வெளியே வந்து, தன்விக்கு வாழ்த்து சொல்லக் காத்திருக்கின்றது.
அவை தன்விக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பி, சன்னலுக்கு வெளியே, ஒரு அற்புத ரோஜாவை மலரச் செய்கின்றன. தன்வி கண்விழித்தவுடன், சன்னல் வழியே அந்த அற்புத மலரைப் பார்த்து வியக்கின்றாள். நறுமணம் வீசும் மலரை முகர்ந்து, மகிழ்ச்சியடைகிறாள். குனிந்து, அதன் இதழ்களில் முத்தமிடும் சமயம், அங்கே காத்திருந்த அவளின் அன்புக்குரிய கூட்டம், பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, அவள் கன்னத்தில் முத்தமிடுகின்றது. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற பேதமின்றிக் குழந்தைகள் செலுத்தும் மாசற்ற அன்பினை, அதிபுனைவு கற்பனையுடன் கூடிய இக்கதை பேசுகின்றது. ‘தன்வியின் பூந்தோட்டம்’ என்ற கதையிலும், பூச்செடிகளின் மீது தன்வி கொள்ளும் நாட்டமும், ஒரு நாயின் மீது, அவள் காட்டும் பரிவும் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஆடுகளின் மீது பாசம் கொண்டு, தினந்தினம் அண்ணனும், தங்கையும் எப்படியெல்லாம், சுவையாக உணவு பிசைந்து கொடுக்கிறார்கள் என்பதை விரிவாகச் சொல்லும் கதை. ‘அன்பளிப்பு.’ ‘குட்டி நாய்க்குப் பெயர் கிடைத்தது எப்படி?.’ என்ற கதையில், தாயின்றித் தெருவில் அனாதையாகத் திரிந்த ஒரு நாய்க்குட்டி, எப்படி ஜெய் வீட்டில் அடைக்கலம் பெற்றுத் தனக்கென ஒரு பெயர் பெற்றது என்பதைச் சுவாரசியமாக விளக்குகிறார் ஆசிரியர்.
‘தலைவர் ஜெய் செய்தது சரியா?’ என்பது, சங்கிலித் தொடர் பாணிக் கதை. தலைவலியால் அவதிப்படும் அம்மா, மகனைத் தெருமுனையிலிருந்த ஒரு கடையிலிருந்து, தேநீர் வாங்கிவரச் சொல்கிறார். ஜெய் தன் பூனையைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, சலாம்பாய் கடைக்குச் செல்கிறான். பூனை ஜெய்க்குச் சூட்டிய பெயர், ‘தலைவர்!
சலாம்பாய் டீத்தூள் தீரப் போவதாகச் சொல்லி, டீத்தூள் வாங்கிவரச் சொல்கிறார். அங்கே போனால், ஜான்சன் வேறொரு வேலை கொடுக்கிறார். யாருக்கும் ‘நோ’ சொல்லாமல், இப்படியே தொடர்ச்சியாக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பும் போது, இரண்டு மணி நேரமாகி விடுகின்றது. நேரங் கழித்து வந்ததால் கோபிக்கும் அம்மா, தேநீரைக் குடிக்க மறுத்து விடுகின்றார்.
டீக்கடை வைத்திருப்பவர் சலாம்பாய். அவர் ஜான்சன் கடையில், டீத்தூள் வாங்குகிறார். ஜான்சனை மாமாவென்றும், பேக்கரி முதலாளி இசக்கி ஐயாவைச் சித்தப்பாவென்றும், ஜெய் வெகு இயல்பாக உறவுமுறை வைத்து அழைக்கிறான். மக்கள் சாதிமதங் கடந்து, தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகும் விதத்தையும், மதநல்லிணக்கத்தையும், இக்கதையை வாசிக்கும் சிறார் தெரிந்து கொள்வார்கள். அதே சமயம், தவிர்க்க முடியா இக்கட்டான சூழ்நிலையில், ‘நோ’ சொல்ல வேண்டியதன் அவசியத்தையும், இக்கதை உணர்த்துகின்றது.
‘குணசுந்தரி எழுதிய தேர்வு’ என்பது, மூளை வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி குழந்தையைக் குறித்த கதை. குணசுந்தரிக்கு வரைவதும், கதை கேட்பதும் பிடிக்கும். தினந்தோறும் கதை சொல்லும் ஆசிரியர் இராமமூர்த்தி, எந்த வகுப்புக்குச் சென்றாலும், அவளும் அங்கே சென்று, கதை கேட்கிறாள். எந்தத் தடையுமின்றிப் பள்ளி முழுக்கச் சுதந்திரமாக உலவுகிறாள்.
தேர்வு நடக்கும் நாளன்று, மரத்தடியில் விளையாடும் குணா, பள்ளித் தோட்டத்தை எப்படியெல்லாம் துப்புரவு செய்கிறாள் என்பதை, விரிவாக விளக்குகிறார் ஆசிரியர். அவள் வாயிலிருந்து வழியும் எச்சிலைப் பள்ளியில் யாருமே அருவருப்பாக நினைக்காமல், அவளை வெறுத்து ஒதுக்காமல், அன்புடன் பழகுவது சிறப்பு. இக்கதையை வாசிக்கும் குழந்தைகள், அவர்களை அறியாமலேயே, சிறப்புக் குழந்தைகளை நேசிக்கக் கற்றுக் கொள்வார்கள்.
இந்தக் குணசுந்தரி நிஜ கேரக்டர் என்றும், தாம் பணியாற்றிய பள்ளியில் படித்தாளென்றும், அங்கிருந்த ஆசிரியர்கள் எல்லாருக்குமே, அவள் செல்லப்பிள்ளையென்றும், ஆசிரியர் யூமா வாசுகி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
‘குழிக்குள் விழுந்த கோழிக்குஞ்சு கதை’யில், ஒரு கோழிக்குஞ்சு குழியில் விழுந்து, ஏற முடியாமல் தவிக்கும் போது, குழந்தைகளுக்கு மட்டுமே பதற்றம் ஏற்படுகின்றது. அதை எப்பாடுபட்டாவது, காப்பாற்றத் துடியாய்த் துடிக்கின்றனர். ஆனால் பெரியவர்களுக்கோ, கோழிக்குஞ்சின் உயிர், ஒரு பொருட்டே அல்ல; உரையாடல்கள் வழி, ஒரு சிறு உயிரின் மேல் பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமிடையே இருக்கும் அக்கறையின், தூர இடைவெளியை இக்கதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இதை வாசிக்கும் குழந்தைகளுக்குச் சோகத்தைத் தரக்கூடிய முடிவைத் தவிர்த்திருக்கலாம். ‘சிறகுத்தேள்’ கதையில், சிறகுகள் கொண்ட தேள், ஒரு புதுமையான கற்பனை.
‘எண்ணல்’ என்ற கதையில், தன்வி ஒரு நாள் பூத்திருக்கும் அரளிப் பூக்களை எண்ணத் துவங்குகிறாள். அப்போது ஒரு பூவில் தொங்கும் நீர்த்துளியில், சூரியஒளி பட்டு, வைரம் போல் பிரகாசிக்கிறது. அதனழகை ரசிக்கும் தன்வி, எண்ணிக்கையை விட்டுவிடுகிறாள். இப்படி ஒவ்வொரு நாளும் இடையில் ஒவ்வொன்றைப் பார்த்து ரசித்து, நடுவில் எண்ண மறந்து விடுகின்றாள். குழந்தைகளுக்கேயுரிய இயல்பான உற்சாக மனவோட்டத்தைச் சித்தரிக்கும் சுவாரசியமான கதை.
‘வலியினால் அல்ல’ என்பது பத்தாவது கதை. தன்வியும் கோபிகாவும் தோழிகள். கோபிகா சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவள். ஓவியப்போட்டியில் தொடர்ச்சியாகப் பரிசு வாங்குபவள். ஆனால் ஓர் ஓவியப்போட்டியில் எதிர்பாராவிதமாகத் தன்விக்குப் பரிசு கிடைக்கிறது. இதனால் கோபிகா ஆத்திரப்பட்டுத் தன்விக்குச் செய்யும் கெடுதல்களையும், அவற்றைத் தன்விகா நிதானமாகச் சமாளித்துக் கோபிகாவின் அன்பை மீண்டும் பெறுவதையும், இக்கதை சிறப்பாகச் சித்தரிக்கிறது. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற குறளுக்குப் பொருத்தமான கதை.
“யூமா வாசுகியின் உரைநடை, பொதுவாகக் கவித்துவ சொல்லாடல்களைக் கொண்டது. ஆனால் இந்நூலில் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் எளிமையும் விளக்கமும் இயைந்த மொழியைக் கையாண்டிருக்கிறார். கதையின் முழுமைக்குள் கவித்துவத்தை ஒளித்து வைத்துவிட்டு, மொழியை இலகுவாக்கி, உள்ளே செல்ல வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார்” என்று, தம் முன்னுரையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருப்பது உண்மை.
குழந்தைகளுக்கு இயல்பிலேயே, மிக விருப்பமான நாய், பூனை, ஆடு, கோழி, பூச்செடி போன்றவற்றின் மீது, அவர்கள் செலுத்தும் பேதமற்ற அன்பும், பாசமும் இக்கதைகளின் அடிப்படைக் கருத்து. ‘பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதில்லை; இயற்கையை நேசிக்க வேண்டும்; உயிர்களிடத்து அன்பு வேணும்’ என்ற உயரிய கருத்துகளை, வாசிக்கும் குழந்தைகள் மனதில், விதைக்கும் கதைகளிவை.