மாதம் தோறும் வெளியாகும் பொம்மி சிறுவர் மாத இதழின் ஆசிரியராகக் கவிதா ஜெயகாந்தன் அவர்களும், முதன்மை ஆசிரியராக ஜெ.ஜெயகாந்தன் அவர்களும் இருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து பொம்மி வெளியாகிறது.
செப்டம்பர் 2025 இதழின் அட்டைப்படத்தில் ‘லாட்டேவும் மந்திரக்கல்லும்’ என்ற சிறார் திரைப்படக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறார் திரைப்படம் குறித்த கட்டுரையை ஞா.கலையரசி எழுதியிருக்கிறார்.
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் என்பதால் முதல் பக்கத்தில் ‘ஆசான் தான்’ என்ற தலைப்பில் ஆசிரியரை மதித்து நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கே.பி.பத்பநாபன் எழுதிய பாடல் உள்ளது. அடுத்ததாக ‘வரம் தரும் தாவரங்கள்’ என்ற தலைப்பில் கரிசலாங்கன்னி, கடுகு, வல்லாரை போன்ற மூலிகைத் தாவரங்கள் குறித்த கட்டுரையைச் சிதம்பரம் இரவிச்சந்திரன் எழுதியுள்ளார். ‘வாலுவிடம் கேளுங்கள்’ என்பது மாதந்தோறும் இடம்பெறும் கேள்வி-பதில் பகுதி. இதில் அறிவியல், வரலாறு உட்பட பல்துறை சார்ந்து கேட்கப்படும் பல கேள்விகளுக்கு வாலு பதிலளிக்கிறார்.
செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் என்பதால் பெரியாரின் சிறப்புகளைச் சிறுவர்க்கு அறிமுகம் செய்யும் விதமாகத் ‘தந்தை பெரியார்’ என்ற கட்டுரையை அண்ணா அன்பழகன் எழுதியுள்ளார். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth)குறித்து ஜெயா வெங்கட்ராமன் எழுதிய கட்டுரை விளக்குகிறது. ‘புதிருக்கு விடையளித்த மணமகள்’ என்ற ஒடிசா நாட்டுப்புறக்கதையை இரா.கதைப்பித்தனும், ‘நல்ல சொல் பேசு’ என்ற செவிவழிக்கதையை நத்தம் எஸ்.சுரேஷ்பாபுவும் எழுதியிருக்கிறார்கள்.
ரஷ்ய இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்த ரா.கிருஷ்ணையா குறித்துத் ‘தமிழ்ச் சமூகம் மறந்த ரா.கிருஷ்ணையா’ என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ‘மன அழுத்தத்துக்கான மருந்து மரிக்கொழுந்து’ என்ற கட்டுரையை முனைவர் மா.ஆ.தீபாவும், ‘காட்டு எலி’ என்ற கட்டுரையை அ.அழகையாவும் எழுதியுள்ளனர். காடு வளமாக இருப்பதில் யானைகளின் பங்களிப்புக் குறித்துக் ‘களிறில்லாக் கானகம் கானகமன்று’ என்ற தலைப்பில் எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா கட்டுரை எழுதியுள்ளார். ‘வாசகர் குரல்’ பக்கத்தில் பொம்மியில் வாசித்த பதிவுகள் குறித்த கருத்துக்களை வாசகர்கள் பகிர்ந்துள்ளனர். துணுக்குச் செய்திகளும் ஒரு பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
இப்படியாக இயற்கை, சூழலியல், வரலாறு, கேள்வி-பதில், சிறார் சினிமா, கதைகள், ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், துணுக்குச்செய்திகள் எனப் பல்சுவை மிகுந்த இதழாக மிளிர்கிறது ‘பொம்மி’ மாத இதழ்! அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்!