ஜனவர் 2022 பொம்மி இதழை முன்வைத்து…
சுட்டி விகடன், கோகுலம் போன்ற பெரிய நிறுவனங்களின் சிறுவர் இதழ்களே நின்றுவிட்ட நிலையில், தமிழ் இந்து, தினமணி, தினமலர் போன்ற நாளிதழ்கள், முறையே மாயா பஜார், சிறுவர் மணி, சிறுவர் மலர் என்ற பெயர்களில் சிறுவர்க்கான இணைப்பை இலவசமாக வெளியிடுகின்றன. சிறுவர் இதழ்களின் விற்பனை சவாலாக இருக்கும் இக்காலச் சூழ்நிலையில், அச்சில் சிறுவர் இதழைப் பார்ப்பதே ஆனந்தமாக இருக்கின்றது!
இந்தப் பொம்மி இதழ் திருவாரூரிலிருந்து வெளியாகின்றது. கவிதா ஜெயகாந்தன் அவர்கள் ஆசிரியராக உள்ளார். T.S. ராகவன் அவர்கள் சிறப்பாசிரியராகவும், எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் பொறுப்பாசிரியராகவும் உள்ளனர்.
நம் சிறுவர்களுக்குத் தமிழக வரலாற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் “மாமன்னர்கள் வரிசை” என்ற வரலாற்றுக் கட்டுரை தொடரைச் சென்னிமலை தண்டபாணி எழுதுகின்றார். ஜனவரி 2022 இதழில் முதலாம் இராசேந்திர சோழனைப் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா எழுதிய .’குழந்தைகளின் விளையாட்டுத் தோழன்’ என்ற கட்டுரையில், பூனையைப் பற்றிய செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய ‘புத்திசாலியின் மரம்’ என்ற கட்டுரை மூங்கில் மரம் பற்றிச் சிறுவர்க்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் தெரியாத பல புதிய செய்திகளைத் தெரிவிக்கின்றது.
நாம் மறந்து போன ‘நாட்டுப்புற விளையாட்டுகள்’ குறித்த கட்டுரையை முனைவர் பே.சக்திவேல் எழுதியுள்ளார். நேதாஜி பிறந்த மாதம் ஜனவர் என்பதால் அவர் குறித்த பாடல் ஒன்றும், சிறு கட்டுரை ஒன்றும் இதில் வெளியாகியுள்ளன.
“வாலுவிடம் கேளுங்கள்!” என்ற பகுதியில், ‘கேள்வி-பதில்’ பகுதி இடம் பெற்றுள்ளது. இதில் பல துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. பொம்மி இதழில் மட்டுமின்றி, வாலு டிவி என்ற வீடியோ வடிவிலும், இந்தப் பதில்கள் தரப்படுகின்றனவாம்.
எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய ‘பச்சைக்கிளியின் நட்பு’ என்ற கதைப்பாடலும், இன்னும் இரு பாடல்களும் இதில் உள்ளன. நத்தம் எஸ்.சுரேஷ்பாபு, உமையவன் ஆகியோர் எழுதிய இரண்டு சிறுவர் கதைகளும், இரா.கதைப்பித்தன் எழுதிய மொழிபெயர்ப்புக் கதை ஒன்றும் இந்த இதழில் உள்ளன.
பெரியோர்களின் பொன்மொழிகளும், ஒளவையாரின் அமுதமொழிகளும், சிறந்த ஆங்கில சிறார் திரைப்படமான ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ குறித்த விமர்சனமும், இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் நாயகனான சுண்டெலியின் படமே, அட்டைப்படத்தை அலங்கரிக்கிறது.
மெக்சிகன் நாட்டில் அமைந்துள்ள பாறை, பிரிட்டனில் உள்ள விண்ட்சர் கோட்டை, ஹாலந்து டுயுலிப் மலர் வயல்கள் ஆகியவற்றைப் பற்றியும், இந்த இதழைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இவை மட்டுமின்றி இன்னும் சிறுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு செய்திகள் துணுக்குகளாக ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. சிறுவர்க்குச் சுவாரசியம் தரும் குறுக்கெழுத்துப் புதிரும் இதில் உண்டு.
வெறும் 30 ரூபாய்க்குச் சிறுவர்க்கு ஏராளமான பொது அறிவுச் செய்திகளையும், கட்டுரைகளையும், கதைகளையும் தாங்கிப் பல்சுவை இதழாக வெளி வரும் பொம்மி இதழை, அவசியம் வாங்கிச் சிறுவர்க்கு வாசிக்கக் கொடுங்கள்.
சிறுவர்க்குப் புத்தக வாசிப்பில் நாட்டம் ஏற்பட, முதலில் இது போன்ற பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்ட பல்சுவை இதழ்களைச் சிறுவர்க்கு வாங்கிக் கொடுத்து வாசிக்க செய்வதே, பெற்றோர் செய்ய வேண்டிய முதல் கடமை ஆகும்.
வகை | சிறுவர் மாத இதழ் |
வடிவம் | அச்சு |
வெளியீடு | பொம்மி, A.N.R. COMPLEX, 29H, தெற்கு வீதி, திருவாரூர்-610 001. செல்:- 9489773671, 9688227772 04366-244345 . |
விலை | தனி இதழ் ₹ 30/- ஆண்டுச்சந்தா ₹350/- |