இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன.
‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின் திருட்டுப் போன ஒட்டகத்தைப் பற்றிய விபரங்களைத் துல்லியமாகச் சொன்ன வழிப்போக்கர் மேல் திருட்டுப்பழி விழுகிறது. நமக்கும் அவர் மேல் சந்தேகம் வருவது உண்மையே. ஆனால் முடிவு, நம்மை “அட!” போட வைக்கிறது! “வீடும் காடும்” கதை மெல்லிய நகைச்சுவை இழையோட, குழந்தைகளின் இயல்பான குணத்தை வெளிப்படுத்துகிறது.
பேத்தியின் கற்பனை விளையாட்டில், சைக்கிள் விமானம் ஆகிறது; பேத்தி அமெரிக்காவில் இருந்து, இந்தியாவுக்கு வந்து செல்கிறாள். பாட்டியும் குழந்தையாகிப் பேத்திகளோடு சுவாரசியமாக விளையாட்டில் ஈடுபடுகின்றார். இவர்களது கற்பனை விளையாட்டை ரசனையோடு விவரிக்கிறது, ‘பாட்டியும் பேத்தியும்’ கதை.
‘அக்காவும் தம்பியும்’ – வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சண்டை போட்டு “கா’ விட்டுக் கொள்வதையும், அடுத்த நிமிடமே சமாதானம் ஆகிச் சேர்ந்து கொள்வதையும் சொல்லும் யதார்த்த கதை.
சிறார் மட்டுமின்றி முதியோரும், வீட்டில் அடைபட்டுள்ள அரைகுறை படிப்பாளிகளான பெண்களும், வாசிக்க ஏற்றவாறு மிக எளிய மொழியில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியரின் பேத்திகள் வரைந்துள்ள ஓவியங்களும், இதில் இடம் பெற்றுள்ளன.
வகை | சிறார் கதைகள் |
ஆசிரியர் | லைலாதேவி |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18 8778073949. |
விலை | ரூ 30/- |