ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளி மட்டுமே வென்றாலும், நம் இதயங்களைக் கவர்ந்த தங்க மகனாகத் திகழ்கின்றார்.
யாருமே எதிர்பார்க்காதவாறு பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலகச் சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தையும் வென்றார். பாகிஸ்தான் வரலாற்றில் தனிநபர் பிரிவில் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவே. மேலும் 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் இப்போது தான் பதக்கம் வென்றுள்ளது.
அர்ஷத் நதீம் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. சிறப்புப் பயிற்சிகள் எடுக்க அவருக்குப் போதுமான வசதி வாய்ப்பு இல்லை. புது ஈட்டி வாங்கக் கூட வசதியில்லாச் சூழ்நிலை. ஏழெட்டு ஆண்டுகளாகத் தாம் பயன்படுத்திய ஈட்டி சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகி உடையக் கூடிய நிலையிலிருப்பதால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன், யாராவது புது ஈட்டி வாங்கித் தந்து உதவுங்கள் என்று, நதீம் 2024 மார்ச் மாதம் பாகிஸ்தான் தேசிய ஃபெடரேசனுக்கும், பொது மக்களுக்கும் சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதைப் பார்த்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஒலிம்பிக்கில் தம் போட்டியாளராகக் களமிறங்கக் கூடியவர் என்று எண்ணாமல், “அர்ஷத் புது ஈட்டி வாங்கக் கஷ்டப்படுவதை அறிந்து, அதிர்ச்சியாக இருக்கிறது; அவர் ஈட்டி எறிதலில் மிகத் திறமையான வீரர். அவருக்குப் பாகிஸ்தான் அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உதவவேண்டும்; ஈட்டி தயாரிப்பவர்கள் அவரை ஸ்பான்சர் செய்து உதவ வேண்டும்” என்று முதல் ஆளாகத் தம் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
போட்டி முடிந்த பிறகு நீரஜ் சோப்ரா கொடுத்த பேட்டியில், “இன்று அர்ஷத் நஜீம் நாள். மிகச் சிறப்பாக அவர் விளையாடினார். நான் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினேன். சில இடங்களில் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். நம் தேசிய கீதம் இன்று இசைக்காமலிருக்கலாம். எதிர்காலத்தில் நிச்சயமாக வேறு இடங்களில் அது இசைக்கும்” என்று பதில் கூறினார்.
இவர்கள் இருவருடைய தாய்மார்களும் கொடுத்திருக்கும் பேட்டிகள், இரண்டு நாடுகளின் ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. நீரஜ் சோப்ரா அம்மாவான சரோஜ் தேவி, “வெள்ளி வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி தங்கம் வாங்கிய பையனும் என் மகன் தான். அனைவரும் கடினமான உழைப்புக்குப் பிறகே அங்கே செல்கின்றனர்” என்று ஒரு பேட்டியில் கூறினார்.
அர்ஷத் நஜீம் அம்மா, “நீரஜ் சோப்ராவும் என் மகன் போன்றவர் தான்; அவருக்காக நான் பிரார்த்திப்பேன். அவர் அர்ஷத்துக்குச் சகோதரர் போன்றவர். இறைவன் அவருக்கு நிறைய வெற்றிகளைப் பெறவும், நிறைய பதக்கங்களை வெல்லவும் அருள் புரியட்டும்” என்று கூறியுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் இருவரும் போட்டி முடிந்து பதக்கங்களைப் பெற்ற பின், நண்பர்களாக இணைந்து நின்று அவரவர் கொடிகளைப் போர்த்தியவாறு கைகுலுக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கின்றது. உண்மையான விளையாட்டு உணர்வு (Sportsmanship)என்பது வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதது; நாடு, மதம், இனம். மொழி போன்ற எல்லைகளைக் கடந்தது; மனிதநேயமிக்கது என்பதை இவர்களின் நட்பு, உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. மனதில் மேலோங்கியிருக்கும் மனிதத்தால் இவர்கள் இருவரும் போற்றப்படக் கூடியவர்கள்.
இருவருக்கும் சுட்டி உலகத்தின் வாழ்த்துகள்! பாராட்டுகள்!
Pc – Thanks – Times Now/ ANI/Internet