தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இளையோர்க்கான நூல்களைப் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ஓங்கில் கூட்டம், தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த நூல் வரிசையில் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரும், சுழற்பந்து வீச்சாளருமான பல்வங்கர் பலூவைப் பற்றி, இந்நூல் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
இந்த நூல் வரும் வரை இந்தப் பெயரைக் கூட, தமிழ்நாட்டில் நாம் யாருமே கேள்விப்பட்டிருக்க மாட்டோம்! அமேசான் கிண்டிலில் ‘ஓங்கில் கூட்டம்’ வெளியிட்ட இந்நூலைப் பாரதி புத்தகாலயம் அச்சில் வெளியிட்டுள்ளது.
இன்றைய கர்நாடகா மாநிலத்தில் தார்வாட் என்ற ஊரில் பிறந்தவர் பல்வங்கர் பலூ. இவர் இறந்த விலங்குகளின் தோலை உரித்து அதிலிருந்து பொருட்கள் செய்யும் ‘சமர்’ சாதியைச் சேர்ந்தவர். இந்து சமயத்தின் சாதி அடுக்கில் ‘சமர்’ மிகவும் கீழ் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், பலூவும் சிறு வயது முதலே சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானார். கிரிக்கெட் மைதானத்திலும், விளையாடிய அணியிலும் அவர் திறமைக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல், மிகவும் கேவலமாக நடத்திய போதும், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அசாத்திய திறமையால் முன்னேறினார்.
தாம் விளையாடிய அணியின் வெற்றி, தோல்விக்குக் காரணமாக இருந்த போதும், அவரால் அணிக்குத் தலைவராக முடியவில்லை. ஒரேயொரு முறை சில மணி நேரத்துக்கு மட்டுமே, அவரால் தலைவராக இருக்க முடிந்தது என்பது வேதனை! பலூவின் முன்னேற்றத்துக்குச் சாதி எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டது என்பதை, இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
புனேவில் ஆங்கிலேயர் விளையாடிய கிரிக்கெட் மைதானத்தைச் சுத்தம் செய்யும் சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கிப் பின் இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பலூவின் பெயரை, இதுவரை எந்த இந்திய கிரிக்கெட் மைதானத்துக்கும் வைக்கவில்லை. அதேசமயம் ஆங்கிலேயரின் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இரஞ்சி என்ற விளையாட்டு வீரரின் பெயரில், ரஞ்சிக்கோப்பை விளையாட்டுப் போட்டி நடக்கின்றது!
பலூவின் வாழ்க்கையோடு கூடவே, இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பித்து வளர்ந்த வரலாற்றையும், தெரிந்து கொள்ள முடிவது சிறப்பு. ஆசிரியர் இ.பா.சிந்தன் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இந்நூலை எழுதியுள்ளார். இளையோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.
வகை | இளையோர் கட்டுரை நூல் |
ஆசிரியர் | இ.பா.சிந்தன் |
வெளியீடு:- | ஓங்கில் கூட்டம் மின்னூல் & (அச்சில்) புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 9498062424 |
விலை:- | ரூ 100/- |