நம் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்த ஆன்றோர், சான்றோர், சமூகப் போராளிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும்விதமாகப் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ என்ற தலைப்பில் வரிசையாக நூல்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் விளக்கும் இந்நூல் வெளியாகியுள்ளது.
முத்துலட்சுமி பிறந்த புதுக்கோட்டையின் வரலாறு பற்றியும், அதை ஆண்ட மன்னர்களின் வரலாறு பற்றியும் முதலிரண்டு அத்தியாயங்களில் சுருக்கமாக அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். முத்துலட்சுமி அம்மா இசை வேளாளர் மரபைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தந்தை பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பதும் எனக்குப் புதுச்செய்திகள்.
பெண்கள் கல்வி கற்கத் தடையிருந்த அந்தக்காலத்தில் முத்துலட்சுமி கல்வியைத் தொடர, அவர் தந்தையின் விடாமுயற்சிகளும் புதுக்கோட்டை மன்னரின் ஆதரவும் பெரிதும் உதவியுள்ளன. அவரின் கல்விச் செலவுக்கு உதவித்தொகையும் மன்னர் அளித்துள்ளார். பெண் என்பதால் முத்துலட்சுமியின் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. அச்சமயத்தில் மன்னரே தலையிட்டு அவருக்குக் கல்லூரியில் மருத்துவ இடம் கிடைக்க உதவி செய்திருக்கிறார்.
மருத்துவப்பணியோடு இவர் அரசியலிலும் ஈடுபட்டுப் பெண்களுக்காகவும் அவர்தம் உரிமைகளுக்காகவும் போராடிச் சமூகப்பணி ஆற்றியிருக்கிறார். முக்கியமாகத் தேவதாசி ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்ததில் இவரது பங்கு முக்கியமானது. அடையாறில் இந்தியாவின் இரண்டாவது புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையைத் துவக்கியதும் இவரே.
மேலும் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, மேலவை துணைத்தலைவர், சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எனப் பலப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். மருத்துவத்துக்காகப் பத்மபூஷன் விருது பெற்ற முதல் மருத்துவர் இவர் தானாம். இப்படிப் பல முதல்களுக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர் மட்டுமின்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
வகை | வாழ்க்கை வரலாறு |
ஆசிரியர் | இரவி கார்த்திகா |
வெளியீடு:- | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14. |
விலை | ரூ 75/- |