ஆசிரியர் இ.பா.சிந்தன் ‘ஜானகி அம்மாள்,’ பல்வங்கர் பலூ,’ அப்பா ஒரு கதை சொல்றீங்களா?’ உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அப்பா மகளுக்குக் கதை சொல்வது போல இதன் பாணி அமைந்துள்ளமை சிறப்பு.
கதையின் இடையிடையே மகள் கேட்கும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் உத்தி மூலம் முதல் பெண் மருத்துவர்கள் குறித்த விபரங்களை நாம் அறியத் தருகிறார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் உலகளவில் பெண் மருத்துவர் ஒருவர் கூட இல்லையாம். இந்தியாவில் இல்லையென்பது தெரிந்த செய்தி. உலகளவிலும் இல்லை என்பது சற்று அதிர்ச்சி தரும் செய்தி தான்.
ஜேம்ஸ் பேரி என்ற அயர்லாந்து பெண் மருத்துவரைப் பற்றி இந்நூலை வாசித்துத் தான் தெரிந்து கொண்டேன். அக்காலத்தில் பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதி கிடையாது என்பதால் மார்கரெட் என்ற பெண்மணி ஜேம்ஸ் பேரி என்ற ஆண் பெயர் வைத்துக் கொண்டு மருத்துவம் படித்துச் சாகும்வரை ஆண் போலவே வேடமிட்டு வாழ்ந்திருக்கிறார்; ராணுவத்திலும் மருத்துவராகப் பணி புரிந்திருக்கிறார் என்பது நம்புவதற்குக் கஷ்டமான ஆச்சரியமான உண்மை.
இவர் தான் முதன்முதலில் சிசேரியன் செய்து அம்மாவையும் குழந்தையையும் காப்பாற்றினாராம். ‘பெண் மருத்துவராக முடியாது; ராணுவத்தில் பணியாற்ற முடியாது’ என்ற பிற்போக்குத்தனமான வாதத்தை முதல்முறையாக உடைத்து நொறுக்கி இவர் வரலாறு படைத்திருக்கிறார்.
இரண்டாவதாக அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர் எலிசபெத் ப்ளாக்வெல் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து முடித்தும் பெண் என்பதால் எந்த மருத்துவமனையிலும் வேலை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறார். இவர் பெண்கள் மருத்துவம் படிக்க வசதியாக இங்கிலாந்தில் பெண்கள் மருத்துவக்கல்லூரியைத் துவங்கிப் பின்னால் ஏராளமானோர் மருத்துவம் படிக்க வழி செய்திருக்கிறார்.
ஆனந்திபாய் ஜோஷி குறித்தும், முத்துலட்சுமி ரெட்டி குறித்தும் நாம் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் முதன் முதலாக மருத்துவக் கல்லூரிக்குப் போனவர் அபலா போஸ் என்பதும், முதல் மருத்துவராக வேலை செய்தவர் காதம்பினி கங்குலி என்பதும் பலரும் அறியாத புதுச்செய்திகள்.
முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும், மருத்துவம் படிக்கப் பெண்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போராடியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
வகை – வாழ்க்கை வரலாற்றுக்கதைகள் | கதைகள் |
ஆசிரியர் | இ.பா.சிந்தன் |
வெளியீடு:- | அறிவியல் வெளியீடு, சென்னை-86. |
விலை | ரூ 60/- |