முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர், மனித உரிமைகள் கல்வி நிறுவனத் தலைவர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். கல்வி உரிமை, மனித உரிமை, விளிம்புநிலைச் சமூகங்களின் மேம்பாடு, பெண் விடுதலை, சூழல் பாதுகாப்பு எனப் பலத் தளங்களில் பணியாற்றியவர்.
பல்வேறு தேதிகளில் கல்வி குறித்து இவரெழுதிய 16 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சில இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்தவை. இதற்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அணிந்துரை எழுதியுள்ளார். ‘ஜனநாயகம் காப்போம்;கல்வி காப்போம்’ என்ற முதல் கட்டுரையில் ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்க வேண்டிய பள்ளி மேலாண்மைக் குழு பற்றியும், அதன் அவசியம் பற்றியும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
“விளிம்பு நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் குரலற்ற ஒரு பெரும் மக்கள் திரள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளின் குவி மையமாகப் பள்ளி மேலாண்மைக் குழுவைக் காண வேண்டும்.” (பக்- 31)
அடுத்துத் தமிழக அரசு தொடங்கிய ‘தொடுவானம்’ என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டி இடம்பெற்றுள்ளது. இதில் அவர் துணைவேந்தராக இருந்த போது ஆற்றிய முக்கிய பணிகள், சந்தித்த சவால்கள், தற்போதைய தமிழ்நாட்டின் கல்வி முறை ஆகியவை குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். இன்னொரு கட்டுரை கொரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு தமிழ்நாடு அரசு செயல்படுத்திய இல்லம்தேடிக் கல்வி குறித்தும் அது சிறப்பாகச் செயல்பட்ட விதம் குறித்தும் பேசுகின்றது.
“இளைஞரை நம்புவோம்” என்ற கட்டுரை வன்முறை, போதைப்பழக்கம் காரணமாக வளரிளம் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள். அவர்களை அழிவிலிருந்து மீட்டுச் சமூக மேம்பாட்டுச் செயல்களில் ஈடுபடச் செய்தால், அவர்களுக்குப் பொறுப்பும் முதிர்ச்சியும் ஏற்படும் என்கிறார். பள்ளிகளில் தம்மை விடக் குறைந்த வயதும், குறைந்த வாசிப்புத் திறனும் உடைய மாணவர்க்குக் கற்பிக்கும் பொறுப்பை அவர்களுக்கு அளிக்கலாம் என்கிறார்.
வசதியான பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் செயல்படும் முன்னாள் மாணவர் (alumni) அமைப்பு போல் அரசுப் பள்ளிகளிலும் துவங்கிப் படித்து முடித்து நல்ல நிலையிலிருக்கும் முன்னாள் மாணவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இவர் யோசனை.
“பள்ளியின் வளர் இளம் பருவத்தினருக்கு முன்னாள் மாணவர்கள் உதவிக்கரம் நீட்டவேண்டும். வளரிளம் பருவத்தினர், adolescents குறித்த பிரச்சினைகள் இன்று விடைகளற்ற கேள்விகளாக நம் முன் நிற்கின்றன. இவர்களுக்கான கவுன்சிலர்கள் இல்லை. முன்னுதாரணங்கள், Role models இல்லை. வாழ்வில் வெற்றி கண்ட பள்ளி முன்னாள் மாணவர் அந்த வெற்றிடத்தை நிரப்பும் அரிய, புதிய பணியை மேற்கொள்ளவேண்டும்” (பக் 51)
40 ஆண்டுகளுக்கு முன் வலிமை மிக்க மாற்றுக்கல்வி இயக்கமாக இருந்த அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாகப் பெண் கல்வி மையம் வடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுதும் பரவ வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
‘கனவு ஆசிரியர்’ என்ற கட்டுரையில், “சமூக விடுதலைக்காகச் சிந்திக்கும் திறமை கொண்ட, சிந்திக்கும் தெளிவு கொண்ட, சிந்தனை வழி வாழக்கூடிய ஆசிரியர் தான் கனவு ஆசிரியர். உங்கள் கண்களின் கனவுகளை மாணவர் கண்களில் ஏற்றுங்கள். ஒளிபடைத்த தமிழகம் பிறக்கும்” எழுதியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்தும் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீதான் கொலை வெறித்தாக்குதல் குறித்தும் இரண்டு கட்டுரைகள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020இல் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விளக்கும் ஆசிரியர் தமிழ்நாடு அரசு அதனை முழுமையாக ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்குக் காரணங்களை விரிவாக எழுதியிருக்கிறார்.
“சமூக நீதியும் இட ஒதுக்கீடும் தமிழ்நாட்டின் மகத்தான பெருமையும் சாதனையும் ஆகும். இந்தியாவிற்கே வழிகாட்டியாக நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்தக் கல்விக் கொள்கை அதைப் பறித்துவிடும் பெரும் அபாயம் இருக்கிறது. கொள்கை முழுதிலும் ‘இட ஒதுக்கீடு’ என்ற வார்த்தையே இல்லை.” (பக் 114)
“ஜனநாயக நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஜனநாயகத்தை ஆழப்படுத்துவது தான். அதிகாரத்தைப் பரவலாக்குவது தான்” என்று குறிப்பிடும் முனைவர் வசந்தி தேவி கல்வி அமைப்புக்கும் இது முழுமையாகப் பொருந்தும் என்கிறார். தற்காலத் தமிழ்நாட்டுக் கல்விமுறையில் இருக்கும் போதாமைகள் குறித்தும், பள்ளியில் செயல்பட வேண்டிய மேலாண்மைக் குழுவின் அவசியம் குறித்தும் புதிய கல்விக் கொள்கையின் பாதகங்கள் குறித்தும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் கட்டுரைகள்.
வகை | கட்டுரைத் தொகுப்பு |
ஆசிரியர் | முனைவர் வே.வசந்திதேவி |
வெளியீடு | எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. செல் 9942511302. |
விலை | ரூ 180/- |