உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

Bookday2025_pic

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.

ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

துவக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்திலும் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பதிப்பகங்கள் புத்தக விலையில் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன. இந்த உலகப் புத்தக நாளில் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்! வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *