கோல்டன் பெசன்ட்

golden pheasant

பறவைகள் பல விதம் – 19

வணக்கம் சுட்டிகளே. இந்த மாதம் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் பறவையின் பெயர் கோல்டன் பெசன்ட். உலகின் மிக அழகிய, வண்ணமயமான பறவைகளில் இதுவும் ஒன்று. இதன் அறிவியல் பெயர் Chrusolophus pictus என்பதாகும். கிரேக்க மொழியில் Chrysolophus என்றால் பொன்னிறக் கொண்டை என்றும் pictus என்றால் வண்ணம் தீட்டப்பட்டது என்றும் அர்த்தம்.

இந்தப் பறவை இனத்திலும் வழக்கம் போல ஆண் பறவைதான் வண்ணமயமாகவும் வசீகரமாகவும் இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவை பெண் பறவையைச் சுற்றிச் சுற்றி வந்து தன் இறகு வண்ணங்களைக் காட்டி ஈர்க்கும்.

ஆண் பறவையின் கொண்டை இறகுகள் பொன்மஞ்சள் நிறத்திலும் உடல் இறகுகள் மஞ்சள், சிவப்பு, நீலம், கருப்பு, கருஞ்சிவப்பு, பழுப்பு என பல நிறங்களிலும் காணப்படும். கழுத்துப் பகுதியில் கைக்குட்டை கட்டியது போல வரிவரியாக ஆரஞ்சும் கருப்பும் கலந்த நிறத்தில் இறகுகள் அடுக்கடுக்காகக் காணப்படும். ஆண் பறவைக்கு நீண்ட வாலிறகுகளும் காணப்படும். ஆண் பறவையின் கண்கள் பளீர் மஞ்சள் நிறத்தில் நடுவில் சிறிய கருவிழியோடு இருக்கும். பெண் பறவையின் கண்கள் முழுவதும் கருப்பாக இருக்கும். கீழே படத்தில் இருப்பது பெண் பறவை.

பெண் பறவைகளுக்கு வசீகரிக்கும் நிறம் இருக்காது. கண்ணைக் கவராத பழுப்பு மற்றும் கருப்பு நிற இறகுகளோடு காணப்படும். காரணம் என்ன தெரியுமா? தரையில் முட்டையிட்டு அடைகாக்கும்போது எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பவேண்டும் அல்லவா? பெண் பறவையின் நிறம்தான் அதற்கு உதவுகிறது. ஒரு பெண் பறவை ஒரு தடவைக்கு எட்டு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடும். 22 நாட்கள் கழித்து குஞ்சுகள் பொரிந்து வரும். கோல்டன் பெசன்ட் குஞ்சுகள் பார்ப்பதற்கு கோழிக்குஞ்சுகளைப் போலவே இருக்கும். கோழிக் குஞ்சுகளைப் போலவே அவையும் முட்டையிலிருந்து பொரிந்து வந்த உடனேயே தாயோடு இரைதேடப் போகும். குஞ்சுகள் குறிப்பிட்ட காலம் வரை கருப்பு வெள்ளை புள்ளிகளோடு காணப்படும். அதுவும் தற்காப்புக்கான உத்திதான். 

கோல்டன் பெசன்ட் பறவையின் பூர்வீகம் சீனா. சீனாவின் மலைக்காடுகளில் இவை வசிக்கின்றன. சீன மக்கள் இதை ‘தங்கக்கோழி’ என்று குறிப்பிடுகின்றனர். சீனாவின் கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாக கோல்டன் பெசன்ட் தொன்றுதொட்டு விளங்கிவருகிறது. அது பீனிக்ஸ் என்ற புராணப் பறவையின் வழித்தோன்றலாக அம்மக்களால் கருதப்படுகிறது. சீனாவில் கோல்டன் பெசன்ட் பறவையைப் பாடாத கவிஞர்களும் இல்லை, கோல்டன் பெசன்ட் பறவையை ஓவியமாய்த் தீட்டாத ஓவியர்களும் இல்லை என்று சொல்லலாம். இந்தப் பறவையைப் பார்ப்பதே அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் அங்கு உண்டு.

கோல்டன் பெசன்ட் பறவைகள் அவற்றின் அழகு காரணமாக உலக நாடுகள் பலவற்றுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை கோழிகளைப் போலவே தரையில் மேய்ந்து இரை தேடும். அதிக தூரம் பறக்காது. இரவில் தூங்கும்போது மட்டும் தாழ்வான மரக்கிளைகளில் அமர்ந்து தூங்கும்.

கோல்டன் பெசன்ட் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் சொல்லவா? அவை தொடர்ந்து பல மணி நேரம் வெயிலில் திரிந்தால் அவற்றின் பளீரென்ற நிறங்கள் மங்கிப்போய்விடுமாம். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வசிப்பதால்தான் அவற்றின் நிறம் மங்காமல் பளிச்சென்று இருக்கிறதாம்.

கோல்டன் பெசன்ட் ஒரு அனைத்துண்ணி. தானியம், பழங்கள், கொட்டைகள் இவற்றோடு புழு, பூச்சிகளையும் தின்னும். இவற்றின் ஆயுட்காலம் ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரை இருக்கலாம்.

என்ன சுட்டிகளே, கோல்டன் பெசன்ட் பறவையைப் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு பறவையோடு உங்களைச் சந்திக்கிறேன்.

படங்கள் உதவி – Pixabay)

Share this: