நீலத்திமிங்கலம்

நீலத்திமிங்கலம்

விநோத விலங்குகள் – 18

வணக்கம் சுட்டிகளே. உலகிலேயே மிகப்பெரிய விலங்கினம் எது தெரியுமா? இப்போது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த டைனோசார்களை விடவும் பெரிய விலங்கு என்ற பெருமைக்குரியது நீலத்திமிங்கலம். நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் இருப்பதால் அதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது. நீலத்திமிங்கலத்தின் உயிரியல் பெயர் Balaenoptera musculus என்பதாகும்.

நீலத்திமிங்கல இனத்தில் ஆணை விடவும் பெண் அளவில் பெரியதாக இருக்கும். இவை கடற்பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. மீன்களைப் போல இவற்றால் நீருக்குள் சுவாசிக்க முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் மூச்சடக்கி நீருக்குள் இரைதேடும். பிறகு நீரின் மேற்பரப்புக்கு வந்து மூச்சு விட்டுப் போகும். அதன் மூச்சுத் துவாரங்கள் தலைப் பகுதியில் அமைந்திருக்கும். திமிங்கலம் தண்ணீருக்குள் இருக்கும்போது அந்த துவாரங்களில் தண்ணீர் புகுந்துகொள்ளாமல் தோல்தசை இறுக்கமாக மூடிக்கொள்ளும்.  

திமிங்கலம் பெரியதாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் எவ்வளவு பெரியது என்று சொல்லவில்லையே. நூறு மீட்டருக்கும் மேல் இருக்கும். அதாவது மூன்று பேருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்தால் எவ்வளவு நீளம் இருக்குமோ அவ்வளவு நீளம் இருக்கும். அதன் எடையோ முப்பது ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமமானது. அதன் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடைக்குச் சமம் என்றால் நீலத்திமிங்கலம் எவ்வளவு பெரியது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

திமிங்கலம் பாலூட்டி என்பதால் மற்ற பாலூட்டிகளைப் போலவே குட்டி போட்டுப் பாலூட்டி வளர்க்கும். அதன் குட்டி கூட மற்ற விலங்கினங்களை விடவும் பெரியதாக இருக்கும். அதாவது பிறக்கும்போதே எட்டு மீட்டர் நீளமும் சுமார் 4,000 கிலோ எடையும் இருக்கும். நாளொன்றுக்கு நூறு கிலோ என்ற அளவில் அதன் எடை அதிகரிக்கும்.

நீலத்திமிங்கலத்தின் இதயமும் மிகப் பெரியது. அது சுமார் 180 கிலோ எடை இருக்கும். திமிங்கலம் ஆழ்கடலில் இருக்கும்போது அதன் இதயம் ஒரு நிமிடத்துக்கு இரண்டு தடவை மட்டுமே துடிக்கும் என்பது எவ்வளவு விநோதம். இவ்வளவு பெரிய திமிங்கலத்துக்கு சாத்துக்குடி அளவில்தான் கண்கள் இருக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?  

உலகிலேயே மிகவும் அதிக அளவில் ஒலியெழுப்பும் விலங்கும் நீலத்திமிங்கலம்தான். அது எழுப்பும் ஒலியின் அளவு 180 டெசிபல் அளவு இருக்கும். ஜெட் விமானத்தின் சத்தத்தை விடவும் அதிகம். பொதுவாக 85 டெசிபல் அளவைத் தாண்டினாலே நமக்கெல்லாம் காது செவிடாகிவிடும்.

மிகப் பிரமாண்டமாக இருக்கும் திமிங்கலத்தின் இரையும் பிரமாண்டமாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் கிடையாது. ஏனென்றால் இவை பல்லில்லாத திமிங்கலங்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வருபவை. இவற்றின் பிரதான உணவு கூனிப்பொடி (krill) எனப்படும் மிகவும் குட்டியான இறால் இனம்தான். திமிங்கலம் அகலமாக வாயைத் திறந்து கடல் நீரை உள்ளே நிரப்பி, பிறகு தாடை வழியாக அவற்றை வடிகட்டிவிட்டு, கூனிப்பொடிகளைத் தின்னும். நீலத்திமிங்கலம் பொதுவாக 80 முதல் 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும்

இறைச்சி, கொழுப்பு போன்றவற்றுக்காக இவை திமிங்கல வேட்டைக்காரர்களால் பெருமளவு வேட்டையாடப்படுகின்றன. 1900-ம் ஆண்டு வாக்கில் அவற்றின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருந்தது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 3,50,000-க்கும் மேற்பட்ட நீலத்திமிங்கலங்கள் கொல்லப்பட்டதாக WWF நிறுவனம் தெரிவிக்கிறது. 1967-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் திமிங்கலங்களைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  இருந்தபோதும் தற்போது பத்தாயிரம் முதல் இருபதாயிரம் என்ற அளவிலேயே நீலத்திமிங்கலங்களின் எண்ணிக்கை உள்ளது. அதனால் அழிவாய்ப்புள்ள உயிரினமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டிகளே, நீலத்திமிங்கலம் பற்றித் தெரிந்துகொண்டீர்களா? அடுத்த மாதம் வேறொரு விநோத விலங்கோடு உங்களைச் சந்திக்கிறேன்.

(படங்கள் உதவி – Pixabay & Wikipedia)

Share this: