2011ஆம் ஆண்டு அறிவியல் வெளியீடாக வந்திருக்கும் இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் ஐந்து அறிவியல் புனைகதைகள் உள்ளன. அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த பேராசிரியர் சோ.மோகனா இந்நூலை எழுதியிருக்கிறார்.
‘நெஞ்சுக்குள் நூறு சிலிக்கன்’ என்பது முதல் கதை. ரமேஷ், அனு என்ற இரண்டு குழந்தைகள் கலிலீயோ என்ற விண்கலத்தில் ஏறி வியாழன் கோளுக்குச் செல்கிறார்கள். அங்கே இரண்டடி மட்டுமே உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். கணினி மூலமாக அவர்களுடன் இருவரும் பேசுகிறார்கள். அவர்கள் ஊசி மூலமாக உடம்புக்குத் தேவையான சக்தியைப் பெறுவதால் அவர்களுக்கு நாக்கு, இரைப்பை போன்ற உறுப்புகள் இல்லை. வித்தியாசமான அவர்கள் வாழ்வைக் கண்டு வியக்கிறார்கள். ஆனால் சில மணி நேரத்தில் வியாழன் கிரக அனுபவங்கள் சலிப்பை ஏற்படுத்துவதால் இருவரும் பூமிக்குத் திரும்புவது கதை.
‘என்ன பேரு வைக்கலாம்?’ என்ற கதையில் சோதனைக்குழாயில் முயலின் செல்லும், யூகலிப்டஸ் செல்லும் சேர்ந்து ஒரு புதிய உயிரினம் உருவாகிறது. விலங்கு செல்லையும், தாவர செல்லையும் இணைத்தால் அதிலிருந்து வெளிவரும் உயிர் தானே உணவு தயாரிக்க முடியும்;நகரும் என்ற புதுமையான கற்பனையில் உருவான கதை.
‘எறும்புகளின் சபதம்,’ என்பது தம் இனத்தாரைக் காலால் மிதித்துக் கொன்றவர்களைப் பழிவாங்கக் கிளம்பும் எறும்புகளின் கதை. ‘சிவகாசி சின்ன டாக்டர்’ என்பது மனித டாக்டர் இல்லாமல் கணினியே கிராம மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் கதையைச் சொல்கிறது.
‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற கதை செவ்வாயில் நடக்கிறது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள் இருக்கின்றன. ஆண்களே இல்லாமல் பெண்கள் மட்டுமே உள்ள உலகம் அது. பெண்கள் குழந்தை பெறுவதில்லை; உடல் செல்களிலிருந்தே புதிய உயிர்களை உருவாக்குகிறார்கள். சாவு இல்லை. நோய் இல்லை என அதிசயங்கள் நிறைந்த புதிய உலகம் அது!
புதுமையான விநோதமான கற்பனைகளுடன் கூடிய அறிவியல் புனைகதைகள் என்பதால், சிறுவர் மட்டுமின்றிப் பெரியவர்களும் வாசிக்க ஏற்ற புத்தகம்.
வகை | அறிவியல் புனைகதைகள் |
ஆசிரியர் | பேரா.சோ.மோகனா |
வெளியீடு:- | அறிவியல் வெளியீடு, 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. |
விலை | ரூ 40/- |