எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப் பரவலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
04/10/2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கவிருக்கின்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார்.
அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15! தந்தை பெரியார் பிறந்த தேதி, செப்டம்பர் 17! தமிழ்நாடு அரசு இவர்களது பிறந்த நாட்களை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகின்றது. நம் சமூக முன்னேற்றத்துக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றேத்துக்காகவும் தம் வாழ்நாள் முழுக்க உழைத்த இவ்விரு தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் கடமை!
மதுரையில் புத்தகத் திருவிழா 05/09/2025 துவங்கி 15/09/2025 வரை நடைபெறுகின்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவசியம் இந்தப் புத்தகக் காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகளின் பன்முகத் திறமை பெருகப் புத்தக வாசிப்பு முக்கியம்! மின்னணுச் சாதனங்களிலிருந்து அவர்கள் கவனத்தைத் திருப்பவும் புத்தக வாசிப்பு சிறந்த மாற்றாக அமையும்.
எங்கள் ‘சுட்டி உலக’த்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களின் பரிந்துரைகள் உள்ளன. பெற்றோர் அவற்றை வாசித்துப் பார்த்துச் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் குழந்தைகளின் படைப்புத் திறனை வெளிக்கொணரப் பாடப்புத்தகம் தாண்டிய புத்தக வாசிப்பு அவசியம்.
உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளின் போது புத்தகம் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தைத் துவங்குங்கள். வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம்! அடுத்த தலைமுறை அறிவார்ந்த சமுதாயமாக மலர நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.