அன்புடையீர்! வணக்கம்.
இரண்டு முக்கியத் தலைவர்களின் பிறந்த நாள் இம்மாதம் வருவதால் செப்டம்பர், நம் தமிழ்நாட்டுக்கு, முக்கியமான மாதம். அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15! தந்தை பெரியார் பிறந்த தேதி, செப்டம்பர் 17! நம் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட இவ்விரு தலைவர்களையும், இவர்கள் பிறந்த நாட்களில். நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் கடமை! தமிழ்நாடு அரசு இவர்கள் பிறந்த நாட்களை முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகின்றது.
பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், இந்திய வீரர்கள் மூன்று தங்கம், ஐந்து வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதினைந்து பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
அண்மையில் இரண்டு சென்னை அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவரை அழைத்து, மாணவிகளிடம் பேச அனுமதித்தது பெரும் பிரச்சினை ஆகியிருக்கிறது. “ஒரு மந்திரம் சொன்னால், நெருப்பு மழை பொழியும்; ஒரு மந்திரம் சொன்னால், இங்கிருந்து அங்கே பறக்கலாம்” என்பன போன்று அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத மூடத்தனமான விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். போன பிறவியில் செய்த பாவத்தினால் தான், இந்தப் பிறவியில் உடல் குறையுடன் பிறக்கின்றனர் என்று பேசி, மாற்றுத் திறனாளிகளை அவமதித்து, அவர்கள் மனதைக் காயப்படுத்தியிருக்கிறார். பாவம், புண்ணியம், மறுபிறப்பு போன்றவற்றைப் பேசக்கூடாது என்று எதிர்த்த மாற்றுத் திறனாளி ஆசிரியரைக் கேவலமாகப் பேசி அவமதித்திருக்கிறார். இம்மாதிரியான ஆட்களை நம் பள்ளிகளுக்குள் உரை நிகழ்த்த அனுமதிக்கவே கூடாது.
தங்கள் பள்ளி ஆசிரியரை உரை நிகழ்த்த வந்தவர் அவமதிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், மாணவிகள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது, மிகவும் வேதனை தந்த விஷயம். அந்த அளவுக்கு மாணவிகளைக் குறைந்த நேரத்தில், அவர் மூளைச் சலவை செய்துவிட்டார்! இந்த மாதிரியான அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை அரசுப் பள்ளியில் பேசக் கூடாது என்று துணிவுடன் எதிர்த்த ஆசிரியர் போற்றுதலுக்குரியவர்!
“இந்த மகாவிஷ்ணுவை அரசுப் பள்ளிக்குள் உரை நிகழ்த்த அனுமதித்தது யார்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார்?” என்ற விசாரணை நடக்கிறது. தொடர்பு உடையவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற வள்ளுவரின் கூற்றுப்படி,
யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமை என்பதை நாம் மறக்கவே கூடாது.
மதுரையில் செப்டம்பர் 6 முதல் 16 வரை, புத்தகத் திருவிழா நடக்கிறது. வாய்ப்புள்ள பெற்றோர் அவசியம் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். வாசிப்புப் பழக்கத்தைச் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யுங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.