தலையங்கம்-அக்டோபர்-2024

Girlblack_pic

எல்லோருக்கும் அன்பு வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை, நாம் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்!

இந்தியத் தொழில்துறையின் நம்பிக்கை முகமாக இருந்த தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று (09-10-2024) மறைந்தார். இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு அபரிமிதமானது. அவரின் மறைவு ஒட்டு மொத்த இந்தியாவைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக, ஆழ்ந்த இரங்கல்!

மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் விதமாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சிறந்து விளங்கிச் சாதனை செய்பவர்களுக்கு, ஆண்டுதோறும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில், நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த விருதை நிறுவியவர், அறிவியல் அறிஞர் ஆல்ஃபிரெட் நோபல். இது உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விருது.

07/10/2024 முதல் நோபல் விருதுகளின் வாரம். முதலில் மருத்துவத்துக்கான விருது அறிவிப்பு வெளியானது. 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியலுக்கான விருதை, விக்டர் ஆம்ப்ரோஸ்( Victor Ambros),கேரி ருவ்குன் (Gary Ruvkun) ஆகியோர் பெறுகிறார்கள். இவர்கள் இருவரும் அமெரிக்க உயிரியல் அறிஞர்கள்.

மைக்ரோ ஆர்.என்.ஏ, (microRNA) என்ற கண்டுபிடிப்புக்காக, இவர்கள் விருது பெறுகிறார்கள். பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின? மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள, இந்தக் கண்டுபிடிப்பு உதவி செய்யும்.

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு உயிரணு(cell)விலும் உள்ள புரதங்களைப்(Proteins) பற்றிய ஆராய்ச்சிக்காக, இவர்கள் இவ்விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தி, இயந்திரக் கற்றலுக்குத் (machine learning) தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். செயற்கை நரம்பியல் இணைப்புகள் (artificial neural networks) மூலம், இயந்திரக் கற்றலைச் (machine learning) செயல்படுத்தும் அடிப்படைக் கண்டுபிடிப்புகளுக்காக, இவ்விருது வழங்கப்படுகிறது. ஸ்டாக்ஹோமில் வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாள் விழாவில், இவ்விருதுகள் வழங்கப்படும்.

சிறுவயதிலேயே பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்கு அவசியம் செல்லுங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி வாசியுங்கள்!

அனைவருக்கும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்!

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: