அன்புடையீர்!
வணக்கம். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! தேர்வை நல்லவிதமாக எழுதி முடித்து எதிர்காலத்தில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!
இந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுப் பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன. வாட்சப்பில் மகளிர் நாளுக்கான வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.
பெண்கள் புதுப்புடைவை, நகைகள் வாங்கி இந்நாளைக் கொண்டாடினர். ஆனால் அடிப்படையில் இது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் இன்றைய தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை, இந்நாள் வலியுறுத்துகிறது. மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான வரலாற்றை, அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
1910இல் சர்வ தேச மகளிர் தினத்தை முதன்முதலில் கிளாரா ஜெட்கின் என்பவர் அறிவித்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. பெண்கள் போராடி போராடித் தான் வாக்குரிமை பெற்றனர். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் கல்வி கற்கத் தடையிருந்தது. பெண் கல்விக்காகப் போராடிய சாவித்திரி பாய் பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அதற்காக அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்று பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் போராடிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்ணியம் பேசுவோர் ஆண்களுக்கு எதிரிகள் அல்ல. பெண்களையும் தங்களுக்குச் சமமாக நடத்த வேண்டுமென்பதே பெண்ணியவாதிகளின் அடிப்படை கோரிக்கை.
பெற்றோர் பெண் என்பவள் போகப் பொருள் அல்ல என்பதை, ஆண் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சொல்லி வளர்ப்பது அவசியம். பெண்ணைச் சக உயிராய்ப் பாவித்து, அவர்களின் உணர்வுகளை மதித்துத் தோழமையுடன் நடத்த வேண்டும் என்பதை, ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டியது, இக்காலத்தின் கட்டாயம்.
20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இயற்பியல் மேதையாகக் கொண்டாடப்படும் ஐன்ஸ்டீன் மார்ச் மாதம் பிறந்தவர். ஒளி மின் விளைவைக் (Law of the Photoelectric effect) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், குவாண்டம் எந்திரவியல்(Quantum Mechanics) சார்பு கோட்பாடு (special theory of relativity)ஆகியவற்றில் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காகவும் 1921இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியை இவருக்கு மிகவும் பிடிக்கும். “வருங்காலத் தலைமுறைக்கு இவர் தாம் ரோல் மாடல்’ என்று காந்தியைப் புகழ்ந்தவர் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே மாணவர்களின் அறிவியல் சிந்தனையைத் தூண்டி அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். குழந்தைகள் எதிர்காலத்தில் பன்முகத்திறமை உள்ள ஆளுமைகளாகத் திகழ இளம்வயது முதலே வாசிப்பைத் துவங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற நூல்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பல்வேறு புத்தகங்களை வாங்கி வாசிக்கக் கொடுத்து அவர்கள் படைப்புத் திறமையை வெளிக்கொணர வேண்டும்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.