தலையங்கம் – ஜூன் 2025

schoolreopen_pic

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்திருக்கிறது. புதிய கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ந்து இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், அவர்களை நேசித்து வழி நடத்தும் ஆசிரியர்களுக்கும் புதிய கல்வியாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

கோடை விடுமுறையில் எத்தனை பேர், உங்கள் ஊரில் உள்ள நூலகம் சென்றீர்கள்? புத்தகம் எடுத்து வாசித்தீர்கள்? இந்த ஆண்டு முதல் உங்கள் வீட்டில் உங்களுக்கு என்று ஒரு தனி நூலகம் தொடங்குங்கள். ஓர் அலமாரியில் ஒரு தட்டு உங்களுக்காக ஒதுக்கிக் கொண்டு, புத்தகம் வாங்கிச் சேர்க்கப் பழகுங்கள்.

உங்கள் பிறந்த நாளுக்குப் பரிசாக உடைகள் மட்டுமின்றிப் புத்தகங்களைப் பெற்றோரிடம் கேட்டு வாங்குங்கள். தமிழ்நாடு முழுதும் மாவட்டத் தலைநகர்களில் தொடர்ந்து புத்தகத் திருவிழா நடந்த வண்ணம் உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி வாசியுங்கள்..

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் ஜூன் 2025 ‘கனவு ஆசிரியர்’ இதழில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில் இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன் கூறியிருப்பதிலிருந்து, சில முக்கியமான வரிகள் உங்களுக்காக:-

“தமிழ் வழியில் தான் பள்ளியில் பயின்றேன். ஆனால் அது எந்த வகையிலும் என்னைக் குறைவாக்கிவிடவில்லை. எந்த மொழியில் பயில்கிறோம் என்பதைவிட, புரிந்து பயில்கிறோமா என்பதே முக்கியம்.  ஆசிரியர்களிடமும் மாணவர்களிடம் நான் கூறியது ஒன்று தான்.

குழந்தைகளின் பன்முகத் திறமை பெருக, பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம். எனவே பெற்றோர் அவசியம், குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே வாசிப்பை அறிமுகம் செய்யுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். கதைப் புத்தகம் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்களின் படைப்புத் திறனை வெளிக் கொண்டு வரும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: