சுட்டிகளுக்கும், பெற்றோருக்கும் அன்பு வணக்கம். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக, 2024 ஆம் ஆண்டு பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்றிருக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக, இனிய வாழ்த்துகள்!
‘தன்வியின் பிறந்தநாள்’ சிறார் கதைத்தொகுப்பு குறித்த, விரிவான அறிமுகக் கட்டுரை, சுட்டி உலகத்தில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் 10 கதைகள் உள்ளன.
குழந்தைகளுக்கு இயல்பிலேயே, மிக விருப்பமான நாய், பூனை, ஆடு, கோழி, பூச்செடி போன்றவற்றின் மீது, அவர்கள் செலுத்தும் பேதமற்ற அன்பும், பாசமும் இக்கதைகளின் அடிப்படைக் கருத்து. ‘பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதில்லை; இயற்கையை நேசிக்க வேண்டும்; உயிர்களிடத்து அன்பு வேணும்’ என்ற உயரிய கருத்துகளை, வாசிக்கும் குழந்தைகள் மனதில், விதைக்கும் கதைகளிவை. அவசியம் வாங்கி வாசியுங்கள்.
‘சுட்டி உலகம்’ காணொளியின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்பது, மிக மகிழ்ச்சியான செய்தி. எங்கள் காணொளிப் பாடல்களைக் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டி, மகிழச் செய்யுங்கள். ‘சுட்டி உலகம்’ தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல் அறிமுகம் உள்ளன. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்க, இந்த நூல் விமர்சனம் பெற்றோருக்கு உதவும்.
தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகர்களில், புத்தகத் திருவிழா தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்கு, வாய்ப்புள்ளோர் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் விரும்பும் கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தை இளம் வயதிலேயே அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளின் படைப்பூக்கம் பெருக, பாடப்புத்தகம் தாண்டிய புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்.
இந்த ஜூலை மாதம் பிறந்த ஓர் ஆளுமை குறித்து, நாம் தெரிந்து கொள்வோமா?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968) புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் பெற்றோர் நாராயணசாமி, சந்திரம்மாள் ஆகியோர்.
பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அக்காலத்தில், இவர் போராடி, தந்தையின் ஆதரவுடன், பள்ளிப்படிப்பை முடித்தார். பின் 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து,1912-ல் தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்; சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்; சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பல முதல்களுக்குச் சொந்தமானவர்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவர் ஆனார். இவர் பதவிக்காலத்தில் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணம் தடை செய்யும் சட்டம் போன்ற சில புரட்சிகரச் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கினார். 1956 இல் பத்ம பூஷன் விருது பெற்றார்.
இத்தகு பெருமை வாய்ந்த முத்துலட்சுமி அம்மையாரின் நினைவைப் போற்றுவோம்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.