தலையங்கம் – பிப்ரவரி 2026

editorialfeb_pic

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

49வது சென்னை புத்தகத் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. யார் யாரெல்லாம் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றீர்கள்? புத்தகம் ஏதும் வாங்கினீர்களா? துவங்கியிருக்கும் இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் இத்தனை புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற இலக்கு வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பியுங்கள். வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாதவர்கள் இந்த ஆண்டு முதல் வாசிப்பைத் துவங்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

சென்னை புத்தகத் திருவிழா முடிந்த பிறகு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தொடர்ச்சியாகப் புத்தகக்காட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தகக் காட்சிக்கு அவசியம் சென்று வாருங்கள். என்னென்ன தலைப்புகளில் புத்தகம் கிடைக்கின்றன என்று பார்ப்பதே சுகமான அனுபவம் தான்.  

இம்மாதம் 21ஆம் தேதி உலகத் தாய்மொழி நாளாகக் (The International Mother Language Day) கொண்டாடப்படுகின்றது. உலக மக்களிடையே அமைதியைப் பேணவும், புரிதலை மேம்படுத்தவும், கண்ணியத்தைக் காக்கவும்  மொழியியலில் பன்முகத்தன்மை, பல மொழி பேசுதல் ஆகியவை முக்கியம் என்பதை மீண்டும் உறுதி செய்யவும் 2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை யுனெஸ்கோ உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடுகிறது.

குழந்தைக்குத் தாய்மொழியே உலகத்துடனான முதல் தொடர்பு.  தாய்மொழியே மனிதச் சிந்தனையின் திறவுகோல்; குழந்தையின் படிப்படியான இயல்பான மூளை வளர்ச்சிக்கும், பகுத்தறிவு சிந்தனை செயல்பாட்டுக்கும் படைப்பாற்றலுக்கும் தாய்மொழி மிகவும் அவசியம் எனப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

உலகமுழுதும் பேசப்பட்டு வந்த 8324 மொழிகளில், 7000 மொழிகள் மட்டுமே இன்று வழக்கில் இருக்கின்றன.  வேகமாக மாறி வரும் உலகில் பல மொழிகள் அழியும் நிலையிலிருப்பதாக யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. 

மொழியே ஓர் இனத்தின் அடையாளம். மொழி அழிந்தால். அம்மொழி பேசுவோரின் இன அடையாளங்களும், கலாச்சாரங்களும் அழிந்து விடும். எனவே ஓர் இனத்தின் அடையாளமாக விளங்கும்  தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், தாய்மொழி வழிக்கற்றலின் அவசியத்தையும் வலியுறுத்துவது இந்நாளின் முக்கிய நோக்கம்.

இக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் ஆங்கில மீடியத்தில் படிக்கின்றனர். எனவே குழந்தைகள் தமிழை வாசிப்பதிலும் புரிந்து கொள்வதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தான் நம் அடையாளம்! நம் தாய்மொழியாம் தமிழ் மீது, பற்று கொள்வோம்! தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாகக் கருதுவோம்! பெற்றோர் தமிழ்ப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளின் தமிழ் வாசிப்பை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் சிறந்த தமிழ் நூல்களை வகுப்பில் மாணவர்க்கு அறிமுகம் செய்து வாசிக்கத் தூண்ட வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கிலிருக்கும் நம் செம்மொழித் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை! பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு, குழந்தைகளின் படைப்புத் திறனைத் தூண்டி அவர்களது பன்முகத்திறமையை வெளிக்கொணரும் ஆற்றல் மிக்கது.

அனைவருக்கும் வாழ்த்துகள்!

என்றென்றும் அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *