அனைவருக்கும் வணக்கம்.
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 15/08/1947 அன்று தன் முதல் சுதந்திர நாளைக் கொண்டாடியது. அதன்படி இந்தாண்டு தன் 79ஆம் சுதந்திர நாளை இந்தியா கொண்டாட இருக்கின்றது. எல்லோருக்கும் இனிய அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துகள்!
இந்திய விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்நாளில் நம் நாட்டு விடுதலைக்காக வீரமரணம் எய்திய போராளிகளை நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை! இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் அவர்கள் தியாகத்தால் நமக்குக் கிடைத்த பரிசு என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.
இம்மாதம் ஆகஸ்ட் 1 முதல் ஈரோடு புத்தகத் திருவிழா 230 ஸ்டால்களுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 12 வரை இது நடக்கும். தற்போது மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வாய்ப்புள்ள பெற்றோர் அவசியம் உங்கள் பிள்ளைகளோடு புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள். அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக் கொடுங்கள். கூடவே அவர்கள் வயதுக்கேற்ற சில புத்தகங்களை நீங்கள் தேர்வு செய்து வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தைச் சிறு வயதிலேயே அறிமுகம் செய்யுங்கள். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளின் ஆளுமைத் திறன் வளரப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம். குழந்தைகளின் பிறந்த நாளுக்குப் புத்தகம் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தைத் துவங்குங்கள்.
இம்மாதம் ஆகஸ்ட் 1ஆம் தேதி மறைந்த பிரபல கல்வியாளர் முனைவர் வே.வசந்திதேவி அவர்களுக்கு இன்று காலை 10/08/2025 பத்து மணியளவில் அண்ணாசாலை தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழக அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும்; எந்த அரசுப் பள்ளியையும் மூட விடாமல் பாதுகாக்க வேண்டும்; பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்திட வேண்டும்; அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்திட வகை செய்ய வேண்டும் முதலான கோரிக்கைகளுக்காகத் தம் வாழ்நாளின் இறுதிநாள் வரை முழுமூச்சுடன் பாடுபட்டுக் கொண்டிருந்தார். பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ள வாசிப்பு இயக்கத்துக்கு முன்னோடி இவரே. தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் தேசியக் கல்விக் கொள்கை-2020 தீமைகள் குறித்துத் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருமுறை பதவி வகித்தவர்; பெண்ணுரிமைப் போராளி என்ற பல்துறை சார்ந்து இச்சமூக நலனுக்காக இயங்கிக் கொண்டிருந்தார். இன்றைய நினைவேந்தலில் அவருடன் செயல்பட்டவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து வசந்திதேவி அவர்கள் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது.
தாம் இறந்த பிறகும் தம் உடல் மருத்துவ மாணவர் ஆய்வுக்குப் பயன்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உடலைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குத் தானமாக அளித்துவிட்டார். இப்படிப்பட்ட ஆளுமை வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. முனைவர் வசந்தி தேவி அம்மாவின் நினைவைப் போற்றுவோம். இளந்தலைமுறை இவரது வாழ்க்கை வரலாறை அவசியம் வாசிக்க வேண்டும்.
அன்புடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.