ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது. திண்டிவனத்துக்கு அருகில், ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான். இந்த உண்மை சம்பவமே, இந்த நாவலின் அடிப்படை.
1995 ஆம் ஆண்டு கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில், இந்தக் குறுநாவல் வெற்றி பெற்றவுடன், பிரபலமானது ஒரு லட்சத்துக்கும் மேல் பிரதிகள் விற்பனை, எட்டு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு எனப் பல சாதனைகளைப் படைத்துள்ளது, இந்நூல்.
வகுப்பாசிரியருக்கு, அடிக்கடிச் சந்தேகம் கேட்கும் மாணவி ஆயிஷா பிரச்சினை ஆகின்றாள். அறிவியலின் அடிப்படையே ஏன், எதற்கு? என்று கேள்வி கேட்டு, அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதில் தானே அடங்கியுள்ளது?. ஆனால் நம் கல்விமுறை, கேள்வி கேட்க மாணவர்களை அனுமதிப்பதில்லை. கொடுத்திருக்கும் பாடத்தை, எந்தக் கேள்வியும் கேட்காமல், மனப்பாடம் பண்ணி தேர்வுத் தாளில் வாந்தியெடுப்பது மட்டுமே, அவர்களுடைய வேலை.
நம் மனப்பாடக் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையை விதைத்துப் பரவலான கவனத்தை ஏற்படுத்திய விதத்தில், ஆயிஷா மிக முக்கியமான புத்தகம். இது வெளிவந்த பிறகு, ஆசிரியரின் பெயரே, ‘ஆயிஷா நடராசன்’ என்றாகிவிட்டது.
20 பக்கங்களே கொண்ட இந்தக் குறுநாவலை, அவசியம் அனைவரும் குறிப்பாகக் கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்க வேண்டும்.
வகை | குறுநாவல் |
ஆசிரியர் | இரா.நடராசன் |
வெளியீடு | பாரதி புத்தகாலயம், சென்னை. (+91-8778073949) |
விலை | ரூ 14/- |