இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘முகில் அண்ணனும், நண்பர்களும்’ என்பது முதல் கதை. ‘இந்த உணவு எனக்குப் பிடிக்காது’ என்று சொல்வதும், அம்மாவிடம் தனக்காக மட்டும் புது உணவைச் சமைக்கச் சொல்லி அதிகவேலை வாங்குவதும் செய்யக்கூடாத செயல்கள்; உணவை வீணாக்கக் கூடாது; உணவின்றிப் பசியால் வாடும் பிறர்க்கு உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும் போன்ற சிறந்த கருத்துகளை வாசிக்கும் சிறார் மனதில் விதைக்கும் கதையிது.
‘சந்தனக்கூடு’ கதையும், ‘நெய்ச்சோறும் சர்க்கரைப் பொங்கலும்’ கதையும் மத நல்லிணக்கத்தை நுட்பமாகப் பேசும் கதைகள். ‘சந்தனக்கூடு கதையில் மதம் தாண்டி இரண்டு சிறுவர்க்கு இடையே நட்பு மலர்கிறது. இரண்டாவது கதை இரண்டு சிறுமிகளுக்கு இடையே நிலவும் மதம் தாண்டிய நெருக்கமான அன்பைப் பேசுகிறது.
‘ஆறாம் வகுப்பு -ஆ பிரிவு’ என்ற கதையில், அம்முவுக்கு இனிமையாகப் பாடக்கூடிய குரல்வளம் இருந்தும், தோல்வி பயம் காரணமாகப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தயங்குகிறாள். தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து முயன்றால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்ற உண்மையை அம்மு பாத்திரம் மூலம் இக்கதையை வாசிக்கும் சிறார் தெரிந்து கொள்வர்.
‘ராட்சத ராட்டினம்’ கதையில் குழந்தைகள் ராட்டினத்தில் ஏறிச் சுற்றும் போது, அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறங்க முடியாமல் தவித்த அனுபவத்தை விவரிக்கிறது.
‘அதிசய யூனிகார்ன்’ மாயாஜாலம் நிரம்பிய கதை. மாயப் பென்சிலால் உயிர் பெற்ற யூனிகார்ன் லேனாவிற்கு மாயப் பென்சிலைக் கொடுக்கிறது. லேனா தொடர்ந்து முயன்று ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு இன்னொரு அதிசய யூனிகார்னை உருவாக்குகிறாள். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய யூனிகார்ன் கதையிது.
நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், குப்பை மேலாண்மை குறித்தும் பேசும் கதை, ‘நெகிழி இல்லாத வீடு.’ ‘யானைக்குட்டிக்கு என்னாச்சி’ என்ற கதையில் துதிக்கை வெட்டுப்பட்ட குட்டியானைக்குச் செயற்கைத் துதிக்கை பொருத்துகிறார்கள் சிறுவர்கள். புதுமையான வித்தியாசமான கற்பனையில் உருவான கதையிது!
‘காட்டிற்கு ராஜாவான புலி’ சுயநலமான சிங்கத்தை ராஜா பதவியில் இருந்து தூக்கிவிட்டுக் காட்டுக்கு நன்மை செய்யும் புலியைத் தலைவராக்கும் கதை. இறுதியில் சிங்கமும் தன் தவறை நினைத்து வருந்தித் திருந்துகிறது. ‘இனியாவின் பள்ளி விடுமுறை’ புத்தகம் வாசிப்பதன் அவசியம் பற்றியும், நூலகப் பயன்பாடு பற்றியும் பேசுகிறது. 7-12 வயதினர்க்கான கதைகள்.
வகை | சிறார் கதைகள் |
ஆசிரியர் | கார்த்திகா கவின் குமார் |
வெளியீடு:- | நிவேதிதா பதிப்பகம், சென்னை-92 செல் 89393 87296. |
விலை | ரூ 80/-. |