குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலின் ஆசிரியர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் (Antoine de Saint-Exupery) (1900-1944) நினைவு நாள் இன்று!
உலகமுழுக்க குழந்தைகள் அவசியம் வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில் இடம் பிடிக்கும் நாவல்களில் ஒன்று, இவர் எழுதிய ‘குட்டி இளவரசன்’. 1943 ல் வெளியான இந்த பிரெஞ்ச் நாவல், 301 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், உலகமுழுக்க 140 மில்லியன் பிரதிகள் விற்பனையாகிச் சாதனை படைத்துள்ளது.
பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார். ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார். எழுத்தில் ஆர்வம் கொண்டு 1925 ல், தம் விமானத்துறை அனுபவத்தைப் பின்னணியாக வைத்து, முதல் நூலை வெளியிட்டார். நான்காண்டுகள் கழித்து, ‘Southern Mail’ எனும் நூலை எழுதினார். 1931ல் எழுதிய புத்தகம் ‘Night Flight’ பெரும் வெற்றி பெற்றது. விமான ஓட்டியாக வாழ்ந்த காலத்தில், எழுதிய முக்கியமான புத்தகம், ‘Wind, Sand and Stars’. உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter to a Hostage’, ‘The Little Prince.’
இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார். 1944 ஜூலை 31 ஆம் தேதி, கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து இவர் சென்ற விமானம், திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதனால் இவருக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை..
1998 ஆம் ஆண்டு இவர் பெயர் பொறித்த பிரேஸ்லெட் மத்தியதரைக்கடல் பகுதியில் மீனவர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இவர் பயணம் செய்த விமானத்தின் உடைந்து சிதறிய பாகங்கள் மீட்கப்பட்டன. எதிரி விமானத்தால் இவர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா, இயந்திரக்கோளாறா என்ற விபரங்கள் இன்றுவரை தெரியவில்லை.
இவரது ‘குட்டி இளவரசன்’ நாவலில் ஆசிரியரே கதை சொல்லியாக இருக்கின்றார். தம் ஆறாவது வயதில் , யானையை விழுங்கிய பாம்பு படத்தை வரைந்து, பெரியவர்களிடம் காட்டிய போது, அதைத் தொப்பி என்று அவர்கள் சொன்னதுடன், படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புவியியல், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களில் கவனத்தைத் திருப்புமாறு, புத்திமதி கூறினார்கள் என்றும், தாம் ஓவியம் எனும் மகத்தான கலையைக் கைவிட, அதுவே காரணமாயிற்று என்றும், வருத்தத்துடன் சொல்கிறார், ஆசிரியர்.
“பெரியவர்கள் ஒரு போதும், எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஓயாமல், அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது, குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கின்றது” என்று அவர் சொல்லியிருப்பது, பெரியவர்கள் அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்தக் கூடிய உண்மை. உலக முழுக்க, பெரியவர்களின் அடிப்படை பண்பு ஒரே மாதிரி தான் இருக்கின்றது! இது சிறுவர் நாவல் எனினும், பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என்பதற்கு, இது ஓர் உதாரணம்.
குட்டி இளவரசன் நாவலுக்கு இவரே படங்கள் வரைந்தாராம். 20 வயதிலிருந்து இந்தக் குட்டிப் பையனின் உருவத்தை ஆசிரியர் பல்வேறு தாள்களிலும், மேசை விரிப்புகளிலும் வரைந்து கொண்டேயிருப்பாராம். இந்தக் கதாபாத்திரம் எங்கிருந்து வந்தது என்று சிலர் இவரிடம் கேட்டபோது, “ஒரு நாள் நான் வெற்றுக் காகிதத்தைப் பார்த்த போது, அதிலிருந்த ஒரு குட்டி உருவம் என்னைப் பார்த்து, நான் தான் குட்டி இளவரசன் என்றது” என்று பதில் சொன்னாராம்.
1935 ஆம் ஆண்டு லிபியாவின் பாலைவனத்தில் இவர் ஓட்டிய விமானம் பழுதாகித் தரையிறங்கியது. இந்தக் கதையில் ஆசிரியர் ஓட்டிய விமானம் பழுதடைந்து, சகாரா பாலைவனத்தில் இறங்கி விடுகின்றது மனித நடமாட்டமே இல்லாத, அந்த இடத்தில் ஆசிரியர், வேறு ஒரு குட்டி கிரகத்திலிருந்து வந்த குட்டி இளவரசனைச் சந்திக்கிறார்.
“எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி, வரைந்து கொடு” என்கிறான் அவன். சில திருத்தங்களுக்குப் பிறகு, அவன் விரும்பியது போல், இவர் வரைந்து கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும், அவனுடைய கிரகத்தைப் பற்றியும், பல கிரகங்களுக்கு அவன் சென்று வந்த, பயணங்கள் பற்றியும், அறிந்து கொள்கிறார். தன் கிரகத்தில் ரோஜா கன்று போலவே, முளைக்கும் பவோபாப் மரக்கன்றுகளை, இடைவிடாமல் பிடுங்கி எரிய வேண்டும் என்கிறான் இளவரசன். ஏன் என்ற கேள்விக்கு,
“ஒரு பவோபாப் மரத்தை அழிப்பதில், காலம் தாழ்த்தினால், பிறகு என்றென்றும் அழிக்க முடியாது. அது கிரகம் முழுவதும், பரவிவிடும். வேர்கள் கிரகத்தை ஊடுருவித் துளைத்துவிடும்.” என்று பதிலிறுக்கிறான்.
பவோபாப் மரம் என்பது, ஹிட்லரின் நாசிசத்தைக் குறிக்கிறது, என்பது திறனாய்வாளர்களின் கருத்து. தற்காலத்தில் நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பாசிசத்தை இது குறிப்பதாகவும், நாம் எடுத்துக் கொள்ளலாம்.
யாராவது ஒருவனுக்காவது, தான் அரசனாக இருக்கிறோமே என்ற பெருமையில் இருக்கும் அரசன், தற்பெருமைக்காரன், குடிகாரன் புவியியலாளன், பிஸினஸ்மேன் எனக் குட்டி இளவரசன் பயணத்தில் சிலரைச் சந்தித்த பிறகு, அவனுக்குத் தோன்றும் உண்மை, “பெரியவர்கள் உண்மையிலேயே, விசித்திரமானவர்கள் தாம்”
“பழக்கப்படுத்திக் கொண்ட பொருட்களைத் தான், தெரிந்து கொள்ள முடியும்; மனிதர்களுக்கு இப்போதெல்லாம், எதையும் தெரிந்து கொள்ள நேரம் இருப்பதில்லை. தயார் செய்த பொருட்களையே, கடைகளில் வாங்குகிறார்கள். ஆனால் கடைக்கார்ர்கள் நண்பர்களாக இல்லாததால், மனிதர்களுக்கு நண்பர்களே இல்லை”.
“நீ விண்மீன் ஒன்றில் இருக்கும், ஒரு மலரைக் காதலிப்பாயானால், இரவில் ஆகாயத்தைக் காண்பது , இனிமையாக இருக்கும். எல்லா விண்மீன்களும் அப்போது பூத்துக் குலுங்கும்” என்பவை இதிலுள்ள சிறப்பான வாசகங்களில் சில.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த நாவலை, அவசியம் அனைவரும் வாசியுங்கள். இதுவே மறைந்த எழுத்தாளருக்கு, நாம் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி!
“It is only with the heart that one can see rightly; what is essential is invisible to the eye.”
Antoine de Saint-Exupery
மிகவும் சிறப்பான கட்டுரை. இவ்வளவு சிறந்த எழுத்தாளர் குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் குழந்தை இலக்கியத்துக்கான அவரது பங்களிப்பு அபாரம்.
கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா!
சிறப்பான கட்டுரை. மீண்டும் அந்துவானின் குட்டி இளவரசனைக் கொண்டாடுவோம்! வாழ்த்துகள்!
தங்கள் வருகைக்கும், சிறப்பான கட்டுரை என்ற பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்!
Your style is really unique compared to other folks
I’ve read stuff from. Many thanks for posting when you’ve got the opportunity,
Guess I will just bookmark this blog.
Thank you very much for your visit and valuable comments. Thank you for having bookmarked this blog also. Thank you once again.