இச்சிறுவர் கதைத் தொகுப்பில், மொத்தம் 20 கதைகள் உள்ளன.
‘புன்னகைக்கும் மரம்’ என்ற முதல் கதையில், மனிதர்கள் தம் தேவைகளுக்காக மரங்களை அழிப்பதையும், மரம் இல்லாவிட்டால் மனிதனால் இவ்வுலகில் வாழமுடியாது என்பதையும், ஒரு மரத்தின் வாயிலாகச் சிறுவர்க்குச் சொல்லியிருக்கின்றார் ஆசிரியர்.
‘குரங்கின் காற்றாடி’ என்ற கதையில், குரங்குகள் கயிற்றில் வஞ்சிரக் கோந்து, கண்ணாடி சில்லுத்தூள் ஆகியவற்றைத் தடவி, பட்டம் விடுகின்றன. பட்டம் அறுந்து, அதன் கயிறு ஒரு கரடியின் கழுத்தை அறுத்து விடுகின்றது. இக்கதை மூலம், கயிற்றில் கண்ணாடித்தூள் தடவிப் பட்டம் விடுவது உயிருக்கு ஆபத்து என்ற முக்கியமான கருத்து, சொல்லப் படுகின்றது. தேனீக்களைப் பற்றிய பல அரிய செய்திகளைத் தேன்கூடு கதையின் மூலம், தெரிந்து கொள்ள முடியும்.
குழந்தைகளுக்குப் பிரியமான காட்டு விலங்குகள் பற்றிய கதைகளும் இதிலுள்ளன. மரத்தின் பட்டைகளுக்கிடையில் உள்ள பூச்சி, புழுக்களைக் கொத்தித் தின்பதன் மூலம், மரங்கொத்தி மரங்களின் மருத்துவனாகச் செயல்படுகின்றது என்ற உண்மையை, ‘மரங்கொத்தி மனசு’ கதை மூலம் விளக்குகிறார் ஆசிரியர்.
இக்காலக் குழந்தைகளுக்கு மிகப்பிடித்த செல்போனால் விளையும் தீமைகள் குறித்தும், நூலகத்துக்குச் சென்று புத்தகம் வாசிப்பதன் நன்மைகள் குறித்தும், இதிலுள்ள சில கதைகள் பேசுகின்றன.
இயற்கையை நேசிப்பதன் அவசியத்தைச் சிறுவர்க்கு உணர்த்துவதோடு, அவர்களிடம் நற்பண்புகள் வளரவும், இந்நூல் உதவி செய்யும்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | கன்னிக்கோவில் இராஜா |
வெளியீடு | நிவேதிதா பதிப்பகம், சென்னை-92 செல் +91 8939387296 |
விலை | ரூ 110/- |