பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் எளிய மொழியில் ஏற்கெனவே 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் இந்த நூல் வெளியாகி உள்ளது. எளிய மொழி, சிறு சிறு வாக்கியங்கள், படங்கள்- ஆகியவை வாசிப்பு இயக்கச் சிறு புத்தகங்களின் வேர்கள்.
இதில் இரண்டு கதைகள் உள்ளன. முதல் கதை ‘மூன்று சக்கர சைக்கிள்.’ இதில் குகனும் காளத்தியும் நண்பர்கள். குகனுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறால் படிப்பு தடைபடுகிறது. பின்னர் காளத்தியின் முயற்சியால் மூன்று கால் சைக்கிளில் அவன் பள்ளிக்கு வருகிறான். தினமும் மேட்டில் சைக்கிளைத் தள்ளக் காளத்தி உதவி செய்கிறான். அதனால் தினமும் வகுப்புக்குத் தாமதமாகச் செல்கிறான். ஆசிரியர் அவனுக்குத் தண்டனை கொடுக்கிறார். முடிவில் என்ன ஆனது? என்பது மீதிக்கதை. சக நண்பர்களுக்குக் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதை.
‘பறக்கும் யானை’ என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அதீத கற்பனையுடன் கூடிய கதை. பூக்களிடம் ஆதிரா என்ன உதவி கேட்டாள்? பறக்கும் யானையில் ஏறி நிலாவுக்குச் சென்ற ஆதிரா மீண்டும் பூமிக்குத் திரும்பினாளா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
| வகை:- | சிறார் வாசிப்பு நூல் |
| ஆசிரியர்:- | உமையவன் |
| வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்,சென்னை-18 |
| விலை:- | ரூ 20/- |
