தலையங்கம் – டிசம்பர் 2025

book-image-pic

அன்புடையீர்! வணக்கம்.

49வது சென்னை புத்தகக்காட்சி-2026 ஜனவரி 7 முதல் 19 வரை சென்னை நந்தவனம் YMCA மைதானத்தில் நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பளர் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது. இந்நிகழ்வைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார்.

சென்னையைச் சுற்றியுள்ள பெற்றோர் அவசியம் உங்கள் குழந்தைகளைப் புத்தகக் காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன், வானம், நிவேதிதா, ஹெர் ஸ்டோரிஸ், நீலவால்குருவி, சுட்டி யானை போன்ற பதிப்பக அரங்குகளில் சிறுவர்களுக்கான நூல்கள் கிடைக்கும்.

ஆங்கில நூல்களை வாங்கிக் கொடுப்பதோடு தமிழ் நூல்களையும் வாங்கிக் கொடுக்க மறவாதீர்! தமிழ் நம் தாய்மொழி! ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளுக்குத் தமிழே வாசிக்கத் தெரியவில்லை. தமிழை நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது, நம் ஒவ்வொருவரின் கடமை. தமிழ்ச் சிறார் நூல்கள் அதிகளவில் விற்பனையானால் தான் பல புதிய பதிப்பகங்கள் சிறார் நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட முன்வருவார்கள்.

பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சிலரனும், கல்வியாளர் வே.வசந்திதேவி தலைவராக இருந்த பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து தமிழைச் சரியாக வாசிக்கத் தெரியாத குழந்தைகளுக்காகச் சிறார் வாசிப்பு நூல்களை வெளியிடுகின்றன. ஒவ்வொரு நூலின் விலை ரூ 20/-மட்டுமே. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அரங்கில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். தமிழ் வாசிப்பை மேம்படுத்திக் கொள்ள இந்த நூல்கள் உதவும். இவை கல்வியாளரும் பேராசிரியருமான ச.மாடசாமி அவர்களின் வழிகாட்டலில் உருவாகும் நூல்கள். இதுவரை 23 சிறார் வாசிப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புத்தகக் காட்சிக்கு மேலும் 7 நூல்கள் வெளியாக உள்ளன.    

உங்கள் குழந்தைகளின் பன்முக ஆளுமைத் திறன் வெளிப்படச் சிறு வயதிலேயே புத்தக வாசிப்பைத் துவங்க வேண்டும். எங்கள் சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களின் பரிந்துரை உள்ளது. அவற்றை வாசித்துப் பார்த்து உங்கள் குழந்தைகளின் ரசனைக்கேற்ப நூல்களைத் தேர்ந்தெடுக்க இயலும்.

ஆசிரியர்.

சுட்டி உலகம்.

Share this: