தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளரான முனைவர் வே.வசந்திதேவி அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுப்பட்டுள்ளன. ‘சக்தி பிறக்கும் கல்வி’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஏற்கெனவே வெளியிட்ட நூலில் ஐந்து புதிய கட்டுரைகள் சேர்த்துக் ‘கல்வி ஓர் அரசியல்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது.
வசந்தி தேவி அம்மையார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர், மனித உரிமைகள் கல்வி நிறுவனத் தலைவர், பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். கல்வி உரிமை, மனித உரிமை, விளிம்புநிலைச் சமூகங்களின் மேம்பாடு, பெண் விடுதலை, சூழல் பாதுகாப்பு எனப் பல தளங்களில் பணியாற்றியவர்.
இந்நூலுக்குப் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில், “வசந்திதேவி அவர்களின் மதிப்பீடுகளிலேயே மிகவும் நுட்பமான மதிப்பீடு என நான் கருதுவது, கல்வியின் மீது அவர் வைத்த நம்பிக்கை; கல்வி குறித்து அவர் வெளிப்படுத்தும் நம்பிக்கை. வசந்திதேவி வெறும் கருத்தாளர் அல்லர்; அவர் ஓர் இயக்கம். நம்பிக்கை அளிக்கும் ஒரு சக்தி” என்கிறார். அணிந்துரை எழுதியிருக்கும் கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் “அடிப்படையில் சமூகப் பார்வையும், சுயசிந்தனையில் உருவான கல்விக்கோட்பாடும் கொண்டவர்களே கல்வியாளர்கள். இந்த அடிப்படையில் வசந்தி தேவி அவர்கள் ஒரு சீரிய கல்வியாளர்” என்கிறார்.
‘சக்தி பிறக்கும் கல்வி’ என்ற கட்டுரையில், “குழந்தைகளுக்குச் சிந்திக்கக் கற்றுத் தருவதும், அவர்களிடம் பகுத்தறியும் திறமைகளையும், ஒன்றை உண்மையா பொய்யா, சரியா தவறா என ஆராயக்கூடிய திறமைகளையும் வளர்ப்பது தான் கல்வி. அதுவே அறிவியல். கிளிப்பிள்ளைகளாகப் பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டுவதல்ல. அறிவியல் பாடம் அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார் வசந்திதேவி. (பக் 49)
‘பாகுபாடு பாடமாகலாமா?’ என்ற கட்டுரையில், 1997ஆம் ஆண்டு மனித உரிமைக் கல்வியின் முக்கிய குறிக்கோள் பற்றியும், அதைப் பரிசோதனை முயற்சியாகச் சென்னை பள்ளிகளில் தொடங்கிப் பின் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்திய போது, அவர் பெற்ற அனுபவங்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
“மனித உரிமைக் கல்விக்கான கலைத்திட்டம் எவ்வாறு அமையவேண்டும்? ஆயிரக்கணக்கான நமது மக்கள் – குழந்தைகள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், குடிசைவாசிகள், மற்றோர் – அநீதிகள், உரிமை மறுப்புகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், பாகுபாடுகள், வன்முறைகள் ஆகியவற்றுக்குப் பலியாகின்றனர். இத்தகைய கொடூர, இதயமற்ற உலகை மாற்றுவதே மனித உரிமைக் கல்வியின் குறிக்கோள். இத்தகைய உலகை மாற்றும் பணி, தேசத்தின் உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட வகுப்பறையில் தான் தொடங்க முடியும் என்பதே, மனித உரிமைக் கல்வியின் நம்பிக்கை.” (பக் 89)
‘பயிற்று மொழி தமிழ்’ என்ற கட்டுரையில், நம் தாய்மொழியான தமிழ்வழிக் கல்வியின் அவசியம் குறித்துப் பேசுகிறார். “தாய்மொழி வழிக்கல்வியே இயற்கையானது என்பது நவீன அறிவின் முடிவு. கற்கும் மனதின் ஆளுமையை விரிக்கத் துணை நிற்பது தாய்மொழிவழிக் கல்வியே.” (பக் 101)
‘செயல்வழிக் கற்றல்: சிறந்த திட்டமும் தடுமாறும் செயலாக்கமும்’ என்ற கட்டுரையில் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்தும், போதனா முறையில் இருக்கும் போதாமைகள் குறித்தும் தம் கவலைகளைப் பகிர்ந்து அதற்கான தீர்வுகளைச் சொல்கிறார்:
“இந்திய வகுப்பறைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை; போதனா முறைகள் குழந்தைகளை மையமாகக் கொண்டவையல்ல. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறைக் கல்வி பயிலும் ஏழ்மையில் மூழ்கிய குடும்பத்துக் குழந்தைகள் என்பதால், அவர்களது மொழி, சமூக பொருளாதாரப் பின்னணியை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட போதனா முறைகள் தேவை” என்றும் “போதனா முறை குழந்தையை மையமாகக் கொண்டதாக, குழந்தை ஆர்வத்துடன் கற்றுச் சுயசிந்தனையும் படைப்பாற்றலும் மிக்க வளர்ச்சி பெற உகந்ததாக இருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார்.
‘வகுப்பறை வன்முறைகள்’ என்ற கட்டுரை பள்ளிகளில் குழந்தைகள் அனுபவிக்கும் அடி,உதை போன்ற கொடுமைகளோடு, ஆசிரியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் கொடுமைகள் பற்றியும் பேசுகின்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய போது பாடத் திட்டத்தில் அவர் கொண்டு வந்த புரட்சிகர மாற்றங்கள் குறித்தும், பெண்ணுரிமை குறித்து விழிப்புணர்வூட்ட அவர் எடுத்த முற்போக்கு நடவடிக்கைகள் குறித்தும் ‘உயர்கல்வி நிலையங்கள் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்குத் தளம் அமைக்க இயலுமா?’ என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றியும். அதனால் ஏழை எளிய குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தும் சில கட்டுரைகள் விளக்குகின்றன. பல்வேறு கல்விக்கொள்கைகள், கல்வி தொடர்பான கமிஷன் அறிக்கைகள், சட்டத் திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள உதவும் கல்வி வரலாற்று நூல். கல்வியாளர்களும், ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய நூல்.
| வகை | கல்விசார் நூல் |
| ஆசிரியர் | வே.வசந்தி தேவி |
| வெளியீடு:- | பாரதி புத்தகாலயம், சென்னை-18 செல் 9444960935 |
| விலை | ரூ 240/-. |
