தலையங்கம்-நவம்பர்-2025

childday_pic

அனைவருக்கும் அன்பு வணக்கம். நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள். அவர் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும்  குழந்தைகளுக்காகச் சிறுகதை, விடுகதை விளையாட்டு, விலங்கியல் கட்டுரை, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கேள்வி பதில் போன்ற பல வகைமைகளில் எழுதியுள்ளார்.

நவம்பர் 8 தமிழ்நாட்டின் பிரபல கல்வியாளர் வே.வசந்திதேவி அம்மாவின் பிறந்த நாள். தம் வாழ்நாள் முழுக்க ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபட்ட அவரது பிறந்த நாளை இந்தாண்டு முதல் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் வசந்திதேவி வாசிப்பு தினம் எனக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதன்படி இதன் இயக்கத் தொண்டர்கள் அன்று தமிழ்நாடு, புதுவையில் பல்வேறு மையங்களில் குழந்தைகளை வாசிக்க வைத்து இத்தினத்தைக் கொண்டாடினர்.

இன்றைய குழந்தைகளே நாளைய குடிமக்கள். எனவே அவர்கள் அனைவரும் தரமான இலவசக் கல்வி, உடல் ஆரோக்கியம், சம வாய்ப்பு ஆகியவை பெற்று மனமகிழ்ச்சியுடனும் உடல்நலத்துடனும் வளர்ந்தால் தான் நாடு செழிக்கும். அவர்களது குழந்தைப்பருவம் இனிமையாக அமையும்படிப் பாதுகாப்பதும், அவர்கள் எதிர்காலத்தை வளமாக்குவதும் நம் பொறுப்பு.

பெண்சிசுக் கொலை, குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வகையான குற்றங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய குற்றங்களைப் புரிவோர்க்குக் கடுமையான தண்டனையளிப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் அரசின் தலையாய கடமை. குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்டு அவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வியளித்துப் பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பிரகாசமான எதிர்காலம் அமைய பாடுபட வேண்டியது நம் எல்லோரின் கடமை! அட்வான்ஸ் குழந்தைகள் தின வாழ்த்துகள்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.  

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *